இன்றைய இறைமொழி
சனி, 1 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
எரே 26:11-16, 24. மத் 14:1-12
நல்லவை அகற்றுதல்!
கடந்த சில நாள்களுக்கு முன்னர் ‘வயலில் களைகள்’ உவமையை வாசிக்கக் கேட்டோம். கோதுமைகளை அழித்துவிட நேரிடும் என்னும் முன்மதியோடு களைகளையும் தம் வயலில் வளர அனுமதிக்கிறார் நிலக்கிழார். ஆனால், சில நேரங்களில் நம் சமூகம் திட்டமிட்டு கோதுமைப் பயிர்களை அழிக்கிறது. கோதுமைப் பயிர்கள் களைகளுக்குத் தடையாக இருப்பதாக நினைக்கிறது உலகம்.
அப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் காட்டுகிறது.
முதல் வாசகத்தில், தம் சொந்த ஊர்க்காரர்களால் நிராகரிக்கப்பட்ட இறைவாக்கினர் எரேமியா அவர்களால் கொலைத் தீர்ப்புக்கு உள்ளாகிறார். இறுதியில் காப்பாற்றப்படுகிறார்.
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானுக்குக் கொலை தண்டனை வழங்குகிறார் ஏரோது. ஏரோதியாவின் விருப்பத்திற்கிணங்க யோவானின் தலையைச் வெட்டச் செய்கிறார் ஏரோது.
இப்படியாக நல்லவர்களை, மற்றவர்களுக்கு நல்லது மொழிபவர்களை சமூகம் கொல்லத் துணிவது ஏன்?
மேற்காணும் இரண்டு இறைவாக்கினர்களுமே கடவுளின் குரலாக மக்கள் நடுவே செயல்பட்டார்கள். கடவுளின் குரலைக் கேட்க விரும்பாத மானுடம் அக்குரலை எழுப்பியவர்களைக் கொன்றுவிடுகிறது.
ஆனாலும், கடவுளின் குரல் ஒடுக்கப்படுவதில்லை.
எரேமியா கொல்லப்படாதவாறு சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.
திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்பட்ட பின்னர் இயேசு தம் பொதுப்பணியில் மிகவும் அதிகமாகப் பயணம் செய்யத் தொடங்குகிறார்.
மற்றவர்களின் தீமை நம் நன்மைத்தனத்தை மாற்றிவிட நாம் அனுமதிக்க வேண்டாம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment