இன்றைய இறைமொழி
புதன், 8 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
ஓசே 10:1-3, 7-8, 12. மத் 10:1-7
நெருங்கி வந்துவிட்டது!
(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருளும்
‘அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்று இறைவாக்கினர் ஓசேயா இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பின்னர் வளமும் நிலைப்புத்தன்மையும் பெறுகிறார்கள். எந்த அளவுக்கு கடவுள் அவர்களுக்கு வளம் தந்தாரோ, அந்த அளவுக்கு அவர்கள் மற்ற கடவுளர்களைத் தேடினார்கள்.
விவசாய உருவகத்தை மீண்டும் பயன்படுத்துகிற ஓசேயா, ‘உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்’ என அழைக்கிறார்.
(ஆ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருளும்
‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று அறிவிக்குமாறு இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
ஆயனில்லா ஆடுகள்போல மக்கள் கூட்டம் நின்றதைக் கண்டு அவர்களுக்கு நடுவில் ஆயர்களை அனுப்புகிறார் இயேசு. தம் பன்னிரு சீடர்களுக்கும் அதிகாரம் கொடுத்து அவர்களுடைய பணித்தளத்தையும் வரையறுத்து அவர்களிடையே அனுப்புகிறார்.
(இ) வாழ்வியல் சவால்கள்
மேற்காணும் இரண்டு வாசகங்களிலும் ஒருவித அவசரம் இருக்கிறது. அதாவது, கடவுள் அல்லது விண்ணரசுக்கான பதிலிறுப்பு உடனடியாக நடந்தேற வேண்டும்.
திருமுழுக்கின் வழியாக நாமும் இயேசுவின் சீடர்களாக மாறியுள்ளோம். நம் அழைத்தலையும் அனுப்பப்படுதலையும் மனத்தில் வைத்து வாழ்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment