இன்றைய இறைமொழி
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2026
புனித ஜான் மரிய வியான்னி, மறைப்பணியாளர், நினைவு
எசே 3:16-21. மத் 9:35-10:1 (நினைவுக்கு உரியவை)
பரிவுநிறை வியான்னி
இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
‘எளிய வழியில் புனிதம்’ என்றும், ‘வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன’ என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.
நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (னுரடிரஙரந) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார்.
மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், ‘கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!’ என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.
வியான்னியிடம் அருள்பணியாளர்கள் கற்கும் பாடங்கள் எவை?
- அருள்பணியாளர் அடையாளம் போதும்
‘நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!’ – இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் – செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் – அதுவே போதும். தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.
2. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு
வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஒவ்வோர் அருள்பணியாளரும் இலக்குத் தெளிவுடன் இருக்க வேண்டும் என நம்மை அழைக்கின்றார்.
3. மாற்றம் கண்முன்னே நடக்கும்
மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேல் இறைவாக்கினரை இஸ்ரயேல் வீட்டுக்குக் காவலனாக நியமிக்கிறார். அவர்களுடைய மனச்சான்று போலச் செயல்பட்டு, நல்வழியில் அழைத்துச் செல்வது இறைவாக்கினரின் பணியாக இருந்தது. வியான்னி ஆர்ஸ் நகரத்தின் மனச்சான்று போலச் செயல்பட்டு அந்நகர மக்களை எச்சரித்து வழிநடத்தினார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவுள்ளம் வெளிப்படுகிறது. மேலும், அறுவடைக்குத் தேவையான வேலையாள்களின் பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. அறுவடை மிகுந்திருந்த தன் காலத்தில் நம்பிக்கைக்குரிய வேலையாளாகப் பணியாற்றினார் வியான்னி.
ஆண்டவராகிய கடவுளின் பரிவுள்ளத்தை ஒப்புரவு அருளடையாளம் வழியாக மக்களுக்குக் காட்டியவர் வியான்னி.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment