இன்றைய இறைமொழி
திங்கள், 6 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
ஓசே 2:14-16, 19-20. மத் 9:18-26
ஆண்டவரை அறிந்துகொள்தல்
(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருளும்
இஸ்ரயேல் மக்களின் ஆன்மிகப் பிரமாணிக்கமின்மையைச் சாடிய இறைவாக்கினர் ஓசேயா தொடர்ந்து கடவுள் காட்டும் நிபந்தனையற்ற அன்பை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
‘திருமண உருவகம்’ – ஓசேயாவின் மனைவி கோமர் அவரிடம் பிரமாணிக்கமாக இல்லை. கோமர் மற்ற கணவர்கள் பின்னால் சென்றதுபோல, இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளை விடுத்து பாகால் பின்னால் செல்கிறார்கள்.
‘ஆக்கோர் பள்ளத்தாக்கு’ – ஆகோர் பள்ளத்தாக்கு தோல்வியின் பழிதீர்த்தலின் அடையாளமாகக் கருதப்பட்டது (காண். யோசு 7). அந்த இடத்தை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுகிறார் கடவுள்.
‘நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்’ – மற்ற கடவுளர்கள் இஸ்ரயேலுக்குக் கண்ணியாக இருந்து அவர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள்.
‘என் கணவன்’, ‘என் பாகால்’ – திருமண உறவில் மனைவி கணவரை ‘என் பாகாலே’ என அழைப்பார். ‘பாகாலே’ என்பது அவர்களுக்கு ‘பாகால்’ கடவுளை நினைவூட்டும் என்பதால், ‘ஈஷி’ (‘என் ஆணே, என் மனிதனே) என்று அவர்கள் அழைப்பார்கள்.
‘நீடித்த ஒப்பந்தம்’ – கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்கிற ஒப்பந்தம் அவர்களின் செயல்பாட்டைப் பொருத்து அல்ல, மாறாக, அவருடைய நன்மைத்தனத்தைப் பொருத்தே அமைகிறது – கடவுளின் நேர்மை, நீதி, பேரன்பு, இரக்கம், நம்பகத்தன்மை.
(ஆ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருளும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இரண்டு வல்ல செயல்கள் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘தொழுகைக்கூடத் தலைவர்’ – மாற்கு (5) மற்றும் லூக்கா (8) நற்செய்தியாளர்கள் ‘யாயிர்’ என்று இவரை அழைக்கிறார்கள். சமயத் தலைவராக இருந்த ஒருவர் இயேசுவின்முன் பணிந்து நிற்கிறார். இது அவருடைய உடனடித் தேவையையும் நம்பிக்கையையும் காட்டுகிறது.
‘இரத்தப் போக்கினால் வருந்திய பெண்’ – உடல் வலி, பொருளாதார இழப்பு, சமூக அந்நியப்படுத்துதல் ஆகியவற்றால் துன்புற்றார் பெண். யூதத் தூய்மைச் சட்டத்தின்படி (லேவி 15) அந்தப் பெண் தீட்டானவர். அவர் யாரையும் எதையும் தொட்டாலும் அவர்களும் அவையும் தீட்டாகிவிடும்.
‘இயேசுவின் ஆற்றல்’ – அந்தப் பெண் தொட்டவுடன் இயேசு தீட்டுப்படவில்லை. மாறாக, இயேசுவின் ஆற்றல் அவருக்கு நலம் தருகிறது.
‘இறப்பின்மேல் ஆற்றல்’ – தொழுகைக்கூடத் தலைவரின் இல்லத்துக்கு வருகிற இயேசு அங்கே நிலவிய அழுகையையும் புலம்பலையும் கடிந்துகொள்கிறார். இயேசுவைப் பொருத்தவரையில் இறப்பு என்பது தூக்கம். இறந்த உடலைத் தொடுவது தீட்டு என்று கருதப்பட்டது. இயேசு குழந்தையின் கையைத் தூக்குகிறார்.
(இ) வாழ்வியல் சவால்கள்
தொழுகைக்கூடத் தலைவரும் இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணும் இயேசுவின் ஆற்றலை அறிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். தம்மை அறிந்துகொள்ளுமாறு இஸ்ரயேல் மக்களை அழைக்கிறார் ஆண்டவராகிய கடவுள். ‘அறிந்துகொள்தல்’ என்பது நெருக்கமான உறவைக் காட்டுகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment