இன்றைய இறைமொழி. ஞாயிறு, 5 ஜூலை 2026. அழுத்தாத நுகம்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 5 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு
செக் 9:9-10. உரோ 8:9, 11-13. மத் 11:25-30

அழுத்தாத நுகம்

வேலை முடிந்து வீடு திரும்பிய நடுத்தர வயதுடைய ஒருவர் வழியில் இருந்த பூங்கா ஒன்றில் இளைப்பாறச் சென்றார். அவருடைய வீட்டிலும் சில பிரச்சனைகள் இருந்தன. தன் முதுகில் தான் சுமந்து நின்ற வேலைக் கருவிகளை இறக்கிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். அவருக்கு எதிரே இருந்த கிரேக்கக் கடவுள் அட்லஸின் சிலை கண்களில் பட்டது. சேயுஸ் கடவுளால் சபிக்கப்பட்ட அட்லஸ் தன் வாழ்நாள் முழுவதும் பூமியைத் தோளில் தூக்கிச் சுமக்கும் தண்டனையைப் பெறுகிறார். அட்லஸின் கண்களில் தன் வலியை உணர்ந்தார் அந்த நபர். எல்லாருக்கும் வாழ்க்கை சுமையாகிக்கொண்டுதான் இருக்கிறது என்று நினைத்தவாறு வெளியே வந்தார் நபர். அந்தப் பக்கம் குழந்தை இயேசுவின் திருவிழாப் பவனி கடந்து போய்க்கொண்டிருந்தது. சப்பரத்தில் இருந்த திருஉருவத்தைப் பார்த்தார். குழந்தை இயேசுவின் கைகளிலும் பூமி உருண்டை. ஆனால், அந்தக் குழந்தையின் முகத்தில் எந்தவொரு வலியும் இல்லை. புன்முறுவலோடு பூமிப் பந்தை ஏந்தி நின்றார் குழந்தை இயேசு.

தண்டனையாக ஒன்றை நினைத்துச் சுமக்கும்போது அது வலியாக மாறுகிறது.

தாமே விரும்பிச் சுமக்கும்போது அது இனிமையாக மாறுகிறது.

ஞானம் பெற்றார் அவர்.

‘என் நுகம் இனிமையானது. என் சுமை எளிதானது’ என்று நம்மிடம் கூறுகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உவமைப் பொழிவுக்கான தயாரிப்புப் பகுதியாக உள்ளது. இந்த வாசகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில், இயேசு தந்தையிடம் புகழ்ச்சி இறைவேண்டல் செய்கிறார். தாம் வெளியே நிகழ்த்திய அரும் அடையாளங்கள் கண்டுகொள்ளப்படாமல் போனது தமக்கு அருகில் இருந்த திருத்தூதர்கள் தம்மைக் கண்டுகொண்டதற்காக நன்றி கூறுகிறார். இரண்டாவது பகுதியில், ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.’ என்கிறார்.

இயேசுவின் சமகாலத்தில் மக்கள் அரசியல், சமூக, சமயத் தளங்களில் நிறைய சுமைகளைத் தாங்கி நின்றார்கள். அவர்களின் சுமைகளை நீக்குவதாக அல்ல, மாறாக, அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு மொழிகிறார்.

தொடர்ந்து, ‘என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். ‘நுகம்’ என்னும் விவசாயச் சொல் மாடுகளுக்கும் ஏருக்கும் அல்லது வண்டிக்குமான இணைப்பைக் குறிக்கிறது. விவிலியத்தில் ‘நுகம்’ என்பது அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. இயேசுவின் நுகத்துக்குக் கீழ் நம்மையே தாழ்த்தும்போது நாம் இளைப்பாறுதல் பெறுகிறோம்.

‘நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்’ என்று இயேசு தம் மதிப்பீடுகளை இங்கே எடுத்துரைக்கிறார். மலைப்பொழிவில் கனிவுடையோர் பேறுபெற்றோர் என வாழ்த்துகிறார்.

இன்றைய பதிலுரைப்பாடல், ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர் என எடுத்துரைப்பதுடன், தாழ்த்தப்பட்டோரை ஆண்டவர் உயர்த்துகிறார் என்னும் எதிர்நோக்கையும் தருகிறது.

முதல் வாசகத்தில், செக்கரியா இறைவாக்கினர் வரப்போகிற மெசியாவை முன்னுரைக்கிறார். அவர் கழுதைக்குட்டியின்மேல் ஏறி வருபவராகவும் அமைதியை அறிவிப்பவராகவும் மக்கள் நடுவே வருவார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் ஆவிக்குரிய இயல்பில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம்மை அழைக்கிறார்.

நாம் கற்கும் மூன்று பாடங்கள்: (அ) நம் சுமைகளை இயேசு நீக்குவதில்லை. அவற்றைச் சுமப்பதற்கான வழியைக் கற்பிக்கிறார். (ஆ) கனிவும் மனத்தாழ்மையும் இருக்கும் இடத்தில் சுமைகள் கனமாக இருப்பதில்லை. (இ) இயேசுவுடைய நுகத்தை நாம் ஏற்றுக்கொள்ள அவருடைய இயல்பில் பங்குபெற வேண்டும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment