இன்றைய இறைமொழி. ஞாயிறு, 19 ஜூலை 2026. இரு விதைகளும் வினைகளும்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 19 ஜூலை 2026
பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு
சாஞா 12:13,16-19. உரோ 8:26-27. மத் 13:24-43

இரு விதைகளும் வினைகளும்

நாம் கடந்த ஞாயிறன்று வாசித்த ‘நான்குவகை நிலங்களின்’ தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று உவமைகள் தரப்பட்டுள்ளன: ‘வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு.’ முதல் உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. இதன் பின்புலம் இதுதான்: மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்: நேர்மையாளர்கள், பொல்லாதவர்கள். பொல்லாதவர்களைத் தங்கள் குழுமத்திலிருந்து வெளியேற்றுவதா? அல்லது அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதா? வெளியேற்றுவது என்றால் எப்போது வெளியேற்றுவது? வைத்துக்கொள்வது என்றால் எதுவரை வைத்துக்கொள்வது? அவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைகின்றது இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் உவமை: வயலில் தோன்றிய களைகள்.

வழக்கமாக, மத்தேயு நற்செய்தியாளரின் உவமைப் பொழிவில் சொல்லப்பட்டுள்ள உவமைகள் இறையாட்சி பற்றிய உவமைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த உவமை இரண்டு காரணங்களுக்காகச் சொல்லப்படுகிறது: ஒன்று, இறையாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்ன என்பதை அறிய. இரண்டு, இறுதி நாள் நிகழ்வுகளைப் பற்றியது அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடப்பது பற்றியது.

இன்றைய உவமையில், எல்லாம் இரட்டைப் படையில் இருக்கின்றன:

  1. விதைகள் இருவகை: கோதுமை, களை
  2. விதைப்பவர்கள் இருவகை: நிலக்கிழார், பகைவன்
  3. எதிர்வினைகள் இருவகை: அனைத்தையும் வளர விடுவது, களைகளைப் பறிப்பது
  4. விளைவுகள் இருவகை: கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது, களைகள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன
  5. உணர்வுகள் இருவகை: நிலக்கிழாரின் பொறுமை, வேலையாள்களின் அவசரம்
  6. மனிதர்கள் இருவகை: நேர்மையாளர், நெறிகெட்டோர்
  7. வாழ்வியல்நிலை இருவகை: கடவுளின் பொறுமை, மனித அவசரம்

‘கடவுளின் பொறுமை, மனித அவசரம்’ என்னும் இறுதி இணையை மையமாக வைத்து, இன்றைய நாள் வாசகங்களைப் புரிந்துகொள்வோம்.

‘பொறுமை’

முதலில், ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில், காந்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் மோகனிடம், ‘எனக்கு வைர நெக்லஸ் எப்போது வாங்கித் தருவீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு மோகன், ‘கொஞ்சம் பொறுமையாக இரு! மார்க்கெட் நிலவரம் சரியில்லை! கையில் உள்ள காசும் வேகமாகக் காலியாகிறது! அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை!’ என்று பதில் சொல்வார். உடனே காந்தா, ‘மோகன்! பொறுமையா? வறுமையில் இருப்பவர்கள் அல்லவா பொறுமையைப் பற்றிப் பேச வேண்டும்!’ எனச் சொல்லித் துள்ளி எழுவார்.

இங்கே சொல்லப்படும் பொறுமையின் பொருள் காத்திருத்தல்.

இரண்டாவதாக, உளவியலில் பொறுமை பொறுமை என்பது இடைவெளி. ‘தூண்டுதலுக்கும்’ (stimulus) ‘எதிர்வினைக்கும்’ (response) இடைப்பட்ட தொலைவு. எடுத்துக்காட்டாக, நான் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் இன்னொருவரிடம் பேசிக்கொண்டே இருக்கின்றார். அவர் செய்யும் தொந்தரவு எனக்கு ஒரு ‘தூண்டுதல்.’ ‘தம்பிகளா! எழுந்து வெளியே போங்க!’ என்று அவர்களைப் பார்த்துச் சொல்வது என் ‘எதிர்வினை.’ ஆனால், நான் எந்த எதிர்வினையை உடனே ஆற்றாமல், இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் தள்ளிப் போடுகிறேன். எவ்வளவு தூரம் என்னால் தள்ளிப் போட முடிகிறதோ அவ்வளவு நேரம் நான் பொறுமையாக இருக்கிறேன். மேலும், என்னுடைய பொறுமையின் அளவு கூடக் கூட என்னுடைய உணர்வு முதிர்ச்சி கூடுகிறது.

இந்தப் பொறுமையில் – இடைவெளியில் – என்னுள்ளும் மாற்றம் நிகழ்கிறது. என் மாணவர்களிலும் மாற்றம் நிகழ்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு வகுப்பைக் கவனிக்கத் தொடங்குகின்றனர்.

மூன்றாவதாக, காலம் அனைத்துக் காயங்களையும் ஆற்றும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியிலும் பொறுமையே பின்புலத்தில் இருக்கிறது. வெறும் காலம் மற்றும் காயங்களை ஆற்றுவதில்லை. மாறாக, காயம் பட்டவர் தன்னுடைய பொறுமையால் தன் காயத்தை எதிர்கொள்கின்றார். நாள்கள் ஆக, ஆக, அனுபவங்களும் நிகழ்வுகளும் மாற, மாற காயம் காலத்தில் கரைந்துவிடுகிறது. இங்கே காயம் பட்டவர் ஒரு பக்கம் ஓய்ந்திருந்தாலும், அவருடைய உள்ளத்தில் அவர் தன்னையே குணமாக்கிக் கொள்கிறார்.

வயலில் களைகளைக் கண்ட பணியாளர்களுக்குக் கோபம் வருகிறது.

தங்கள் தலைவரிடம் ‘வெரிகுட்’ வாங்குவதற்காக, அவரிடம் ஓடி, ‘வயலில் களைகள் காணப்படுவது எப்படி? நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?’ எனக் கேட்கின்றனர். இதைக்கேட்ட தலைவர் தனக்குள்ளே சிரித்திருப்பார். ‘ஏன்டா! சோம்பேறிகளா! நான் சொல்ற வேலையவே பாதி பாதிதான் செய்வீர்கள்! இப்ப என்ன ஓவர் பில்ட் அப்!’ எனத் தன் மனத்திற்குள் கேட்டிருப்பார். பணியாளர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டுபிடித்த அவர், ‘வேண்டாம்! இவ்வளவு ஆர்வத்திலும் அவசரத்திலும் நீங்கள் கோதுமையையும் பறித்துவிடுவீர்கள்!’

இத்தலைவர் வெறும் விவசாயி மட்டுமல்ல. மாறாக, மேலாண்மையியலில் சிறந்தவரும் கூட.

அதாவது, வயலின் ஒரு பாத்தியில் 50 கோதுமைச் செடிகள், 50 களைகள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். முளைத்து வருகின்ற பருவத்தில் கோதுமைச் செடிகளும், களைகளும் ஒன்றுபோலத் தெரியும். 40 களைகளோடு சேர்த்து 10 கோதுமைச் செடிகளையும் பறித்துவிட்டால் தலைவருக்கு 10 செடிகள் நஷ்டம். ஆனால், வேலைக்காரர்கள், ரொம்ப எளிதாக, ‘ஸாரி!’ சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இவர்களுக்கு அது வெறும் ‘ஸாரி!’ தான். தலைவருக்கோ அது அவருடைய சொத்து. வேகமாக மனக்கணக்கு போடுகிற அவர், தன்னுடைய எந்தக் கோதுமையையும் இழக்கத் தயாராக இல்லை.

தலைவன் இங்கே பொறுமை காப்பதால் சில பிரச்சனைகளும் எழுகின்றன:

அ. களைகள், கோதுமைக்குத் தேவையான நிலத்தின் ஊட்டத்தை எடுத்துக்கொள்கின்றன.

ஆ. களைகள், கோதுமைக்குப் பாய்ச்சப்படும் நீரைப் பறித்துக்கொள்கின்றன.

இ. களைகள், பல பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தங்கள்பால் ஈர்ப்பதால், அவற்றாலும் கோதுமைப் பயிருக்கு தீங்கு நேர்கின்றது.

ஈ. களைகள் மண்டிக் கிடக்கும்போது அது வயலின் அழகைக் கெடுக்கிறது.

ஆனாலும், தலைவர் அமைதி காக்கிறார்?

ஏன்?

ஒரு கோதுமைப் பயிர்கூட அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மேற்காணும் அனைத்துப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொள்கின்றார்.

இதுதான் கடவுளின் பொறுமை. ஆக, கடவுள் காத்திருக்கின்றார்.

ஆனால், என்னுடைய பொறுமையான நேரத்தில் என் மாணவர்களின் இயல்பு மாறுவதுபோல, களைகளின் இயல்பு மாறுவதில்லை. களை எப்போதும் களைதான். பாதி தூரம் களையாக வந்தபின் அது கோதுமையாக மாற முடியாது. களையின் இயல்பு தன்னுடைய காத்திருத்தலால் மாறாது என்று தெரிந்தாலும் கடவுள் காத்திருக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு உவமைகளிலும் ஏறக்குறைய இதே பண்பை நாம் பார்க்கிறோம்: சிறிய பொருள்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன, அவை சிறியவை என்றாலும் நிறைய ஆற்றல் பெற்றிருக்கின்றன, அவற்றின் வளர்ச்சியை நாம் நிறுத்தவோ, பின்நோக்கித் தள்ளவோ முடியாது. வளர்ந்த கடுகு மரத்தை மீண்டும் விதைக்குள் அடைக்க இயலாது. புளிப்பேறிய மாவை மீண்டும் புளிப்பற்றதாக்க இயலாது.

கடவுளின் பொறுமை எதிரியின் செயலை இறுதியில் அழிக்கின்றது. களைகளின் இருப்பு கோதுமைப் பயிர்களுக்கு நெருடலாக இருந்தாலும், இறுதியில் களைகள் பறித்து எரிக்கப்படும்வரை அவை காத்திருக்க வேண்டும். களைகளின் இருப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்வாதரமான தண்ணீரும், உரமும், ஊட்டமும் அநீதியாகப் பகிரப்படுவதை அல்லது பறித்துக்கொள்ளப்படுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் பொறுமை பல நேரங்களில் நம் அவசரத்தோடு பொருந்துவதில்லை.

நம்பிக்கையின் பிதாமகன் என அழைக்கப்படுகின்ற ஆபிரகாமே, தனக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும் என்ற பொறுமை இல்லாமல், தனக்கான வாரிசாக, தன்னுடைய அடிமையின் மகன் எலியேசரை, உரிமைப் பிள்ளையாக தத்தெடுக்க முனைகின்றார்.

மீட்பின் நாயகன் என அழைக்கப்படுகின்ற மோசே, ‘பாறைக்குக் கட்டளையிடு!’ என்று கடவுள் சொன்னதை மறந்து, ‘பாறையை இருமுறை அடித்து!’ தன்னுடைய அவசரத்தால், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றார்.

இஸ்ரயேலின் முதல் அரசராகிய சவுல், ஆண்டவருக்குப் பலி செலுத்தி, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என அவசரப்பட்டு, அமலேக்கியரின் கால்நடைகளை அழிக்காமல், அவற்றை ஆண்டவருக்கென ஒதுக்கி வைத்ததால் அரச நிலையை இழக்கின்றார்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகிய தாவீது, ‘ஆண்டவரிடம் கேட்டால் அவர் எனக்கு மனைவியரைத் தருவார்’ என்று அறிந்திருந்தாலும், அவசரப்பட்டு பெத்சேபாவைத் தழுவிக்கொள்கின்றார். அவளுடைய கணவனைக் கொல்கின்றார். விளைவு, வாள் அவருடைய தலைக்குமேல் இறுதிவரை தொங்கிக்கொண்டே இருந்தது.

மனித அவசரங்கள் பல நேரங்களில் கோதுமைப் பயிர்களை அழிப்பதோடு, நிலத்தையும் பாழ்படுத்திவிடுகின்றன.

இன்றைய வாசகங்கள் விண்ணரசு பற்றிச் சொல்வது என்ன? கடவுள் பொறுமை உள்ளவர். விண்ணரசு சிறிய அளவில் தொடங்கி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விண்ணரசின் வளர்ச்சியை யாரும் தடுக்க இயலாது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கும் தரும் பாடம் என்ன? ஒவ்வொரு நாளும் நாம் இரு விதைகளையும் வினைகளையும் சந்திக்கின்றோம். இவற்றை நாம் எதிர்கொள்ள நமக்குத் தேவை கடவுளின் பொறுமை.

கடவுளின் பொறுமையை நாம் எப்படி பெறுவது?

  1. நம் பார்வையை அகலப்படுத்துவது. களை வளர்ந்து பயிராவதை, கடுகு விதை பெரிய மரமாக மாறுவது, மாவு முழுவதும் புளிப்பேறுவதை என்று முழுமையாகக் காணக் கற்றுக்கொள்வது. முதல் உவமையில், பணியாளர்கள் வயலில் தற்போது இருக்கும் களைகளை மட்டுமே பார்த்தார்கள். தலைவரோ, கோதுமையும் களைகளும் இறுதியில் எப்படி மாறும் என்பதைப் பார்த்தார். குறுகிய பார்வை உடனடிச் செயல்பாட்டுக்கு நம்மைத் தூண்டுகிறது – பணியாளர்களின் அவசரம் போல! பரந்த பார்வை நமக்கு பொறுமையைத் தருகிறது.
  2. தீமையின் இருப்பை ஏற்றுக்கொள்வது. தீமை என்னுடைய நன்மையை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்ற தாராள மனம் கொள்வது. நம்மிடமிருக்கும் தீமையைக் களைய நம்மால் இயலும். மற்றவர்களிடம் உள்ள தீமையை நம்மால் களைய இயலாது. அப்படிக் களைய முயற்சி செய்தால் நாம் சோர்ந்துவிடுவோம்.

இரண்டாம் வாசகத்தில் பவுல், ‘தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்’ என எழுதுகிறார். தீமைகளைத் தாங்கிக்கொள்வது என்பது நம்மை வலுவற்றதாக்கி விடுகிறது. நாம் களைகளின் நடுவில் சிக்கிக்கொண்ட கோதுமைப் பயிர்களாக, ஆண்டவரை நோக்கி பெருமூச்சு எழுப்பினாலும் (காண். இரண்டாம் வாசகம்), அவர், பல நேரங்களில், ‘பொறு!’ என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், ‘மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர்!’ என்று கடவுளைப் பார்த்துக் கூறுகிறார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர். நீதிமான்கள் மற்றும் பொல்லார் என்னும் இரண்டு குழுவினரை நாம் இந்நூலில் சந்திக்கிறோம். கடவுளையும் கடவுள்சார்ந்த நெறியையும் தேர்ந்துகொண்டவர்கள் நீதிமான்கள். மற்றவர்கள் பொல்லார்கள்.

  1. நாம் நன்மைத்தனத்தில் வளர்வது.

நாம் வாழும் இரட்டைத்தன்மை உலகத்தில், நன்மையும் தீமையும் தொடர்ந்து இருக்கும் என்றாலும், நன்மையால் தீமையை வெல்ல முடியும் என்னும் எதிர்நோக்கை இறைவார்த்தை நமக்குத் தருகிறது. நம்மிடம் உள்ள தீமையை அகற்ற இயலாது. ஆனால், நன்மைத்தனத்தால் அதை நியூட்ரலைஸ் செய்ய இயலும். களைகள் மட்டுமே உள்ள உலகில் நாம் நிறைய கோதுமையை வளர்த்தால், நம் நன்மைத்தனம் என்பது கடுகு விதை போல, புளிப்பு மாவு போல தொடர்ந்து செயல்பட்டால், நன்மையால் நாம் உலகை நிரப்பலாம். மற்றவர்களின் தீமை என் நன்மைத்தனத்தைக் கட்டுப்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இறுதியாக, ஏனெனில், அவர் ‘பொறுமையும், பேரன்பும் கொண்டவர்’ (காண். முதல் வாசகம், பதிலுரைப் பாடல், திபா 86).

பொறுமை ஞாலத்திலும் பெரிது என நாம் கற்றிருக்கிறோம். பல ஆண்டுகள் கட்டிக் காத்த உறவுகள், வளர்த்த திட்டங்கள் அனைத்தும் சில நொடிகள் பொறுமையின்மையால் உடைந்துவிடுகின்றன. இந்தப் பொறுமையின்மையை சில நேரங்களில் நாம் நியாயப்படுத்தவும் செய்கிறோம். கடவுளின் பொறுமையே நமக்குப் பாடமாக அமையட்டும் – இன்றும் என்றும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment