இன்றைய இறைமொழி
திங்கள், 7 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 23-ஆம் வாரம்
1 கொரி 5:1-8. லூக் 6:6-11
பழைய புளிப்புமாவு
இன்றைய முதல் வாசகத்தில், ‘பழைய புளிப்புமாவு, புதிய மாவு’ என்னும் உருவகத்தைக் கையாள்கிற பவுல், நம்பிக்கையாளர்கள் நடுவே விளங்க வேண்டிய தூய வாழ்க்கை பற்றி அறிவுறுத்துகிறார். கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பல்வேறு பிரச்சனைகளுக்கு விடை காண்கிறார் பவுல். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் கையாள்கிற பிரச்சனை பரத்தைமை அல்லது கூடா ஒழுக்கம். குடும்பச் சூழலில் நடக்கிற பாலியல் பிறழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார். நம்பிக்கையாளர் ஒருவர் தன் தந்தையின் மறுமனைவியுடன் உறவில் ஈடுபடுகிறார். இப்படிப்பட்ட ஒருவரைக் குழுமத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பது பவுல் வழங்கும் அறிவுரை. புளிப்பு மாவைப் பிரித்து வைக்காவிட்டால் புதிய மாவையும் அது புளிப்பாக்கிவிடும் என்று உருவகமாகப் பேசுகிற பவுல், நம்பிக்கையாளர் ஒருவரின் பிறழ்வு மற்றவர்களையும் பிறழ்வுக்கு ஆளாக்கிவிடும் என்கிறார்.
கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவியவர்கள் வெறுமனே இயேசுவைக் கடவுள் என்று மட்டும் அறிக்கையிடாமல், தங்களுடைய சமகாலத்து மக்களைவிட அறநெறியிலும் தனித்து விளங்கினார்கள். இப்படியாக, நம்பிக்கை என்பது சமூக வாழ்க்கை முறையையும் பாதிக்கிறது.
‘பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக, நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக!’ என்று அழைப்பு விடுக்கிறார் பவுல்.
நற்செய்தி வாசகத்தில், இயேசு ஓய்வுநாளில் நிகழ்த்துகிற வல்ல செயல் ஒன்றைக் குறித்து மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இடறல்படுகிறார்கள். இவர்கள் தங்கள் உள்ளத்தில் கொண்டிருக்கிற சட்டம் என்ற பழைய புளிப்புமாவு மனிதர்களின் வாழ்வையும் புளிப்பாக்கி (கசப்பாக்கி) விடுகிறது.
நம் ஆன்மிக வாழ்வில், நம்மிடையே உள்ள பழைய பிறழ்வுபட்ட எண்ணத்தை, நடத்தை அகற்றிவிடுவது நலம். சமூக வாழ்வில், நம் வாழ்க்கை முறை மற்றவர்களை நேர்முகமாகத் தூண்டி எழுப்புவதாக அமைய வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment