இன்றைய இறைமொழி. திங்கள், 14 செப்டம்பர் 2026. உயர்த்தப்படுதல்

இன்றைய இறைமொழி
திங்கள், 14 செப்டம்பர் 2026
திருச்சிலுவையின் மகிமை – விழா
எண் 21:4-9 (அ) பிலி 2:6-11. யோவா 3:13-17

உயர்த்தப்படுதல்

திருச்சிலுவையின் மகிமை அல்லது திருச்சிலுவையின் வெற்றி என்றழைக்கப்படும் திருவழிபாட்டுத் திருவிழா மூன்று வரலாற்று நிகழ்வுகளை நமக்கு நினைவுறுத்துகிறது: (அ) இயேசு அறையப்பட்ட உண்மையான சிலுவை 326-இல் கண்டுபிடிக்கப்பட்டது. (ஆ) திருச்சிலுவை முதன்முதலாக 335-இல் பொதுவான வணக்கத்துக்காக மக்கள்முன் கொண்டுவரப்பட்டது. (இ) பாரசீகர்களிடமிருந்து 628-இல் திருச்சிலுவை மீண்டும் கைப்பற்றப்பட்டு எருசலேம் கொண்டுவரப்பட்டது.

மேற்காணும் மூன்று வரலாற்று நிகழ்வுகளை நாம் இன்று நினைவுகூர்ந்தாலும், மரத்தாலான சிலுவையை நினைவுகூரும் விழா அல்ல இது. மாறாக, சிலுவை வழியாக இயேசு உணர்த்திய தற்கையளிப்பையும் தியாகத்தையும் அன்பையும் நாம் கொண்டாட வேண்டிய விழா.

திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக, இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே வீற்றிருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம் உரையாடுகின்ற இயேசு, ‘பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்’ என்கிறார். ‘உயர்த்தப்படுதல்’ என்பதற்கு யோவான் நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்) பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத் தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல் எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார். வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர். உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது. சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு தருகின்றார்.

தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள் வெண்கலப் பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம் சிலுவையை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக இயேசு நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.

மற்றொரு முதல் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின் நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின் அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.

இயேசு தம் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது. பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக் கொண்டிருந்ததால்தான், ‘ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்’ என்று இயேசுவைத் தடுக்கின்றார்.

இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

நம் வாழ்வின் நொறுங்குநிலையின், உறுதியற்ற நிலையின், குழப்பமான நிலையின் அடையாளமாக இருக்கிறது சிலுவை. நொறுங்குநிலையும், உறுதியற்ற நிலையும், குழப்பமான நிலையும் தரும் துன்பமே நம் வாழ்வை மேன்மைப்படுத்துகிறது.

துன்பத்தின் அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின் அடையாளமாக இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை. சிலுவை என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், மாட்சியும் தாழ்ச்சியும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது.

தாழ்த்தப்படுவதன் வழியாகவே ஒருவர் உயர்த்தப்படுகிறார் என்பது சிலுவை கற்பிக்கிற முரண்.

இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று நேரம் அமர்ந்து, அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே பிணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment