நிறைந்த சதுக்கங்கள், காலியான ஆலயங்கள்

நிறைந்த சதுக்கங்கள், காலியான ஆலயங்கள்

திருத்தந்தை பதினான்காம் லியோஅவர்களின் திருத்தூதுப் பயணங்கள் திருச்சபைக்கு என்ன சொல்கின்றன?

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அண்மைய திருத்தூதுப் பயணங்களில் காணப்பட்ட காட்சிகள் மிகவும் தாக்கமளிப்பவையாக உள்ளன.

ஸ்பெயின், ஆப்பிரிக்கா, பாரிஸ், லூர்து என பல இடங்களில் மிகப்பெரிய மக்கள் கூட்டங்கள் அவரை வரவேற்கவும், அவருடன் செபிக்கவும், திருப்பலியில் பங்கேற்கவும் திரண்டன. திருத்தந்தை, திருப்பயணம், புனிதத் தலங்கள், சமய அனுபவம் ஆகியவை இன்னும் மக்களை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை இவை காட்டுகின்றன.

ஆனால் இக்காட்சிகள் ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகின்றன:

திருத்தந்தை வரும்போது இவ்வளவு மக்கள் கூடுகிறார்கள் என்றால், சாதாரண ஞாயிற்றுக்கிழமைகளில் ஏன் பல ஆலயங்கள் (ஐரோப்பாவிலும், மற்றும் பல இடங்களிலும்) காலியாக இருக்கின்றன?

இதற்கான முதல் விளக்கம் இதுதான்: திருத்தந்தையைச் சுற்றி திரளும் கூட்டமும், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்கும் சமூகமும் ஒரே விடயத்தைக் குறிப்பதில்லை.

திருத்தந்தையின் வருகை சமய ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது.
ஞாயிறு திருப்பலி இறைநம்பிக்கையையும் தனிநபர் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

ஒருவர் திருத்தந்தையைப் பார்க்க பல மணி நேரம் பயணம் செய்யலாம். ஆனால் வழக்கமாக திருப்பலியில் பங்கேற்காமல் இருக்கலாம். ஒருவர் லூர்து செல்லலாம், பேராலயத்திற்குள் நுழையலாம், மெழுகுவர்த்தி ஏற்றலாம், ஒரு வழிபாட்டால் ஆழமாகத் தொடப்படலாம்; ஆனாலும் தன்னை நடைமுறை கத்தோலிக்கர் என்று கருதாமல் இருக்கலாம்.

அது அவர்களின் நம்பிக்கை மேலோட்டமானது என்று பொருள்படாது. இன்றைய மனிதர் சமயத்தை வேறொரு முறையில் வாழ்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

மரபாகப் பெற்ற நம்பிக்கையிலிருந்து தனிநபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக்கு

பல தலைமுறைகளாக, குறிப்பாக ஐரோப்பாவில், கிறிஸ்தவம் பெரும்பாலும் மரபாகப் பெறப்பட்டது. மக்கள் திருமுழுக்கு பெற்றார்கள், பங்குடன் இணைந்திருந்தார்கள், கிறிஸ்தவத் திருநாள்களை கொண்டாடினார்கள். குடும்பமும் சமூகமும் நம்பிக்கையை இயல்பாகவே அடுத்த தலைமுறைக்குக் கடத்தின.

இன்று அந்த நிலை மாறிவிட்டது.

இப்போது நம்பிக்கை என்பது தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.

இதுவே பிரான்சில் காணப்படும் ஓர் ஆச்சரியமான நிலையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. வழக்கமான சமயப் பங்கேற்பு குறைந்திருந்தாலும், திருமுழுக்கு பெற முன்வரும் பெரியவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகமாக அங்கே உயர்ந்துள்ளது.

ஏதோ ஒன்று மாறிக்கொண்டிருக்கிறது.

கிறிஸ்தவம் என்பது தலைமுறைக் கொடை என்பது மறைந்து, தனிநபர் தேர்வு என்று மாறுகிறது.

மரபாகப் பெற்ற கிறிஸ்தவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவத்துக்கு நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் தேடுவதை நிறுத்தவில்லை

எனவே ‘சமயம் இனி பொருத்தமற்றது’ என்று மிக விரைவாகச் சொல்லக்கூடாது.

மனித வாழ்வின் ஆழமான கேள்விகள் மறைந்துவிடவில்லை.
நான் யார்?
என் வாழ்வுக்கு அர்த்தம் என்ன?
துன்பத்தை நான் எப்படி எதிர்கொள்வது?
எனக்கு மன்னிப்பு கிடைக்குமா?
நான் நேசிக்கும் ஒருவர் இறந்தால் என்ன?
என்னை விடப் பெரிய ஏதோ ஒன்று இருக்கிறதா?

நவீன உலகம் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் மனிதரின் பொருள் தேடல், நம்பிக்கை, ஒப்புரவு, உறவு, சேர்ந்து இருப்பது, கடவுளைத் தாண்டிய உயர்ந்த அனுபவம் ஆகியவற்றிற்கான ஏக்கத்தை அது அழித்துவிட முடியாது.

மக்கள் இக்கேள்விகளை தானாகவே திருச்சபைக்குக் கொண்டு வராமல் இருக்கலாம்.
ஆனால் கேள்விகள் தொடர்ந்து வாழ்கின்றன.

திருத்தந்தையின் பயணங்கள் ஏன் மக்களை ஈர்க்கின்றன?
திருத்தந்தையின் வருகை ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்குகிறது: திருப்பயணம், வழிபாட்டு அழகு, செபம், இசை, சமூக உணர்வு, பொது சாட்சி, நம்மைவிடப் பெரிய ஒன்றில் நாம் சேர்ந்திருக்கிறோம் என்ற அனுபவம்.

திருத்தந்தையும் ஒரு வகையில் நம்பிக்கையின் நுழைவாயிலாக மாறுகிறார்.

நம்பிக்கைநிறை கத்தோலிக்கர்கள் அவரில் பேதுருவின் வாரிசைக் காண்கிறார்கள். திருச்சபையிலிருந்து விலகியவர்கள் தாங்கள் மறந்துபோன ஒன்றை மீண்டும் கண்டடையலாம். இளைஞர்கள் கிறிஸ்தவத்தை புதிய முறையில் சந்திக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்கள்கூட அந்த நிகழ்வின் ஆன்மிக மற்றும் ஒழுக்க முக்கியத்துவத்தால் ஈர்க்கப்படலாம்.

ஆனால் இதற்குப் பிறகே மிக முக்கியமான கேள்வி வருகிறது:

திருத்தந்தை புறப்பட்டுச் சென்ற பின் என்ன நடக்கிறது?

கூட்டத்திலிருந்து சமூகத்துக்கு

ஒரு திருத்தூதுப் பயணத்தின் வெற்றியை கூட்டத்தின் எண்ணிக்கையால் மட்டும் அளவிட முடியாது.

உண்மையான பயணம் இவ்வாறு இருக்க வேண்டும்:

ஈர்ப்பிலிருந்து சந்திப்புக்கு,
சந்திப்பிலிருந்து மனமாற்றத்துக்கு,
மனமாற்றத்திலிருந்து சேர்ந்திருப்பதற்கு,
சேர்ந்திருப்பதிலிருந்து சீடத்துவத்துக்கு,
சீடத்துவத்திலிருந்து மறைப்பணிக்கு.
இதற்கு உறுதியான மேய்ப்புப்பணி பதில் தேவை.

முதலில், ஒவ்வொரு பங்குத் தளமும் ஆலயமும் வெறும் சமயச் சேவைகளை வழங்கும் இடமாக அல்லாமல், வரவேற்கும் சமூகமாக மாற வேண்டும். புதிதாக வருபவர் கவனிக்கப்பட வேண்டும், வரவேற்கப்பட வேண்டும், மீண்டும் வருமாறு அழைக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, தேடலில் இருப்பவர்களுக்காக மறைமாவட்டங்கள் தெளிவான நம்பிக்கைப் பயணப் பாதைகளைஉருவாக்க வேண்டும்: எளிய அறிமுகச் சந்திப்புகள், விவிலியக் குழுக்கள், செப நேரங்கள், திருமுழுக்கு முன்பயிற்சி மற்றும் துணைநிலை, கேள்விகளைத் தயக்கமின்றி கேட்கும் இடங்கள்.

மூன்றாவது, திருப்பயணம், திருத்தந்தை வருகை, ஆன்மிகத் தியானம், திருமுழுக்கு, திருமணம், இறந்தோரின் இறுதிச்சடங்கு, அல்லது தனிப்பட்ட நெருக்கடி ஆகிய அனுபவங்களுக்குப் பின் திரும்பி வருவோருக்கு சிறப்பு கவனம் தேவை. இவை அனைத்தும் மேய்ப்புப்பணி கதவுகள். அவை உடனே மூடப்படக் கூடாது.

நான்காவது, பங்குகள் சிறிய நம்பிக்கைக் குழுக்களில் கவனம் செலுத்த வேண்டும் – பயிற்சிகள் வழியாக. பெரிய நிகழ்வுகள் மக்களை ஈர்க்கின்றன் சிறிய சமூகங்கள்தான் அவர்கள் தங்க உதவுகின்றன. நட்பு, உடனிருப்பு, இறைவார்த்தை, கூட்டு செபம், சேவை ஆகியவற்றில் நம்பிக்கை வளர்கிறது. இங்கே மறைந்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கூறியதை நாம் நினைவில்கொள்வோம்: கிறிஸ்தவம் மீண்டும் தொடக்கத் திருஅவை போல சிறிய குழுவாக மாறி பின்பு தளிர்க்கும்.

ஐந்தாவது, திருச்சபை அழகும் மாண்பும் நிறைந்த திருவழிபாட்டின் வலிமையை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். சத்தமும் கவனச் சிதறலும் நிறைந்த உலகில், அமைதி, இனிய இசை, நல்ல மறையுரை, வரவேற்பு, அர்த்தமுள்ள திருவழிபாடு ஆகியவை வலுவான நற்செய்திப் பணியாக மாறலாம்.

ஆறாவது, இளவல்களுக்கு நம்பிக்கைப் பயிற்சி அளிப்பது. அறிவியல், தொழில்நுட்பம், பாலியல், துன்பம், சுதந்திரம், அடையாளம், வாழ்க்கையின் அர்த்தம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் கேள்விகள் எழுப்புகிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு விடை அளிப்பதாக நம் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்

இறுதியாக, ஒவ்வொரு நம்பிக்கை அனுபவமும் மறைப்பணி அனுபவமாக மாற வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிக்கும், நோயாளிகளைப் பார்க்கும், குடிபெயர்ந்தவர்களை உடனிருந்து உதவும், பலவீனர்களைக் காக்கும், தனிமையில் இருப்போருக்கு அருகில் நிற்கும் திருச்சபையை மக்கள் சந்திக்க வேண்டும்.

உண்மையான கேள்வி

சவால் இதுவல்ல:
காலியான இருக்கைகளை எப்படித் நிரப்புவது?

அதற்கும் ஆழமான கேள்வி இது:
இன்னும் தேடிக்கொண்டிருக்கும் மக்களுடன் நாம் எப்படி நடப்பது?

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சுற்றி திரண்ட பெரிய கூட்டங்கள், மதச்சார்பின்மை முடிந்துவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை.

ஆனால் அவை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன:
மக்கள் புனிதத்தைத் தேடுவதை நிறுத்தவில்லை.

திருத்தந்தையின் பயணம் அவர் புறப்பட்டுச் செல்லும் போது முடிகிறது.
திருச்சபையின் உண்மையான பணி அதற்குப் பிறகுதான் தொடங்குகிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

Photo courtesy: Vatican Media, Yesni Prays

Leave a comment