இன்றைய இறைமொழி
சனி, 12 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 23-ஆம் வாரம்
1 கொரி 10:14-22. லூக் 6:43-49
உள்ளும் புறமும்
இன்றைய நற்செய்தி வாசகத்தோடு இயேசுவின் சமவெளிப் பொழிவு நிறைவுபெறுகிறது. மறைவாக இருப்பதற்கும் வெளியே மற்றவர்களுடைய கண்களுக்குத் தெரிவதற்குமான ஒற்றுமையையும் வேற்றுமையையும் எடுத்துரைக்கிறார் இயேசு.
ஒருவருடைய உள்ளத்தில் உறைந்திருக்கும் எண்ணங்களை நம்மால் அறிய இயலாது. ஆனால், அவருடைய வாய்ச்சொற்கள் அவருடைய உள்ளத்தின் இயல்பை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்றன.
மரத்தின் இயல்பு அது தரும் கனியில் தெரிகிறது. ஒரு கட்டடத்தின் அடித்தளம் அதன் உறுதித்தன்மையில் இருக்கிறது.
மேலும், வெளிப்படையாக இயேசுவை, ‘ஆண்டவர்’ என அறிக்கையிட்டாலும், உள்ளார்ந்த இயல்பில் மாற்றம் இல்லை என்றால், வெளிப்படையான அறிக்கையால் பயன் ஒன்றும் இல்லை.
இன்றைய முதல் வாசகத்தில், சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணுதல் என்னும் கருத்துரு பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘உண்ணுதல்’ என்னும் செயலின் அடிப்படையில் திருஅவையில் விளங்குகிற பிறழ்வுகளை எடுத்துரைக்கிறார். ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்குபெறுகிற நம்பிக்கையாளர்கள் வெளிப்புறச் சடங்கில் ஒருமைப்பாட்டையும், உள்ளார்ந்த உறவுநிலையில் பிரிவினையையும் கடைப்பிடித்தால், ஆண்டவருடைய திருவிருந்தால் பயன் ஒன்றுமில்லை என்பது பவுலடியாரின் கருத்து.
நமக்கு உள்ளே நாம் காணும் மனிதரும், நமக்கு வெளியே நாம் காட்டும் மனிதரும் நெருக்கமாக இருந்தால் எத்துணை நலம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment