இன்றைய இறைமொழி. ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2026. அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு
எசா 55:1-3. உரோ 8:35, 37-39. மத் 14:13-21

அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி

நம் வாழ்வின் நகர்வுகளை வெற்றி-தோல்வி என்று நிர்ணயிக்கிறோம். சிறிய சிறிய வெற்றிகளே பெரிய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்று நினைக்கிற ஒருவர் தன் கட்டிலை விட்டுத் துயில் எழ வேண்டும். கட்டிலை விட்டுத் துயில் எழுதல் என்னும் சிறிய வெற்றியே எவரெஸ்ட் சிகரம் ஏறுதல் என்னும் பெரிய வெற்றிக்கு அவரை இட்டுச் செல்லும். பெரிய வெற்றிகள் தள்ளிப்போவதற்குக் காரணம் நம் சிறிய வெற்றிகள் தள்ளிப்போவதால்தான்.

நம் அன்றாடச் செயல்பாடுகளான பசி தீர்த்தல், தாகம் தீர்த்தல், தூங்குதல் போன்றவை இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியம் இல்லை.

‘நம்மேல் அன்புகூர்ந்தவரின் (கடவுளின்) செயலால் நாம் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்’ என்று கடவுள் வழியாக நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகளை நினைவுகூர இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை அழைக்கிறது.

பசி என்னும் அடிப்படையான மனிதத் தேவையின்மேல் கடவுள் அருள்கிற வெற்றியை மையமாகக் கொண்டிருக்கிற இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இந்த அடிப்படை உணர்வில் நாம் பெறும் வெற்றி மற்ற வெற்றிகளுக்கு நம்மைத் தூண்டி எழுப்பும்.

முதல் வாசகம்: வாருங்கள், வாங்குங்கள்!

இன்றைய முதல் வாசகம் எசாயா நூலிலிருந்து நமக்குத் தரப்பட்டுள்ளது. துன்புறும் ஊழியன் பாடல்களைத் தொடர்ந்து வரும் இந்தப் பகுதியில், பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டுக் கிடந்த யூதா நாட்டு மக்களுக்கு நிறைவு என்னும் எதிர்நோக்கை வழங்குகிறார் ஆண்டவர் (எசாயா). தாகம் தீர்ப்பதற்கும் பசி ஆற்றுவதற்கும் அவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இவை இரண்டும் இலவசமாகத் தரப்படுவதாக உரைக்கிறார் எசாயா. இவற்றுக்காக மக்கள் இனி உழைக்கத் தேவையில்லை. ஏனெனில், இவற்றை ஆண்டவர் பார்த்துக்கொள்வார். ஆண்டவருடைய உடன்படிக்கை இவர்களுக்கு இதை இலவசமாக வழங்குகிறது. இவ்வாறாக, ஆண்டவர் இவர்களுடைய பட்டினியிலிருந்து இவர்களுக்கு வெற்றி தருகிறார்.

இரண்டாம் வாசகம்: எது நம்மைப் பிரிக்க முடியும்?

பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி இருந்த உரோமைத் திருஅவைக்கு மடல் எழுதுகிற பவுல், ‘கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?’ எனக் கேட்கிறார். இவற்றில் எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்பதே பவுலின் கேள்விக்கான விடை. நமக்கு வெளியேயிருந்த வரக்கூடிய எதுவும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில், நமக்கு உள்ளே இருக்கிற கிறிஸ்து நமக்கு வெற்றி தருகிறார். இது வெறும் கற்பனை அல்லது சிந்தனை வெற்றி அல்ல. மாறாக, நம் எதிர்த்தகைவாலும் துணிச்சலாலும் நாம் பெறுகிற எதார்த்தமான வெற்றி. நம் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுபவராகக் கடவுள் இருக்கிறார்.

நற்செய்தி வாசகம்: பரிவோடு பகிர்வு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து கொடுக்கிறார் இயேசு. இயேசு அப்பங்களைப் பலுகச் செய்யும் நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கிறார்கள். திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படுதல் நிகழ்வின் தொடர்ச்சியாக இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார் மத்தேயு. இயேசு மக்கள்கூட்டத்தின்மேல் பரிவு கொள்கிறார். பரிவு வெறும் உணர்வாக நின்றுவிடாமல் உடனடியான செயல்பாடாக மாறுகிறது. சீடர்களும் இந்த நிகழ்வில் உடனுழைக்கிறார்கள். விளைவு, பசி மறைந்து நிறைவு பிறக்கிறது. வெறுமை மறைந்து மிகுதி பிறக்கிறது.

இன்று நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் எவை?

(அ) கிறிஸ்துவோடு இணைந்திருப்பவர் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்.

சின்னஞ்சிறியவற்றில் பெறுகிற வெற்றி பெரிய வெற்றியைத் தரும் என்று நாம் கூறினோம். கிறிஸ்துவோடு இணைந்திருத்தலே நாம் தொடங்குகிற எல்லாச் செயல்களிலும் நமக்கு வெற்றி தருகிறது. இன்றை நம்மை வெளியிலிருந்து அச்சுறுத்தும் காரணிகள் எவை?

(ஆ) கடவுள் தம் கைகளைத் திறக்கும்போது உயிரினங்களின் பசி நீங்குகிறது. வேலைக்காக நம் கரங்களைத் திறக்கும்போது நம் பசி நீங்குகிறது. பகிர்வுக்காக நம் கைகளைத் திறக்கும்போது மற்றவர்களின் பசி நீங்குகிறது. இன்றைய பதிலுரைப்பாடல் ஆசிரியர், ‘நீர் உம் கைகளைத் திறந்து எல்லா உயிரினங்களின் பசியைப் போக்குகிறீர்’ என்று பாடுகிறார்.

(இ) பரிவு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, மானுடத்தின் வெற்றிக்கான செயல்பாடு.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பரிவு செயல்பாடாக மாறுகிறது. இந்தச் செயலில் இயேசுவின் சீடர்களும் பங்கேற்கிறார்கள். நம் செயல்பாடுகளைவிடக் கடவுளின் குறுக்கீடு அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

‘அவர் நம்மோடு இருப்பதால்’ அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். நம் பரிவால் ஒருவர் மற்றவரோடு உடனிருந்து பசித்திருப்போரையும் வெற்றியடையச் செய்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment