இன்றைய இறைமொழி. வெள்ளி, 18 செப்டம்பர் 2026. உள்ளடக்கிய சீடத்துவம்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 18 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 24-ஆம் வாரம்
1 கொரி 15:12-20. லூக் 8:1-3

உள்ளடக்கிய சீடத்துவம்

இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடன் பயணித்த பெண்கள் மற்றும் அவர்களுடைய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். மற்ற நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத ஒரு குறிப்பை லூக்கா தன் நற்செய்தியில் பதிவு செய்கிறார்: ‘பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள். அவர்கள் தங்களை உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.’ இதைச் சொல்வதற்கு சற்று முன்னர், ‘பன்னிருவரும் அவருடன் இருந்தனர்’ என எழுதுகிறார் லூக்கா.

பன்னிருவரும் இயேசுவுடன் இருந்ததுபோல, சில பெண்களும் இயேசுவுடன் இருக்கிறார்கள்.
மாற்கு நற்செய்தியைப் பொருத்தவரையில், சீடத்துவம் என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம். அவரோடு இருத்தலும், அனுப்பப்படுதலுமே சீடத்துவத்தின் இரு பணிகள். பன்னிரு திருத்தூதர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள், இயேசுவால் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
லூக்கா நற்செய்தியாளர் அதே குறிப்பை எடுத்துக்கொண்டு, ‘திருத்தூதர்களை’ பன்னிருவர் என அழைப்பதன் வழியாக அவர்கள் இயேசுவோடு இருந்தார்கள், இயேசுவால் அனுப்பப்பட்டார்கள் என முன்மொழிகிறார். சற்றே ஒரு படி மேலே போய், இயேசுவோடு இருந்த பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார்கள். இதுவே அவர்களுடைய திருத்தூதுப் பணி.

இயேசுவைப் பின்பற்றிய பெண்கள் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார் லூக்கா. இவர்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல, மாறாக, பணியில் பங்கேற்பாளர்கள். இயேசுவுக்கு ஆன்மிக அளவிலும், பொருள் அளவிலும் துணைநின்றார்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இறந்த காலம் இருந்தது. அந்த இறந்தகாலத்திலிருந்து அவர்கள் விடுபட்டிருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் விடுதலை பெற்ற பெண்கள், ஏழு பேய்களிடமிருந்து விடுபட்ட மகதலா மரியா என ஒவ்வொருவருக்கும் ஓர் இறந்தகாலம் இருந்தது. இயேசுவின் பரிவாலும் இரக்கத்தாலும் அவர்கள் மாற்றம் பெற்றார்கள்.

இவர்கள் தாராள உள்ளம் கொண்டவர்களாக இருந்தார்கள். இயேசுவின் பணிகளையும் பயணங்களையும் செலவினங்களையும் தங்கள் தாராள உள்ளத்தால் தாங்கிக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களுடைய வாழ்வில் இயேசு ஏற்படுத்திய மாற்றத்திற்கான கைம்மாறாகவோ, அல்லது நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் அடிப்படையாலோ அவ்வாறு செய்தனர்.

இவர்கள் இயேசுவின் சொற்களுக்கு வெறுமனே செவிமடுத்து நகர்ந்து செல்லவில்லை. மாறாக, தங்கள் நற்செயல்களால் அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்தார்கள்.

யாருடைய கருத்துக்காகவும், விமர்சனத்துக்காகவும் உட்பட்டு தங்களின் வாழ்க்கையின் போக்கை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சமூகத்தில் ரபிக்களைப் பெண்கள் பின்பற்றுவது ஏற்புடையது அல்ல எனக் கருதப்பட்டாலும் அவர்கள் துணிவுடன் செயல்பட்டார்கள் பயந்து பின்வாங்கவில்லை.

சீடத்துவம் என்பது பாலினத்தையும் சமூக நிலையையும் பழைய வாழ்க்கையையும் சார்ந்தது அல்ல, மாறாக, அவற்றைக் கடந்தது என்பதை இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். தம்மேல் அன்புகூறும் நம்பிக்கை கொள்ளும் அனைவரையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். சீடத்துவம் என்பது தனிநபர் வாழ்வு மாற்றத்தையும் கடவுளின் அரசில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவர்களாக இருந்தார்கள் இவர்கள்.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

(அ) சீடத்துவம் என்பது பாலினத்தோடு தொடர்புடையது அல்ல. அது பாலின பேதம் அற்றது. அல்லது இரு பாலினங்களையும் உள்ளடக்கிக்கொள்வது.பெண்களின் பங்கேற்பு நம் வாழ்வுக்கும் பணிக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். அவர்கள் செய்கிற பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கொடுத்துக்கொண்டே இருப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.

(ஆ) ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை நிலையில் சீடத்துவத்தை ஏற்க முடியும்.

(இ) இயேசுவின் சீடத்துவம் தனிநபர் மாண்பைப் போற்றுவது. பன்னிருவரின் பெயர்களை முன்னர் குறிப்பிடுகிற லூக்கா, இங்கே பெண் சீடர்களுடைய பெயரையும் குறிப்பிடுவதன் வழியாக அவர்களுடைய மாண்பை உயர்த்துகிறார். ஆக, பெண்களின் மாண்பு இங்கே போற்றப்படுகிறது.

(இ) இப்பெண்கள் போல நாமும் தாராள உள்ளம் கொண்டவர்களாக நம் ஆற்றல், நேரம், பொருள் ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

(ஈ) நம் எப்படி இருந்தோம் அல்லது இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதே கடவுள் நம்மிடம் விரும்புவது என்பதை உணர்தல் வேண்டும்.

(உ) சீடத்துவம் என்பது வெறும் சொற்களில் அல்ல, மாறாக, செயல்களில் அடங்கியுள்ளது என்பதை அறிதல் வேண்டும்.’பணிவிடை புரிதல்’ என்பதை ‘அடிமையுணர்வு’ என்னும் ஆர்க்கிடைப்பின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. ‘பணிவிடை’ என்பது தாழ்வான செயல் அல்ல, மாறாக, அது ஒரு மதிப்பீடு. ‘திருத்தொண்டு ஆற்றுதல்’ என்னும் பொருள்தரக் கூடிய ‘டியாகோனியா’ என்னும் சொல்லையே லூக்கா இங்கே பயன்படுத்துகிறார். தங்கள் உடைமைகளைக் கொண்டு இவர்கள் பணி செய்கிறார்கள் என்னும் லூக்காவின் குறிப்பு இவர்கள் கொண்டிருந்த பகிர்ந்த உள்ளத்தையும் குறிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், இறந்தோர் உயிர்ப்பு என்னும் தலைப்பில் கொரிந்து நகர மக்களோடு உரையாடுகிற பவுல், இயேசுவின் உயிர்ப்பே அவர்களுடைய நம்பிக்கையின் அடித்தளம் என்பதை எடுத்துரைக்கிறார்.
பெண்கள் பற்றிய இயேசுவின் பார்வை நம்மை வியக்கவைக்கிறது. ரபிக்கள் பெண்களோடு பொதுவில் உரையாடுவதே தவறு என்று வழங்கப்பட்ட சமூகத்தில் அவர்களைத் தமக்குத் திருத்தொண்டு ஆற்றுபவர்களாக ஆற்றல்படுத்துகிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment