இன்றைய இறைமொழி. செவ்வாய், 7 ஜூலை 2026. இருவகை அறுவடை

இன்றைய இறைமொழி
செவ்வாய், 7 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
ஓசே 8:4-7, 11-13. மத் 9:32-38

இருவகை அறுவடை

(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருளும்

கிமு 8-ஆம் நூற்றாண்டில் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைக்கிறார் ஓசேயா. இஸ்ரயேலில் விளங்கிய அரசியல் ஊழல், சிலைவழிபாடு, சமய சமரசம் ஆகியவற்றைக் கடிந்துரைக்கிறார். அவர்களுடைய தான்தோன்றித் தனமான செயல்பாடுகளும் அரசியல் சமரசங்களும் சமயப் பிறழ்வுகளும் அசீரிய அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் என எச்சரிக்கிறார்.

‘அரசியல் துரோகம்’ – இரண்டாம் எரோபாவின் இறப்புக்குப் பின்னர் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்குத் தாங்களே அரசர் ஒருவரைத் தெரிந்துகொள்கிறார்கள்.

‘சமாரியாவில் கன்றுக்குட்டி’ … ‘அப்பீடங்களே பாவம் செய்வதற்குக் காரணமாயின’ – கன்றுக்குட்டி வழிபாடு பாகாலின் வளமை வழிபாட்டின் ஒரு பகுதியாகும். ஆண்டவரை வழிபடுவதற்கென உருவாக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் வேற்றுத் தெய்வ வழிபாட்டுக்கும், வளமை வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டன.

‘அறுவடையின் விதி’ – ‘அவர்கள் காற்றை விதைக்கிறார்கள். கடும் புயலை அறுப்பார்கள்’ என எச்சரிக்கிறார் இறைவாக்கினர். சமய, அரசியல், சமூக தளங்களில் இஸ்ரயேல் மக்களின் செயல்பாடுகள் அனைத்தும் வெறுமையாகப் போகும் என்பது இறைவாக்கினரின் எச்சரிக்கை.

‘எகிப்துக்குத் திரும்புதல்’ – ‘எகிப்து’ என்பது அடிமைத்தனத்தின் உருவகமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் செயல்பாடுகள் மீண்டும் அவர்களை அடிமைத்தனத்திற்கு – இந்த முறை அசீரிய அடிமைத்தனத்திற்கு – தள்ளிவிடும்.

(ஆ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருளும்

‘பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவருக்கு’ நலம் தருகிறார் இயேசு. மக்கள் இச்செயலைக் கண்டு வியப்புற்றாலும் பரிசேயர்கள் இயேசுவைக் குற்றம் சுமத்துகிறார்கள். ‘பேய்களின் தலைவனைக் கொண்டு பேய் ஓட்டுகிறான்’ என்னும் குற்றச்சாட்டு இயேசுவுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையேயான மோதலின் தொடக்கமாக இருக்கிறது.

பரிசேயர்களின் குற்றச்சாட்டைப் பற்றிக் கோபம் கொள்ளாத, எதிர்வினை ஆற்றாத இயேசு, தம் பார்வையை மக்கள் பக்கம் திருப்புகிறார். மக்கள் ‘அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து நிற்பதைக் காண்கிற இயேசு அவர்கள்மேல் பரிவு கொள்கிறார்.’ பழைய ஏற்பாட்டிலும் சில தருணங்களில் இஸ்ரயேல் மக்கள் ஆயனில்லா ஆடுகள் போல உணர்ந்தனர் (காண். எண் 27:17. எசே 34).

‘அறுவடையோ மிகுதி.’ மக்கள் கூட்டத்தின் ஆன்மிகத் தேவையை அறுவடைக்கு ஒப்பிடுகிறார் இயேசு.

(இ) வாழ்வியல் சவால்கள்

இன்றைய முதல் வாசகத்தில் மக்கள் வெறுமையை அறுவடை செய்வதாக எச்சரிக்கிறார் இறைவாக்கினர் ஓசேயா. நற்செய்தி வாசகத்தில் தாம் கொண்ட பரிவால் மக்களின் ஆன்மிகப் பசியைப் போக்க விளைகிற இயேசு மீட்பின் அறுவடை குறித்துப் பேசுகிறார்.

முதல் வாசகத்திலும், மக்கள் ஆயனில்லா ஆடுகள் போல அலைக்கழிக்கப்படுகிறார்கள். நற்செய்தி வாசகத்திலும், அப்படியே நிகழ்கிறது.

நம் நடுவே ஒருவர் நற்செயல் செய்யும்போது அதைக் கண்டு வியந்து பாராட்டுகிறோமா, அல்லது அந்தச் செயலைக் குறித்து இடறல் படுகிறோமா?

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment