ஆண்டு தியானம் 2026
ஒவ்வோர் அருள்பணியாளரும் ஆண்டுத் தியானம் செய்ய வேண்டும் என்று திருஅவைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆண்டு முழுவதும் செய்கிற பணியிலிருந்து ஒரு வாரம் விடுப்பு எடுக்குமாறு திருஅவைச் சட்டம் சொல்வதன் பின்புலம் இதுதான்: ‘நீ இல்லாமலும் பங்கும் மறைமாவட்டமும் திருஅவையும் இயங்கும்!’ என்று அருள்பணியாளருக்கு அறிவுறுத்துவதற்காகத்தான்!
2026-ஆம் ஆண்டு தியானத்துக்காக நான் தேர்ந்துகொண்ட இடம் பொஸ்னியா நாட்டில் உள்ள மெட்ஜூகோர்யே என்னும் மரியன்னையின் திருத்தலம். 28 ஆகஸ்ட் அன்று 32 இத்தாலிய நண்பர்களுடன் இணைந்து சென்ற திருப்பயணம் 4 செப்டம்பர் அன்று இனிதே நிறைவுற்றது.
மூன்று அனுபவங்கள்:
(அ) மெட்ஜூகோர்யே மரியன்னை திருத்தலம்
1981 தொடங்கி இன்று வரை அன்னை கன்னி மரியாவின் தனிப்பட்ட வெளிப்படுத்தல்கள் சில நபர்களுக்கு நிகழ்வதாக நம்பப்படுகிற இடம் இது. கன்னி மரியா இங்கே முன்மொழிகிற ஐந்து கூழாங்கற்கள்: திருப்பலி, ஒப்புரவு அருளடையாளம், திருவிவிலியம், செபமாலை, நோன்பு. நற்கருணை ஆராதனை, திருப்பலி, செபமாலை, ஒப்புரவு அருளடையாளம் பெறுதல் போன்றவற்றின் வழியாக மக்கள் இறையனுபவம் பெறுகிறார்கள்.
(ஆ) இத்தாலியில் உள்ள லொரெத்தோ ஆலயம்
நாசரேத்து இல்லத்தைத் தாங்கி நிற்கிறது இந்த ஆலயத்தில் உள்ள அன்னை கன்னி மரியா ‘கறுப்பு மாதா’ என அழைக்கப்படுகிறார்.
(இ) பயணத்தின்போது விடுதலைப் பயணம் பற்றிய காணொலி
‘பாரவோனின் அரசவையில் இளவரசர் போல இருந்த மோசே ஒரே நாளில் நாடோடி நிலைக்குத் தள்ளப்பட்டார்.’ இப்படிப்பட்ட நிலை வரும்போது என்ன செய்ய வேண்டும்? நமக்கு எதைச் செய்யத் தெரியுமோ, அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். மோசே அப்படித்தான் செய்தார்.
‘முட்செடி எரிந்தது. ஆனால், தீர்ந்துபோகவில்லை.’ நாம் செய்கிற அன்பும், வேலையும் அப்படித்தான். நம்மை எரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், ஒருபோதும் அவை நம்மை அழிப்பதில்லை.
‘கடவுள் மனிதருக்குக் கொடைத்த மாபெரும் கொடை விடுதலை. ஆனால், விடுதலை பெற்ற மனிதர்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்பதையே விரும்பினார்கள். எகிப்து தந்த சுகம் இஸ்ரயேல் மக்களின் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்தது. எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை வெளியே எடுப்பது கடவுளுக்கு எளிதாக இருந்தது. ஆனால், அவர்கள் உள்ளத்திலிருந்து எகிப்தை வெளியே எடுப்பதுதான் அவருக்குக் கடினமாக இருந்தது.’
மூன்று பாடங்கள்:
(அ) மெட்ஜூகோர்யே திருத்தலம் ஒரு புனைகதையா? இங்கே நடப்பதாகக் கூறப்படுகிற வெளிப்பாடுகள் கட்டுக்கதைகளா? என்ற கேள்விக்கு விடைகள் இல்லை. மூளை அறியாத சில விடயங்களை இதயம் அறிந்திருக்கிறது. சில நேரங்களில் மூளையின் கட்டுப்பாட்டை விடுத்து இதயத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது நல்லது.
(ஆ) மரியன்னையைத் தேடிச் சென்ற நான், புனித யோசேப்பின்மேல் கொண்ட அன்பை மீண்டும் கண்டெடுத்தேன்.
(இ) அன்னை கன்னி மரியா கொண்டிருந்த ‘ஃபியாத்’ (உம் திருவுளப்படியே எனக்கு நிகழட்டும்!) என்று வாழ்வின் நிகழ்வுகளுக்குப் பதிலிறுப்பு செய்வது நலம்.







































Leave a comment