இன்றைய இறைமொழி. வெள்ளி, 31 ஜூலை 2026. சொந்த ஊரில் எதிர்ப்பு

இன்றைய இறைமொழி
வெள்ளி, 31 ஜூலை 2026
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
புனித லொயோலா இஞ்ஞாசியார், நினைவு

எரே 26:1-9. மத் 13:54-58

சொந்த ஊரில் எதிர்ப்பு

இறைவாக்கினர்கள் இருவர் தங்களுடைய சொந்த ஊரில் எதிர்க்கப்படுவதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்கிறது.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா ஆண்டவராகிய கடவுளின் கட்டளைக்கேற்ப எருசலேம் ஆலயத்தில் (ஆண்டவரின் இல்லத்தில்) இறைவாக்குரைக்கிறார். கோவிலுக்கும் நகருக்கும் எதிராக எரேமியா உரைத்த சொற்களைக் கேட்டு இடறல்படுகிறார்கள் எருசலேம் மக்கள். எரேமியாவும் எருசலேம் நகரத்தவரே. சொந்த ஊருக்கு எதிராக அவர் இறைவாக்கு உரைத்ததாக எண்ணி அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். இங்கே எரேமியாவின் செய்தி அவருடைய சொந்த ஊராருக்கு இடறலாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு அவருடைய சொந்த ஊரான நாசரேத்தூரின் தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இடறல்படுகிறார்கள் அவருடைய ஊரார்.

முதல் வாசகத்தில், செய்தி எதிர்க்கப்படுகிறது.

நற்செய்தி வாசகத்தில், செய்தியை அறிவிப்பவர் எதிர்க்கப்படுகிறார்.

மக்களுடைய முற்சார்பு எண்ணங்கள், விருப்பங்கள் கடவுளையும் கடவுள் அனுப்புகிற நபர்களையும் கடவுள் தரக்கூடிய செய்தியையும் ஏற்பதற்குத் தடையாக இருக்கின்றன.

நம் எளிய பின்புலமும் நெருக்கமும் பல நேரங்களில் நம் இல்லத்தாருக்கு இடறலாக இருக்கிறது. நாம் நம்மையே நம்பினாலும், இந்த உலகமே நம்மை நம்பினாலும், நம் ஊரார் நம்மைக் குறித்து இடறல்படவே செய்கிறார்கள்.

எரேமியாவும் இயேசுவும் தங்களுடைய பணிகளைத் தொடர்கிறார்கள் துணிவுடன்!

இன்று நாம் லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரை நினைவுகூர்கிறோம். ‘அனைத்தும் கடவுளுடைய மேலான புகழுக்கே’ என்று தம் வாழ்வையும் பணியையும் நெறிப்படுத்திய புனிதர் அனைத்திலும் ‘மேன்மையை’ (மாஜிஸ்) விரும்புவதற்கு நம்மை அழைக்கிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment