இன்றைய இறைமொழி
புதன், 30 செப்டம்பர் 2026
பொதுக்காலம் 26-ஆம் வாரம்
யோபு 9:1-12, 14-16. லூக் 9:57-62
சீடத்துவத்தின் சவால்கள்
மற்றவர்கள் இயேசுவைப் பின்பற்றும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகிறது. யாரெல்லாம் தாமாகவே விரும்பி இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார்களோ, அவர்களைத் தடுக்கிறார் இயேசு. அவர் அழைத்தாலன்றி யாரும் அவரைப் பின்பற்ற இயலாது.
‘நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்!’ என்று தம்மிடம் சொல்கிற ஒருவரிடம் சீடத்துவத்தின் மூன்று சவால்களை எடுத்துரைக்கிறார். இயேசு, அவரைச் சுற்றி எந்நேரமும் ஒரு கூட்டம், அவர் ஆற்றும் வல்ல செயல்கள் என்று அவர்மேல் ஈர்ப்பு கொண்டிருக்கலாம் இந்தச் சீடர். சீடத்துவம் என்பது வெறும் வெளிப்புற ஈர்ப்பு அடிப்படையில் உள்ளது அல்ல என எடுத்துச் சொல்கிறார் இயேசு.
(அ) தலைசாய்க்கவும் இடமில்லை
இல்லம் அல்லது வீடு என்பது நாம் தங்கி ஓய்வெடுக்கும், தலைசாய்க்கும் இடமாக இருக்கிறது. மனிதர்களின் பாதுகாப்புத் தேவையை இது உறுதிசெய்கிறது.
(ஆ) இறந்தோர் அடக்கம் செய்யப்படுவர்
பழையவற்றையும் கடந்தவற்றையும் இறந்தவற்றையும் தூக்கிக்கொண்டு செல்லக் கூடாது. கடந்தவை பற்றிய நினைவு நமக்குச் சில நேரங்களில் துன்பம் தரக்கூடியவையாகவும், சில நேரங்களில் பெருமை உணர்வு தரக்கூடியவையாகவும் இருக்கிறது.
(இ) கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் கூடாது
இது ஒரு விவசாய உருவகம். வயிலில் கலப்பை பிடித்து உழுதுகொண்டிருப்பவரின் கவனம் முன்நோக்கி இருக்க வேண்டும். பின்நோக்கிப் பார்த்தல் உழுவதன் வேகத்தைக் குறைக்கும், உழுதலை மேலோட்டமானதாக்கும், சில வேளைகளில் கலப்பை உழுபவரின் காலில்மேல் ஏறிவிடும். தொடர்ந்த ஓட்டம் அல்லது விடாமுயற்சி அவசியம்.
சீடத்துவம் பற்றிய நம் பார்வையை அகலமாக்குகிறார் இயேசு.
பற்றுகள் விடுத்தல், கடந்தகாலம் மறத்தல், தயக்கமில்லாத தொடர் ஓட்டம் ஆகியவை நமக்கான சவால்கள்.
நம் வாழ்வைப் பயணம் மேம்படுவதற்கான பாடங்களாகவும் இவை அமைகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், யோபு தன் நண்பர்களுக்குத் தரும் முதல் மறுமொழியை வாசிக்கிறோம்: ‘என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே மன்றாடுவேன்!’ என்கிறார் யோபு. நீதிபதியான கடவுள் நம்மேல் இரக்கம் காட்டுகிறார். அவரைப் பின்பற்றும் நம் பயணத்தில் தளர்ச்சி ஏற்படும்போது அவர் நம்மைத் தூக்கிக்கொள்கிறார்.
இன்று நாம் புனித எரோணிமுவை நினைவுகூர்கிறோம். ‘விவிலியத்தை அறியாதவர் கிறிஸ்துவை அறியாதவர்’ என மொழிந்த இவர், திருவிவிலிய வாசிப்பு வழியாக கடவுளை நாம் அறிந்துகொள்ள முடியும் என்ற உறுதியைத் தருகிறார். எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியிலிருந்த விவிலியத்தை இலத்தீன் மொழிக்கு மொழிபெயர்க்கிறார். இறைவார்த்தைக்கான இவருடைய ஆர்வமும் திறமையும் பாராட்டுதற்குரியவை. ஆர்வம் பிறக்கும் இடத்தில் ஆற்றல் பிறக்கும் எனக் கற்பிக்கிறார் இந்தப் புனிதர். நம் இல்லத்தில் உள்ள திருவிவிலியத்தைத் திறந்து அதன் சில பக்கங்களையாவது இன்று வாசிப்போம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment