இன்றைய இறைமொழி
புதன், 16 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 24-ஆம் வாரம்
1 கொரி 12:31-13:13. லூக் 7:31-35
விதிமுறை மாற்றம்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சமகாலத்தில் குழந்தைகள் நடுவே இருந்த விளையாட்டு ஒன்றை உருவகமாகக் கையாண்டு, தம்முடைய சமகாலத்தவரின் மனப்பாங்கை எடுத்தியம்புகின்றார்.
வீதியில் இரு புறங்களிலும் குழந்தைகள் நின்றுகொள்வர். ஒரு குழுவினர் செய்வதை மறு குழுவினர் செய்ய வேண்டும். ‘குழல் ஊதும் போது குழல் ஊத வேண்டும்,’ ‘கூத்தாடும் போது கூத்தாட வேண்டும்’ – நம்ம ஊர்ல ‘ஜோடி போடுவது’ மாதிரி. ஆனால், விதிமுறைகளை மாற்றி, குழல் ஊதியவர்களைப் பார்த்து, ‘கூத்தாடவில்லை,’ ஒப்பாரி வைத்தவர்களைப் பார்த்து, ‘அழவில்லை’ என்று சொல்வது, திடீரென்று தங்கள் விதிமுறைகளை மாற்றிக்கொள்வதாக இருக்கிறது.
இயேசுவின் சமகாலத்தவர் திருமுழுக்கு யோவான் வந்தபோது அவரை ஓர் அளவுகோலால் அளந்தார்கள். ஆனால், இயேசு வந்தபோது அவர்கள் அளவுகோலை மாற்றிக்கொண்டனர்.
ஆக, தங்களுடைய விருப்பம் போல விதிமுறைகளை மாற்றி, அதில் மற்றவர் பொருந்தவில்லை என்று சாடுகின்றனர்.
கிரேக்க புராணத்தில் இதே போன்ற கதை ஒன்று உண்டு. பார்க்கிடிஸ் என்ற திருடன் தன்னுடைய அறையில் ஒரு கட்டில் வைத்திருந்தான். தான் திருடிய நபர்களை அதில் தூங்குமாறு சொல்வான். தூங்குபவர் கட்டிலுக்குச் சரியாக இருந்தால் அவருக்குப் பரிசு கொடுத்து அனுப்பி விடுவான். அந்த நபர் கட்டிலைவிட சிறியவராக இருந்தால் கட்டிலில் சேரும் அளவிற்கு இழுப்பார். அதில் அந்த மனிதர் இறந்துவிடுவார். கட்டிலை விடப் பெரியவராக இருந்தால் தலை அல்லது காலை வெட்டிக் கொன்றுவிடுவார்.
ஆக, நாம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு விதிமுறை வைத்திருக்கிறோம். அந்த விதிமுறையின்படி அவர் ஆட வேண்டும் என நினைக்கிறோம். அடுத்தவரின் ஆட்ட விதிமுறைகள் நமக்குப் பிடிப்பதில்லை. நம் விதிமுறைகளின்படியே அவர் ஆட வேண்டும் என நினைக்கிற நாம், அவர் நன்றாக ஆடினாலும், திடீரென்று விதிமுறைகளை மாற்றி அவரை வெளியே அனுப்புகின்றோம்.
அவரை அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும், ‘ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று’ என்கிறது நற்செய்தி.
இயேசுவையும் யோவானையும் சிலர் இப்படி வெளியேற்றினாலும் பலர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்ப வாழ்ந்தனர்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘அன்புக்குப் பாடல்’ என்னும் பகுதியை எழுதுகிறார் பவுல். கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்குகிற பவுல், திருமடலை நிறைவு செய்யுமுன் முதன்மையான மதிப்பீடாகிய அன்பை முன்மொழிந்து அதன்படி அவர்கள் நடக்குமாறு அறிவுறுத்துகிறார்.
‘அன்பு அனைத்தையும் நம்பும்’ என்கிறார் பவுல். இயேசுவின் சமகாலத்தவர் அவரை நம்புவதற்கு இடறல்பட்டார்கள். ‘நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்!’ என்கிறார் பவுல். அறிவைவிட அன்பே நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும் என்பதும் இயேசுவின் அறிவுரை.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment