இன்றைய இறைமொழி
திங்கள், 20 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் – திங்கள்
திப 6:8-15. யோவா 6:22-29
பிறழ்வுபட்ட தேடல்
இயேசு அப்பம் பலுகச் செய்தபின், வாழ்வுதரும் உணவு பற்றிய நீண்ட உரையைப் பதிவு செய்கின்றார் யோவான். அந்த உரைக்கான முன்னுரையே இன்றைய நற்செய்திப் பகுதி.
இந்த வாசகத்தில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன:
அ. ரபி, எப்போது இங்கு வந்தீர்?
மக்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. தாங்கள் உணவு உண்ட இடத்திலேயே இயேசுவைக் காணலாம் நினைத்து மக்கள் அங்கே வருகிறார்கள். ஆனால், அவரோ அதற்கு நேர் எதிரே உள்ள கப்பர்நாகூம் சென்றுவிட்டார். அங்கு அவரைத் தேடிச் சென்று, அவரைக் காண்கின்ற மக்கள், ‘ரபி, எப்போது இங்கு வந்தீர்?’
ஆனால், இயேசு இக்கேள்விக்கு விடையளிக்கவில்லை. மாறாக, அவர்கள் வந்ததன் நோக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவர்களை அழைக்கின்றார்.
அவர்களின் தேவை உடல் சார்ந்த அப்பமாக மட்டும் நின்றுவிடாமல், அழியாமல் நிலைவாழ்வு தருகின்ற ஒன்றைத் தேடுமாறு பணிக்கின்றார்.
ஆ. எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
இக்கேள்வியையும் மக்களே இயேசுவைப் பார்த்துக் கேட்கின்றனர். இது ஒரு நல்ல கேள்வி. இங்கே இயேசுவின் பதில் நேரிடையாக இருக்கிறது: ‘கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்’
இம்மக்களின் பிறழ்வுபட்ட தேடலை எடுத்துக்கொள்வோம்.
அது என்ன பிறழ்வுபட்ட தேடல்?
முதல் நாள் நிகழ்வு: இயேசு படகில் ஏறவில்லை. சீடர்கள் மட்டுமே ஏறுகின்றார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்வு: நிறையப் படகுகள் வருகின்றன. ஆனால் அதில் இயேசுவும் இல்லை, சீடர்களும் இல்லை.
இதற்கிடையில் உள்ள ஒன்றை அவர்கள் காணவில்லை. அது என்ன?
‘இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்’
இதுதான் அவர்களின் தேடலில் விழுந்த ஓட்டை.
இயேசுவை நேருக்கு நேராகப் பார்த்து அவரைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்க்க மறந்துவிட்டார்கள். அல்லது தங்களுக்கு வசதியான இடத்தில் மட்டும் இயேசுவை அவர்கள் தேடினார்கள்.
ஒருவேளை அவர் மலைக்குச் சென்றதை அவர்கள் கவனித்திருந்தால் இயேசுவைப் பற்றிய பார்வை அவர்களுக்கு மாறியிருக்கும். அவரது அரசாட்சி ஆன்மிகம் சார்ந்தது என எண்ணியிருப்பார்கள்.
கடவுள் இங்கேதான் இருக்க வேண்டும், கடவுள் இப்படித்தான் இருக்க வேண்டும் என மனித அறிவு அவருக்கு வரையறை இடவே விரும்புகிறது.
வரையறைகளை மிஞ்சும் இறைவனை நாம் நம்பினால் போதும். அவர் நம் வரையறைக்குள் வந்துவிடுவார். இதுதான் கடவுளின் வலுவின்மை.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டர் ஸ்தேவான் அவருடைய சமகாலத்து சமயத் தலைவர்களால் எதிர்க்கப்படுகிறார். ‘அவரது ஞானத்தையும் தூய ஆவி வழியாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க இயலவில்லை.’
திருத்தொண்டர் ஸ்தேவான் கடவுளோடு கொண்டுள்ள உறவில் நிலைத்திருக்கிறார். அவர் எதிர்ப்பை எளிதாக எதிர்கொள்கிறார். கடவுளோடு இணைந்து தேடும்போது நம் தேடலின் பிறழ்வு நெறிப்படுத்தப்படுகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment