இன்றைய இறைமொழி. சனி, 4 ஜூலை 2026. நல்லதையே ஆண்டவர் அருள்வார்

இன்றைய இறைமொழி
சனி, 4 ஜூலை 2026
பொதுக்காலம் 13-ஆம் வாரம்
ஆமோ 9:11-15. மத் 9:14-17

நல்லதையே ஆண்டவர் அருள்வார்

அரசர் 2-ஆம் எரோபோவாமின் ஆட்சிக் காலத்தில் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைத்த ஆமோஸ் அங்கு நிலவிய சமூக அநீதியையும் அறநெறிப் பிறழ்வையும் சமய வெளிவேடத்தையும் சாடுகிறார். அவர்கள் எதிர்கொள்ளப் போகிற தண்டனையைப் பற்றிப் பேசி முடித்தவுடன், அவர்களுக்கு ஆண்டவர் வழங்கும் எதிர்நோக்கை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்காக உரைக்கிறார்.

கடவுளின் புதுப்பித்தல் மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) வீழ்ந்து கிடக்கும் தாவீதின் கூடாரம் மீண்டும் நிலைநிறுத்தப்படும். (ஆ) விவசாய எழுச்சி – அறுவடையில் மிகுதி. (இ) மக்கள் அனுபவிக்கும் நிலைத்தன்மையும் பாதுகாப்பும் – அவர்கள் மற்ற நாடுகளில் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். நிலையான அமைதியை அனுபவிப்பார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை என்று திருமுழுக்கு யோவானின் சீடர்கள் கேட்கிறார்கள். மணமகன், ஆடை, மது தோற்பை ஆகிய உருவகங்களைக் கையாள்கிற இயேசு தம்மில் புதிய காலம் தொடங்கிவிட்டது என அறிவிக்கிறார்.

இயேசுவின் சமகாலத்து யூத மரபில், நோன்பிருத்தல் என்பது அழுகை, மனமாற்றம், ஏக்கம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருந்தது. இயேசு தம்மையே மணமகன் என முன்மொழிகிறார். திருமண நிகழ்வு மகிழ்ச்சியின் நிகழ்வாக இருந்தது. மணமகன் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் – இறப்புக்குப் பின்னர் – மற்றவர்கள் நோன்பிருப்பர்.

பழைய ஆடை நைந்து போயிருக்கும். புதிய ஆடையைக் கொண்டு ஒட்டுப் போட்டால் அதன் அடர்த்தியைப் பழைய ஆடை தாங்க இயலாமல் கிழிசல் ஏற்படும். மது சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற தோற்பைகள் நாளடைவில் தங்கள் இலகுவான தன்மையை இழந்து கடினமாக மாறிவிடும். கடினமான அத்தோற்பையில் புதிய இரசத்தை ஊற்றினால் தோற்பை வெடித்துவிடும்.
இயேசுவின் வருகையில் பழையன மறைந்து புதியன பிறக்கின்றன.

இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 85), ‘நல்லதையே ஆண்டவர் அருள்வார்’ என்கிறார் ஆசிரியர். முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் மக்களுக்கு எதிர்நோக்கை வழங்குகிறார். நற்செய்தி வாசகத்தில் மகிழ்ச்சியை வழங்குகிறார்.

ஆண்டவராகிய கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வைப் புதுப்பிக்கிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment