இன்றைய இறைமொழி. வியாழன், 16 ஜூலை 2026. உள்ளத்திற்கு இளைப்பாறுதல்

இன்றைய இறைமொழி
வியாழன், 16 ஜூலை 2026
பொதுக்காலம் 15-ஆம் வாரம்
தூய கார்மேல் அன்னை, விருப்ப நினைவு

எசா 26:7-9, 12, 16-19. மத் 11:28-30

உள்ளத்திற்கு இளைப்பாறுதல்

‘மண்ணில் வாழ்வதே மனிதருக்குப் பெரும் போராட்டம்’ என்கிறார் யோபு நூலின் ஆசிரியர் (காண். 7:1). மேலும், இறக்கின்ற ஒருவர் உழைப்பிலிருந்து விடுதலை பெறுகிறார் என்கிறது சாலமோனின் ஞானம் (காண். 4:7). ஆதாமின் பிள்ளைகளாகிய நாம் பிறப்பிலிருந்து சுமைகளைச் சுமந்துகொண்டே நிற்கிறோம். ‘நம் சுமைகளே நம்மை உயரே பறக்கச் செய்கின்றன’ என்கிறார் புனித அகுஸ்தினார்.

தம் சமகாலத்து மக்கள் நடுவே நிற்கிற இயேசு, ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்’ என்று அழைக்கிறார். சோர்வுக்கு மாற்றாக அவர் முன்மொழிவது ‘இளைப்பாறுதல்.’ இயேசு நம் உடலின் சுமைகளைக் குறைப்பதாக அல்லது எடுப்பதாக வாக்களிக்கவில்லை. மாறாக, நம் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார்.

‘கனிவும், மனத்தாழ்ச்சியும்’ கொண்டிருக்கிற உள்ளம் இளைப்பாறுதல் பெறுகிறது.

இன்றைய நாளில் அன்னை கன்னி மரியாவை கார்மேல் அன்னையாக நினைவுகூர்கிறோம். 1251-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் நாளில் புனித சைமன் ஸ்டாக் என்பவருக்குத் தோன்றிய அன்னை கன்னி மரியா நல்ல மரணத்திற்கான கருவியாக உத்தரியத்தை வழங்குகிறார். இது ஒரு மந்திரக் கயிறு அல்ல. மாறாக, நம் இறப்பை நமக்கு நினைவூட்டும் அடையாளம்.

இறப்பை மனத்தில் வைத்து வாழ்பவர் இங்கேயே இளைப்பாறுதலைக் கண்டடைகிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment