இன்றைய இறைமொழி. திங்கள், 1 ஜூன் 2026. ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது!

இன்றைய இறைமொழி
திங்கள், 1 ஜூன் 2026
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
புனித ஜஸ்டின் மறைசாட்சி, நினைவு

2 பேது 1:1-7. மாற் 12:1-12

ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது!

இன்று புதிய மாதத்தைத் தொடங்குகிறோம். கடந்த மாதம் முழுவதும் நாம் பெற்ற அனைத்து நன்மைகளுக்காகவும் கடவுளுக்கு நன்றிகூறுவோம். இந்தப் புதிய மாதத்தில் அவருடைய அருளும் இரக்கமும் நம் அனைவருக்கும் கிடைக்க இறைவேண்டல் செய்வோம்.

‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது.
இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று’

என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் மறைநூலை (காண். திபா 118:22) மேற்கோள் காட்டுகிறார் இயேசு. இயேசுவுடைய பணியும், போதனையும், வல்ல செயல்களும் அவருடைய எதிரிகளுக்கு தொந்தரவாக இருக்கின்றன. அவர்கள் அவரை அழித்துவிடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய தீய எண்ணத்தை ‘கொடிய குத்தகைக்காரர்கள்’ எடுத்துக்காட்டு வழியாக மொழிகிறார் இயேசு.

மகனை அழித்துவிட்டால் திராட்சைத் தோட்டம் தங்களுடையதாகிவிடும் என எண்ணுகிறார்கள் அவர்கள். ஆனால், கடவுளின் திட்டம் வேறு மாதிரியாக இருக்கிறது.

திராட்சைத் தோட்டம் என்றும் கடவுளுடையது என்று நமக்கு அறிவுறுத்துகிறது இன்றைய எடுத்துக்காட்டு. அந்தத் தோட்டத்தில் பணி செய்து நற்கனிகளைக் கொடுக்க நாம் நம்மையே தகுதியாக்கிக்கொள்ள வேண்டுமே அன்றி, அத்தோட்டத்தின் வளர்ச்சியைத் தடை செய்ய நம்மால் இயலாது.

கட்டுவோர் விலக்குகிற கல் மற்றவர்களால் உதறித் தள்ளப்பட்டு, மழையிலும் வெயிலிலும் கிடந்தாலும் அதுவே கட்டடத்தின் ஒட்டுமொத்த அமைப்பை நிர்ணயிக்கும் மூலைக்கல்லாக அடித்தளத்தில் நிற்கிறது.

கடவுளே நம் வாழ்க்கை என்னும் கட்டடத்தின் மூலைக்கல்லாக இருக்கிறார். நம் வாழ்க்கை இத்தகைய அடித்தளத்தின்மேல் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் வாழ நாம் அழைப்பு பெறுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பேதுருவின் இரண்டாம் திருமுகத் தொடக்கத்தை வாசிக்கிறோம். இங்கே ‘படிகள் நடை’ என்னும் இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி, இறைமக்கள் வாழ வேண்டிய நம்பிக்கை வாழ்க்கையை எடுத்துரைக்கிறார் பேதுரு:

‘நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்க முயற்சி செய்யுங்கள்.’

நம்பிக்கை என்பதே அனைத்துப் பண்புகளின் அடித்தளமாக இருக்கிறது.

இன்று மறைசாட்சியாளர் புனித ஜஸ்டினை (கிபி 100-165) நினைவுகூர்கிறோம். மெய்யியல் கற்றறிந்த இவர் அன்றைய உரோமைப் பேரரசர்கள் அந்தோனினுஸ் மற்றும் மாற்குஸ் அவுரேலியு அவர்கள் முன்மொழிந்த வதந்திகளுக்கு எதிராக எழுதி கிறிஸ்தவ இறையியலுக்கு வித்திடுகிறார். இயேசுவே யூத மெசியா என்றும் வாக்கு (லோகோஸ்) என்றும் துணிச்சலுடன் அறிவித்தார். உரோமை அதிகாரத்தால் தீர்ப்பிடப்பட்டு இவரும் இவருடைய நண்பர்களும் உரோமையால் மறைசாட்சிகளாகக் கொலை செய்யப்பட்டார்கள்.

இவர்களை அழித்தால் கடவுளை அழித்துவிடலாம் என எண்ணியது அன்றைய உரோமைப் பேரரசு. ஆனால், திராட்சைத் தோட்டம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது.

திராட்சைத் தோட்டத்தின் பொறுப்பான, நீதியான குத்தகைக்காரர்கள் வாழ நாம் முயற்சி செய்வோம். பேதுரு முன்மொழியும் பண்புகளால் நம் வாழ்வை அணி செய்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment