இன்றைய இறைமொழி. ஞாயிறு, 6 செப்டம்பர் 2026. உறவில் வெற்றிகொள்தல்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 6 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு
எசே 33:7-9. உரோ 13:8-10. மத் 18:15-20

உறவில் வெற்றிகொள்தல்

மூன்று உருவகங்கள் அல்லது கதைகளோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

(அ) தென்னை மரம் உருவகம் – உறவுகள் வளர்வது தென்னை மரம் வளர்வது போல. மிக மெதுவாக நடக்கும் நிகழ்வு. நீண்டகால முதலீடு – நேரம், ஆற்றல், பணம். உடைவது தேங்காய் விழுவது போல. சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. திருமண உறவு, குடும்ப உறவு – சகோதர, சகோதரிகள், நட்பு, பணித்தளம், பங்கு, மறைமாவட்டம், சமூகம். சில நேரங்களில் உறவுகள் முறியும்போது நாம் பெருமையும் பாராட்டுகிறோம். நாம் சாதித்தாக நினைக்கிறோம். உணர்ச்சிவயப்படுகிறோம்.
 
(ஆ) கடந்த 15 நாள்களுக்கு முன்னர் – இத்தாலி செய்தித்தாளில் – செத்திமானா – கட்டுரை – மறைமாவட்டத்தில் ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்குமான உறவு – கீழ்ப்படிதல் வாக்குறுதி பற்றிய ஒரு சிறிய பிரச்சனை – நிகழ்வின் இறுதியில் அருள்பணியாளர் தன் குருத்துவத்தை விட்டு தானாகவே விலகுகிறார். கட்டுரை இப்படி நிறைவு பெறுகிறது: ‘மறைமாவட்ட ஆயர் திருஅவைச் சட்டத்தைக் காத்துக்கொண்டார், ஆனால், ஒரு நல்ல மேய்ப்பரை, குருவை, மனிதரை இழந்துவிட்டார்.’
 
(இ) திருமண உறவு – மணமுறிவு – கடினமான சொல் – உணர்வுகள், காயங்கள் நிறைந்த சொல். மன்னிக்க முடியாத நிலை. பிரமாணிக்கமின்மை. திருஅவைச் சட்டமும் அரசுச் சட்டமும் நம் பிரச்சனைகளில் நமக்குத் துணை நிற்காது. நம் குடும்பத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது. நம் உறவினர்கள் திருமண நிகழ்வுக்கு வருவார்கள். திருமண வாழ்வை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.

உறவு நிலைகளில் உள்ள நம் மனப்பான்மையை, ‘எனக்கும் தோல்வி – உனக்கும் தோல்வி,’ ‘எனக்குத் தோல்வி – உனக்கு வெற்றி,’ ‘எனக்கு வெற்றி – உனக்குத் தோல்வி,’ ‘எனக்கும் வெற்றி – உனக்கும் வெற்றி’ என்று நான்காக வகைப்படுத்தி, நான்காவது மனப்பான்மையே மேன்மையான மனப்பான்மை, அதையே நாம் தேர்ந்துகொள்ள வேண்டும் என அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (மத் 18:15-20), மத்தேயு நற்செய்தியின் ‘குழுமப் பேருரை அல்லது திருஅவைப் பேருரையிலிருந்து’ எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கத் திருஅவையில் ‘ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்’ நம்பிக்கையாளர்கள் இருந்தார்கள் என வாசிக்கிறோம். ஆனால், மனித ஈகோக்கள் இணைந்து வாழ்வது எளிதல்ல. குழுமத்தில் பிரச்சனை எழும்போது அதை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு (மத்தேயு).

‘உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்’ என்று அறிவுரையைத் தொடங்குகிறார் இயேசு. குழுமத்தில் உள்ள ஒருவர் பாவம் செய்தாலும் அவர் சகோதரர் அல்லது சகோதரியே. அவருக்காக நாம் செயல்பட வேண்டும். அவருக்கும் நமக்குமான உறவுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.
 
முதல் படி: நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது.
 
நண்பர்களிடம் அல்ல, சமூக ஊடகத்தில் அல்ல, வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் அல்ல, உறவினர்களிடம் அல்ல. மாறாக, அந்த நபரிடம் நாம் தவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். எதற்காக? உண்மையை, மாண்பை, உறவை, இரகசியத்தன்மையை காப்பதற்காக.
 
அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் – அவரை வெற்றிபெற்றீர்கள் – கிரேக்கச் சொல் – கெர்தைனோ – விலையுயர்ந்த ஒன்றைப் பெறுவது – சகோதரர் வீழ்த்த வேண்டிய எதிரி அல்ல, மாறாக, வெற்றிகொள்ளப்பட வேண்டியவர்.
 
இரண்டாவது படி: ஒன்று அல்லது இரண்டு பேர் – இச 19:15. இருவருடைய சான்று – இருவர் இருவராக, உயிர்ப்பு நிகழ்வு – பேதுருவும் யோவானும் – ஒப்புரவுக்கான அடுத்த வாய்ப்பு – இரண்டு பேருக்கும் சப்போர்ட்.
 
இரண்டு எக்ஸ்ட்ரீம் தவிர்க்க வேண்டும்: மௌனமாக இருப்பது. அனைவருக்கும் அறிவிப்பது.
 
மூன்றாவது படி: திருஅவையிடம் சொல்லுங்கள். பவுல் – திருஅவைக் குழுமம் உறவைச் சரிசெய்யும் தளம் – கொரிந்து நகர் – எக்ளேசியா – பேதுருவின்மேல் கட்டப்பட்ட திருச்சபை – அதே சொல் – ஒன்றிப்பையும் உறவுப் புதுப்பித்தலையும் ஏற்படுத்தும் தளம்.

தொடர்ந்து, ‘திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்’ என்கிறார் இயேசு.
 
திருஅவையின், குழுமத்தின் அதிகாரம் இங்கே வெளிப்படுகிறது. மத்தேயு குழுமத்தின் பிரச்சனையாக இதைப் பார்க்க வேண்டும். வெறுப்புக்கான வாய்ப்பாகப் பார்க்கக் கூடாது. இப்படி அச்சத்தை ஏற்படுத்தி அப்படியாவது அவர் திரும்பிவிட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இயேசுவிடம் இருக்கிறது. ஏனெனில், அகுஸ்தினார், மாக்கியவெல்லி குறிப்பிடுவது போல, ‘அன்புக்குப் பணியாதவார்கள், அச்சத்துக்குப் பணிவார்கள்.’

‘மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்’ என்கிறார் இயேசு. பேதுருவிடம் கூறப்பட்ட சொற்கள் இவை.

மண்ணுலகில் நாம் மனமொத்துக் கேட்கும் எதையும் பெற்றுக்கொள்கிறோம். நம் கூடி வருதலில் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுகொள்கிறோம். இதையே திபா 133-இல், ‘சகோதரர்கள் கூடி வாழ்வது எத்துணை நன்று!’ என்று வாசிக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசே 33:7-9), ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலிடம், ‘மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும்’ என்கிறார். ‘வாட்ச்மேன்’ அல்லது ‘காவலாளி’ என்னும் உருவகம். அரண்சூழ்ந்த நகரத்தைக் காவல் காக்கிற காவலர் நகருக்கு வரும் ஆபத்தைக் கண்டுணர்ந்து மக்களை எச்சரிக்க வேண்டும். மக்கள் அதற்கேற்ப ஒளிந்துகொள்வார்கள், அல்லது தப்பித்துக்கொள்வார்கள் – இவ்வாறாக, பதிலிறுப்பு செய்வர். வரப்போகும் ஆபத்தைத் தடுப்பதோ, மக்களைக் காப்பாற்றுவதோ காவலாளியின் வேலை அல்ல. ஆனால், இந்த வேலையை அவர் சரியாக் செய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த நகரும் அழிந்துவிடும்.

காவலர்க்குரிய பொறுப்புணர்வே இறைவாக்கினருக்கு இருக்க வேண்டும்.

உறவு வாழ்வில் நாம் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்பேற்கிறோம். மௌனம் காப்பது என்பது இரத்தப் பழிக்குச் சமம். கண்டுகொள்ளாத்தன்மை, கோழைத்தனம் தவிர்க்க வேண்டும்.
 
இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 13:8-10) உறவுநிலைகள் பற்றிய பவுலின் அறிவுரைப் பகுதியாக அமைந்துள்ளது: ‘நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.’ அன்பு அனைத்தையும் நிறைக்கிறது.
 
தன்னாய்வுக் கேள்விகள்:
 
(அ) குடும்ப உறவில், பங்குத் தளத்தில், அருள்பணி உறவில் – மற்றவர் எனக்கு எதிராகச் செய்தது என்ன?
 
(ஆ) அந்த நிகழ்வுக்கு, அந்த நபருக்கு நான் பொறுப்பேற்கத் தயாரா?
 
(இ) நான் என்ன செய்வேன்?
 
வெற்றிகொள்வதற்கான தடை கடின உள்ளம். இதைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 95): ‘உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.’

முணுமுணுத்தலும் கசப்புணர்வு கொள்தலும் உள்ளத்தைக் கடினப்படுத்திக்கொள்வதும் உறவில் நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியமாக்கிவிடுகின்றன.

உறவைக் காத்துக்கொள்தல் நலம். உறவில் வெற்றிகொள்தல் சிறப்பு.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment