இன்றைய இறைமொழி. வியாழன், 17 செப்டம்பர் 2026. இரண்டு வகை அன்பு

இன்றைய இறைமொழி
வியாழன், 17 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 24-ஆம் வாரம்
1 கொரி 15:1-11. லூக் 7:36-50

இரண்டு வகை அன்பு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கு இரண்டு பேர் விருந்தோம்பல் செய்கிறார்கள். பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்கிறார். இயேசுவை ஓர் இறைவாக்கினர் எனவும், போதகர் எனவும் ஏற்றுக்கொள்ளும், அறிக்கையிடும் அவருடைய விருந்தோம்பலில் சில பண்புகள் குறைவுபடுகின்றன என்று சுட்டிக்காட்டுகிற இயேசு, நறுமணத் தைலம் முழுவதையும் இயேசுவின் காலடிகளில் கொட்டிப் பூசுகிற பெண்ணின் விருந்தோம்பலைப் பாராட்டுகிறார் இயேசு.

பரிசேயருடைய விருந்தோம்பல் வெளிப்புறத் தோற்றத்திற்காக அமைந்துள்ளது. போதகர் ஒருவரைத் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்வதை பரிசேயர்கள் மதிப்புக்குரிய செயலாகக் கருதினார்கள். இயேசுவை அவர் அவருடைய இல்லத்தில் ஏற்றாலும், இயேசுவைப் பற்றிய சில முற்சார்பு எண்ணங்களையும் அவர் கொண்டிருக்கிறார். மேலும், விருந்தோம்பலில் கணக்குப் பார்க்கிறார்.

நிகழ்வில் விடுகதை ஒன்றை வழங்குகிற இயேசு, ‘அதிகமாக மன்னிப்பு பெறுபவர் அதிகமாக அன்பு செய்வார்’ என்றும் மொழிகிறார்.

பரிசேயர் இயேசுவைப் போதகராகவும் இறைவாக்கினராகவும் ஏற்றுக்கொள்ள, அந்தப் பெண்ணோ அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்.

பரிசேயர் தன்னையும் தன் செயல்பாடுகளையும் நியாயப்படுத்தினார். பெண்ணோ இயேசுவின் முன்னிலையில் தம்மையே வெறுமையாக்கினார்.

பரிசேயரின் விருந்தோம்பல் வெளிப்புற சமூக அங்கீகாரம் சார்ந்ததாக இருந்தது. பெண்ணின் விருந்தோம்பல் உள்புற மனமாற்றம் சார்ந்ததாக இருந்தது.

நிகழ்வின் இறுதியில், ‘உமது நம்பிக்கை உம்மை மீட்டது. அமைதியுடன் செல்க!’ என்று பெண்ணிடம் சொல்கிறார் இயேசு. கடவுளைச் சந்திக்க வருகிற நம் உள்ளம் அமைதியுடன் சென்றால் மட்டுமே நம்முடைய கடவுளன்பு சிறப்பானது. நம்மையும் மற்றவர்களையும் தீர்ப்பிட்டுக்கொண்டே இருக்கிற உள்ளம் அமைதியை இழக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், தான் கொரிந்து நகர மக்களுக்கு அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்துகிறார் பவுல். தன் நற்செய்திப் பணியில் விளங்கிய தற்கையளிப்பையும் தியாகத்தையும் எடுத்துக் கூறி நற்செய்தி அறிவிப்பதில் உள்ள மனப்பாங்கின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment