இன்றைய இறைமொழி
வியாழன், 6 ஆகஸ்ட் 2026
ஆண்டவரின் தோற்றமாற்றம், விழா
தானி 7:9-10, 13-14. மத் 17:1-9
தாபோரும் கல்வாரியும்
ஒவ்வொரு காலையிலும் அவர் அதே மனச்சுமையோடு விழிக்கிறார். செய்ய வேண்டிய வேலைகள், கட்ட வேண்டிய பில், சந்திக்க வேண்டிய மனிதர்கள், மறைத்துக்கொள்ள வேண்டிய காயங்கள், சுமக்க வேண்டிய பொறுப்புகள் நிறைய இருக்கின்றன. அவருடைய கேள்விகளுக்கு விடைகள் இல்லை. மலைஏற்றம் போல இருக்கிறது அவருடைய வாழ்க்கை. அவருடைய போராட்டம் மற்றவார்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு நாளும், அவர் ஒரு கல்வாரியில் ஏறிக்கொண்டிருக்கிறார்.
சில நாள்களில், நாள் தொடங்குவதற்கு முன்பே அவர் களைத்துப்போகிறார். சில நாள்களில், எல்லாரிடமும் தன்னைப் பற்றி விளக்க வேண்டும் போல அவருக்குத் தோன்றுகிறது. தான் செய்கிற செயல்களைச் சொல்லி மற்றவர்களின் பாராட்டு பெற வேண்டும் போல தோன்றுகிறது. சில நாள்களில், தன் துன்பத்துக்குப் பொருள் காண விரும்புகிறார். சில நாள்களில், ‘இந்தச் சிலுவையை மீண்டும் ஏன் சுமக்க வேண்டும்?’ என்று கேட்கிறார்.
ஆனால், ஆண்டவரின் தோற்றமாற்றத் திருநாளில் நற்செய்தி அவரிடம் சொல்கிறது: கல்வாரியில் ஏறும்போது தாபோர் மலையை மறந்துவிடாதே!
தாபோர் மலையில் இயேசு உருமாற்றம் அடைகிறார். அவருடைய முகம் கதிரவனைப் போல ஒளிர்கிறது. அவருடைய ஆடைகள் ஒளியைப் போல வெண்மையாகின்றன. அந்த ஒரு பொழுதில், சீடர்கள் நாசரேத்தின் ஆசிரியரை மட்டுமல்ல, மாட்சியின் ஆண்டவரைக் காண்கிறார்கள். எப்போதும் அவருக்குள் இருந்த மறைந்த ஒளியைக் காண்கிறார்கள். கல்வாரியில் அவருடைய காயமடைந்த முகத்தைக் காண்பதற்கு முன், தாபோரில் அவருடைய ஒளிரும் முகத்தைக் காணும் அருள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதைத்தான் அவர் நினைவில் கொள்ள வேண்டும். அவருடைய துன்பம் உண்மை. ஆனால் அது முழு உண்மை அல்ல. அவருடைய காயங்கள் உண்மை. ஆனால் அவை இறுதி வார்த்தை அல்ல. அவருடைய கல்வாரி உண்மை. ஆனால் தாபோரும் உண்மை.
முதல் வாசகத்தில் தானியேல் காட்சி ஒன்று காண்கிறார். அரியணைகள் அமைக்கப்படுகின்றன. தொன்மையானவர் தம் ஆசனத்தில் அமர்கிறார். ஆயிரமாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிகிறார்கள். வானத்தின் மேகங்களோடு மானிடமகனைப் போன்றவர் வருகிறார். அவருக்கு ஆட்சியும் மாட்சியும் அரசும் கொடுக்கப்படுகின்றன. அவருடைய அரசு ஒருபோதும் அழியாது.
இது மனித காலம் அல்ல. இது கடவுளின் காலம்.
மனித காலத்தில் அனைத்தும் உடைந்துபோனது போலத் தெரிகிறது. தீமை வலிமையானது போலத் தெரிகிறது. நீதிமான்களும் நேர்மையாளர்களும் துன்பப்படுகிறார்கள். மாசற்றவர்கள் காத்திருக்கிறார்கள். பலவீனர்கள் நசுக்கப்படுகிறார்கள். எதிர்காலம் தெளிவற்றதாகத் தெரிகிறது. ஆனால், கடவுளின் காலத்தில் அனைத்தும் நன்றாக முடியும். மாட்சி ஏற்கெனவே ஆயத்தமாக இருக்கிறது. அரசு ஏற்கெனவே மானிடமகனுக்குரியது. இறுதி வார்த்தை வெற்றியே!
ஆனால், பேதுரு நாம் பல நேரங்களில் செய்வதையே செய்கிறார். அவர் பேசத் தொடங்குகிறார். ‘ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால், நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன்’ என்கிறார். அவர் அந்தப் பொழுதை ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறார். அதற்கு பொருள் கொடுக்க விரும்புகிறார். ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புகிறார்.
ஆனால் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தந்தையின் குரல் அவரை இடைநிறுத்துகிறது: ‘இவர் என் அன்பார்ந்த மகன்; இவருக்குச் செவிகொடுங்கள்.’
அதுவே போதும்.
சீடர் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அனைத்தையும் விளக்க வேண்டியதில்லை. எப்போதும் பேச வேண்டியதில்லை. ஒவ்வொரு வலிக்கும் உடனே பொருள் காண வேண்டியதில்லை. செவிகொடுப்பதே போதும்.
நாம் அடைகிற துன்பத்தின் பொருள்காணுதல் அல்ல, மாறாக, செவிகொடுத்தலே நம்பிக்கையில் நம்மை உறுதிப்படுத்துகிறது.
ஆகவே அவர் மீண்டும் எழுகிறான். சுமக்க வேண்டியதைச் சுமக்கிறார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையைச் செய்கிறார். தன் முன் வைக்கப்பட்ட மக்களை அன்பு செய்கிறார். அவர் அதிகம் பேச வேண்டியதில்லை. அதிகம் நிரூபிக்க வேண்டியதில்லை. அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டியதில்லை.
தாபோரை நினைவுகொள்வோம். மலை ஏறுவது கடினம்தான். ஆனால், மலையில்தான் மாட்சியைக் காண முடியும்.
இயேசுவுக்குச் செவிகொடுப்பவருக்கு கல்வாரி முடிவு அல்ல. தாபோரின் ஒளி மீண்டும் எழும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment