இன்றைய இறைமொழி
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு
எசா 56:1, 6-7. உரோ 11:13-15, 29-32. மத் 15:21-28
உமது நம்பிக்கை பெரிது!
‘நம்பிக்கை’ என்னும் ஒற்றைச்சொல் நம் வாழ்க்கையின் பல திருப்பங்களுக்குக் காரணமாக அமைகிறது. சில நேரங்களில் இந்த நம்பிக்கை அவநம்பிக்கை, அதீத நம்பிக்கை, அவநம்பிக்கை என்று பிறழ்வுபட்டு நிற்கிறது. இறைநம்பிக்கை, பிறர்மேல் நம்பிக்கை, தன்னம்பிக்கை என்னும் நேர்முகமான நம்பிக்கைகள் நம் வாழ்வை மேம்படுத்துகின்றன.
(அ) நற்செய்தி வாசகம்: புறவினத்துப் பெண்ணின் நம்பிக்கை
நிகழ்வில் காணும் நபர் மூன்று நிலைகளில் வலுவற்றவராக இருக்கிறார்: அவர் ஒரு பெண், புறவினத்துப் பெண், பேய்பிடித்த குழந்தையின் தாய். கானானியப் பெண்ணின் நம்பிக்கை பேதுருவின் நம்பிக்கைக் குறைவுக்கு முரணாக முன்வைக்கப்படுகிறது. இயேசு முதலில் அவரைக் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவரை நிராகரிக்கிறார், இறுதியில் வல்ல செயலை நிகழ்த்துகிறார்.
தீர், சீதோன் பகுதிகளில் புறவினத்தார்கள் வாழ்ந்தார்கள். ‘தாவீதின் மகனே’ என்று இயேசுவை அழைக்கிறார் பெண். ‘ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி’ என்று தன் நற்செய்தியை அறிமுகம் செய்கிறார் மத்தேயு. ‘பிள்ளைகளுக்கு உரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறை அல்ல’ என்று கூறுகிறார் இயேசு. இஸ்ரயேல் மக்கள் தங்களைக் கடவுளுடைய உடன்படிக்கையின் பிள்ளைகள் என அழைத்து புறவினத்தாரை நாய்கள் என்று அழைத்தார்கள். ‘நாய்’ தீட்டான விலங்குகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது. ஆனாலும் சிலர் நாய்களைச் செல்லப் பிராணிகளாகவும் வளர்த்தார்கள் (காண். தோபித்து நூல், லூக்கா நற்செய்தியில் காணும் செல்வந்தர்-இலாசர் நிகழ்வு).
இஸ்ரயேலின் சிதறுண்டு போனவர்களுக்கே தன்னுடைய பணி என்னும் இயேசுவின் சொற்கள் மத்தேயு குழுமத்தில் நிலவிய பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகிறது. புறவினத்தார்கள் உடன்படிக்கையின் வழியாக அல்ல, மாறாக, நம்பிக்கையின் வழியாக புதிய குழுமத்தின் உறுப்பினர்களாக மாறுகிறார்கள்.
நிகழ்வில் காணும் பெண் தன் வரையறை அனுபவத்தின் உச்சத்தில், நொறுங்குநிலையின் உச்சத்தில் இயேசுவைத்தேடி வருகிறார். அதிர்ஷ்டம் என்பது செயலாற்றுபவர்களுக்கே என்பதைக் காட்டுகிறார் இந்தப் பெண். நம்பிக்கையில் தளராமல் நிற்கிறார். ‘முறை-முறை அல்ல’ என்னும் இரட்டைத்தன்மையைத் தாண்டி வாழ்க்கையை ஒற்றைத்தன்மையில் பார்க்கிறார்.
(ஆ) முதல் வாசகம்: புறவினத்தாரும் எருசலேம் கோவில் வருவர்
எசாயா நூலின் மூன்றாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகப் பகுதி பாபிலோனிய நாடுகடத்தலுக்குப் பின்னர் எழுதப்படுகிறது. பாபிலோனிய நாடுகடத்தலுக்கு முன்னர் இஸ்ரயேல் மக்கள் மீட்பு தங்களுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறார்கள். நாடுகடத்தலுக்குப் பின்னர் அவர்களுடைய பார்வை அகலமாகிறது. அனைவரையும் உள்ளடக்கிய பார்வையைப் பெறுகிறார்கள். கடவுளுடைய உடன்படிக்கையின் அடையாளமாகவும் சமூகப் பாகுபாட்டின் (தூய்மை-தீட்டு) மையமாகவும் இருந்த எருசலேம் கோவில் அனைவருக்குமான இறைவேண்டலின் வீடு என்று மாறுகிறது.
(இ) இரண்டாம் வாசகம்: கொடைகளைத் திரும்பப் பெறாத கடவுள்
இஸ்ரயேல் மக்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று வருந்துகிற பவுல், ‘கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை’ என்கிறார். கடவுளின் தாராள உள்ளமும் இரக்கமும் இங்கே புலப்படுகிறது.
(ஈ) பதிலுரைப்பாடல்: அனைவருக்கும் கடவுள்
இஸ்ரயேல் மக்களின் ஆண்டவரை அனைத்துலக மக்களின் கடவுளாக அறிக்கையிட்டுப் போற்றுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
இன்றைய நாளில் நம் கற்கும் மூன்று பாடங்கள்:
(அ) இறைநம்பிக்கையில் வளர்தல், தன்னம்பிக்கையில் வளர்தல்.
‘நம்பிக்கை குன்றியவனே!’ என்று பேதுருவைக் கடிந்துகொள்கிறார் இயேசு. ‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது!’ என்று கானானியப் பெண்ணைப் பாராட்டுகிறார் இயேசு. நம்பிக்கை என்பது எதிர்நோக்கியிருப்பவை பற்றிய ஐயமற்ற நிலை (காண். எபி 11). இயேசுவால் தன் மகளுக்கு நலம் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறார் பெண். நம் வாழ்வின் நகர்வுகளைப் பற்றிய ஐயமற்ற நிலையே நம்பிக்கை.
(ஆ) உணர்ச்சிப் பொங்குதலை விடுத்து அறிவார்ந்த முறையில் ஆய்ந்தறிந்து பதிலிறுப்பு செய்தல்.
தனக்கு நடப்பவற்றைக் கட்டுக்குள் வைக்க இயலாது. ஆனால் அவற்றுக்கான பதிலிறுப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று அறிந்தவராக இருக்கிறார் பெண். நம்பிக்கை என்பது வெறும் உணர்வுக் கொப்பளிப்பு அல்ல. மாறாக, ஆய்ந்தறிந்து நாம் செய்கிற செயல்பாடு எனக் கற்பிக்கிறார் பெண்.
(இ) வலுவற்றவர்களைப் பாதுகாத்தல்.
வலுவற்ற தன் மகளுக்காக எந்த இழிவையும் துன்பத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறார் பெண். வலுவற்றவர்களுக்குத் துணைநிற்க வேண்டும். பிள்ளைகள் வேறு, நாய்க்குட்டிகள் வேறு என்று பிரித்துப் பார்த்தார் இயேசு. ஆனால், பிள்ளைகள் வயிற்றிலும் நாய்க்குட்டிகள் வயிற்றிலும் இருப்பது ஒரே ரொட்டித் துண்டு என இணைத்துப் பார்க்கிறார் பெண். நாம் ஒருவர் மற்றவருக்குள்ள ஒன்றிப்பைப் பார்க்கும்போது வலுவற்றவர்களைக் காப்பாற்றுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment