இன்றைய இறைமொழி
செவ்வாய், 8 செப்டம்பர் 2026
கன்னி மரியாவின் பிறப்பு, விழா
மீக்கா 5:2-5 (அ) உரோ 8:28-30. மத் 1:1-16, 18-23
கடவுள் நம்முடன்!
இன்றைய அன்னை கன்னி மரியாவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். கீழைத் திருஅவையின் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்க நாள் இதுவே. அவர்களைப் பொருத்தவரையில் மரியாவின் பிறப்புடன் (செப் 8) தொடங்குகிற திருவழிபாட்டு ஆண்டு மரியாவின் விண்ணேற்றத்துடன் (ஆகஸ்ட் 15) நிறைவுபெறுகிறது. திருத்தந்தை முதலாம் செர்ஜியு அவர்கள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைத் திருஅவையின் திருவிழாவாக ஏற்கிறார்.
கிறிஸ்துவின் மானிடப் பிறப்பை ஒட்டிய நபர்களையும் நிகழ்வுகளையும் பெருமைப்படுத்தும் பின்புலத்தில் தோன்றியதே அன்னை கன்னி மரியாவின் பிறப்பு பெருவிழா. ஆகையால்தான், மரியாவின் பிறப்பு விழாவில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை நற்செய்தி வாசகமாக வாசிக்கிறோம். மரியா வணக்கம் அனைத்தும் இயேசுவை வணங்குவதற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் நோக்கம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பல்வேறு வகைகளில் மாறுவதற்காக, பல்வேறு நபர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏந்திப் பிறக்கிறது.
கன்னி மரியாவின் பிறப்பு வழியாக கிறிஸ்துவின் பிறப்பு சாத்தியமானது. ‘கடவுள் நம்மோடு!’ என்னும் செய்தியை கிறிஸ்துவின் பிறப்பு நமக்குக் கொண்டு வந்தது.
(அ) சிறியவற்றிலிருந்து பெரிய மாட்சிக்கு
இன்றைய முதல் வாசகம் (மீக்கா), இறைவாக்கினர் மீக்கா வழியாக பெத்லகேம் ஊர் பெறக்கூடிய மாட்சியை முன்னறிவிக்கிறது. தாவீது அரசரின் ஊர் பெத்லகேம். தாவீதின் வழிமரபினராக வரக்கூடிய மெசியாவின் பிறப்பால் அவருடைய ஊர் மாட்சி பெறுகிறது. சிறிய ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு பெரிய மாட்சியைத் தருகிறார் கடவுள்.
(ஆ) அனைத்திலும் ஒத்துழைக்கிற கடவுள்
‘கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அவரது திட்டத்துக்கு ஏற்ப அழைக்கப்பட்டவர்களோடு அனைத்திலும் கடவுள் ஒத்துழைப்பதை’ எடுத்துரைக்கிறார் பவுல் (மற்றொரு முதல் வாசகம், உரோமையர்). இங்கே கடவுளுடைய அருள் ஒரு பக்கம், அந்த அருளுக்கேற்ப மனிதர்களின் செயல்பாடு இன்னொரு பக்கம் என்று அருளும் பணியும் இணைந்து செல்வதைப் பார்க்கிறோம். அன்னை கன்னி மரியா அருள்மிகப் பெற்றவராக இருந்தார். அதே வேளையில் இறுதிவரை இறைத்திட்டத்திற்குத் தம்மையே கையளித்தார்.
(இ) தலைமுறைகள் தாண்டிய பேரன்பு
மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகிற இயேசுவின் தலைமுறை அட்டவணையை நற்செய்தி வாசகமாக வாசிக்கிறோம். இயேசுவை ‘தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன்’ என்னும் இரண்டு தலைப்புகளால் அழைக்கிறார் மத்தேயு. தலைமுறை அட்டவணையில் உள்ள ஒவ்வொரு நபரும் பின்னோக்கிப் பார்க்கும்போது மாட்சி பெற்றவராக இருக்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் தம் வாழ்க்கையை முடித்துக்கொண்டாலும், கிறிஸ்து நிகழ்வை முன்நிறுத்திப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் முதன்மையானவராக மாறுகிறார். நம் வாழ்க்கையை நாம் தனிப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் பின்நோக்கிப் பார்க்கும்போது ஒரு மரம் போல, பல கிளைகளாக நாம் இணைந்து நிற்கிறோம்.
வலுவற்றோரும் தலைமுறை அட்டவணையில் இடம் பெறுகிறார்கள். கடவுளின் பார்வையில் அனைவருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு.
நற்செய்தி வாசகத்தின் இறுதியில் யோசேப்பிற்குக் கனவில் தோன்றுகிறார் தூதர். யோசேப்பு போல நாமும் வாழ்வின் கேள்விகளுக்கு விடை இல்லாமல் நிற்கிறோம். அப்போது கடவுள் நம் உள்ளத்தின் மௌனத்தில் பதில் தருகிறார்.
நம் வாழ்வின் நோக்கத்தை நாம் அறியவும், நம் வாழ்வை நாம் முழுமையாக வாழவும் நம்மை அழைக்கிறது அன்னை கன்னி மரியாவின் பிறப்பு நாள்.
குழந்தைகளுக்காக, பெண் குழந்தைகளுக்காக சிறப்பாக இன்றைய நாளில் மன்றாடுவோம். ஒவ்வோர் உயிரும் பல உயிர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைத் தன்னகத்தே கொண்டு பிறக்கிறது. எந்நிலையிலும் மானிட உயிரைக் காக்கவும், வளர்க்கவும், மேன்மைப்படுத்தவும் துணைநிற்போம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment