இன்றைய இறைமொழி
ஞாயிறு, 13 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு
சீஞா 27:30-28:7. உரோ 14:7-9. மத் 18:21-35
இரக்கம் பெறுதலும் கொடுத்தலும்!
கலிலேயக் கடல், சாக்கடல் உருவகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கலிலேயக் கடல் மீன்வளம் நிறைந்ததாகவும், உயிரினங்கள், தாவரங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. ஆனால், சாக்கடல் அல்லது உப்புக் கடல் உயிர் வாழ்வதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, கலிலேயக் கடல் யோர்தான் ஆற்றிலிருந்து தான் பெறுகிற தண்ணீரை யோர்தான் ஆற்றுக்கே மீண்டும் வழங்குகிறது. சாக்கடலோ யோர்தான் ஆற்றின் நீரைத் தன்னகத்தே பிடித்துவைத்துக்கொள்கிறது.
இரக்கம் பெறுகிற ஒருவர் இரக்கத்தைக் காட்ட வேண்டும்.
மன்னிப்பு பெறுகிற ஒருவர் மன்னிப்பை வழங்க வேண்டும்.
பேரன்பைப் பெறுகிற ஒருவர் பேரன்பைக் காட்ட வேண்டும்.
(அ) முதல் வாசகம் (சீஞா 27:30-28:7)
கிமு 180-இல் எழுதப்பட்ட இந்த நூல், எபிரேய ஞானம் கிரேக்க ஞானத்தைவிட மேன்மையானது என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டது. எபிரேய ஞானம் தோரா, வழிபாடு, அறநெறி, அன்றாட உறவுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. அலகுகள் 27-28 ஆகியவை பேச்சு, மறுதலித்தல், கோபம், சண்டை சச்சரவு, பழிதீர்த்தல், மன்னித்தல் போன்ற கருத்துருக்கள் பற்றிப் பேசுகின்றன.
‘வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை. பாவிகள் இவற்றைப் பற்றிக்கொள்கிறார்கள்.’
கோபம் (அநீதி இழைக்கப்படும்போது), கசப்புணர்வு (தொடர் கோபம்) – இவை நம்மைப் பற்றிக்கொள்கின்றன – தீ போல – அதன் பின்னர் இவற்றை நாம் பற்றிக்கொள்கிறோம். அவற்றை நாம் விட மறுக்கிறோம்.
பழிதீர்த்தலும் இறையியல் பிரச்சனையும் – ‘மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர். அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?’ தான் மற்றவருக்குக் கொடுக்க விரும்பாத ஒன்றை ஒருவர் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?
‘உன் முடிவை நினைத்துப்பார்’ என்கிறார் ஆசிரியர். இறப்பையும் வாழ்வின் இறுதியையும் நினைத்துப்பார்ப்பவர் யாரிடமும் பகைமை பாராட்டுவதில்லை. கட்டளைகளை, உடன்படிக்கையை நினைத்துப்பார்க்க வேண்டும். தாவீது தான் தேர்ந்தெடுந்தப்பட்ட நிலையை மறந்தபோது பத்சேபாவுடன் பாவம் செய்கிறார்.
பல நேரங்களில் ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டியதை மறந்துவிடுகிறோம் – ஆனால், மற்றவர்கள் நமக்குச் செய்த தீங்க மறக்க மறுக்கிறோம்.
அநீதியை அநீதி என்று கடிந்துகொள்கிறது நூல். மன்னிப்பு என்றால் என்ன? பழீதீர்க்க மறுத்தல். இரக்கத்தைப் பெறுகிறோம் என்றால் இரக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்புணர்வு பெறுகிறோம்.
(ஆ) பதிலுரைப் பாடல் (திபா 103)
‘ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். பொறுமையும் பேரன்பும் மிக்கவர்.’ தனக்குத் தானே உரையாடுதல் நடையில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது.’என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! கனிவான செயல்களை மறவாதே!’ என் தன் ஆன்மாவிடம் பேசுகிறார் ஆசிரியர். உன் பாவங்களை மன்னிக்கிறார், விடுவிக்கிறார், நலம் தருகிறார். அவர் கடிந்துகொள்வதில்லை. சினம் கொள்வதில்லை.
மேற்கிலிருந்து கிழக்கு எத்துணை தொலைவில் உள்ளதோ – வடக்கு தெற்கு துருவங்கள், எல்கைகள் – எல்லையற்றது கடவுளுடைய இரக்கம். பாவத்துக்கும் பாவிக்குமான தூரம்.
திபா 103 – விப 34 – இரக்கம் கடவுளுடைய பெயர்.
(இ) இரண்டாம் வாசகம் (உரோ 14:7-9)
‘வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாக இருக்கிறோம்’ என்கிறார் பவுல். நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் – நமக்கும் மற்றவர்களுக்குமான பிணைப்பு – அகுஸ்தினார், ‘அனைவரையும் கடவுளில் அன்பு செய்தல்.’ நம் கோபம் அல்ல, காயப்பட்ட தான்மை (ஈகோ), பழிதீர்க்கும் எண்ணம் அல்ல – கிறிஸ்துவே நம் ஆண்டவராக இருக்க வேண்டும்.
(ஈ) நற்செய்தி (மத் 18:21-25)
கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சி – குழுமப் போதனை – பேதுருவின் கேள்வி – இயேசுவின் மன்னிப்பை உணர்ந்தவர் – திருத்தூதர்களின் தலைவர் – ஏழு முறை – முழுமை, தாராள உள்ளம், கணக்குப் பார்த்தல்.
எழுபது தடவை ஏழு முறை – கணக்கற்ற வரை.
லாமேக் தொநூ 4:24. காயின் ஏழு, லாமேக் ஏழுபது தடவை ஏழு – பழிதீர்த்தல். இங்கே, இரக்கம் காட்டுதல்.
உருவகம் – மன்னிக்க மறுத்த பணியாளர் – மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது – தாலந்து – தெனாரியம்.
அரசன் மன்னிப்பது எளிது – அவனுடைய பணம் அல்ல என்னும் ஐயமும், அரசனுடைய மன்னிப்பு நிபந்தனைக்கு உட்பட்டதா? என்னும் கேள்வியும் நம்மில் எழுகிறது.
பத்தாயிரம் தாலந்து – ஒரு தாலந்து ஆறாயிரம் தெனாரியம் (ஒரு தாலந்து கடனை அடைக்க ஏறக்குயை 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும்)
‘என்னைப் பொறுத்தருள்க! எல்லாவற்றையும் திருப்பித் தந்துவிடுகிறேன்!’ – நேர அவகாசம் கேட்கிறார். கடன் மன்னிக்கப்படுகிறது. இரக்கம்.
அதே சொற்கள் – ‘என்னைப் பொறுத்தருள்க! எல்லாவற்றையும் திருப்பித் தந்துவிடுகிறேன்!’ –
அவருடைய உடன்பணியாளர்கள் – பொறாமையால்? அக்கறையால்?
‘நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ – இறையியல் மையம். மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
மூன்று பாடங்கள்:
(அ) நமக்கு நடப்பவற்றை நாம் கட்டுப்படுத்த இயலாது. அவற்றுக்கான பதிலிறுப்பைக் கட்டுப்படுத்த முடியும் – என் நன்மைத்தனத்தை மற்றவரின் தீமை வரையறுக்கத் தேவையில்லை.
(ஆ) கோபம் – கோபத்துக்குத் தண்டனை இல்லை. கோபமே ஒருவருக்குத் தண்டனை – மற்றவரின் தவறுக்கு நாம் நமக்கே வழங்கும் தண்டனை.
(இ) தலைவன் மனநிலை – கலிலேயக் கடல் போல. பணியாளன் மனநிலை – சாக்கடல் போல.
நாம் கடவுளிடமிருந்து பெறுகிற இரக்கத்தை ஒருவர் மற்றவருக்கு வழங்க முயற்சி செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment