இன்றைய இறைமொழி
செவ்வாய், 23 ஜூன் 2026
பொதுக்காலம் 12-ஆம் வாரம்
2 அர 19:9-11, 14-21, 31-35, 36. மத் 7:6, 12-14
இடுக்கமான வாயில்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று அறிவுரைகள் காணக்கிடக்கின்றன: (அ) நாம் மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கும்போது அவர்கள் அதன் மதிப்பை அறியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. மதிப்புக்குரியவற்றை மதிப்பவற்றின்முன் நிறுத்தக் கூடாது. (ஆ) பொன் விதி: மற்றவர்கள் நமக்குச் செய்ய வேண்டும் என விரும்புபவற்றை நாம் அவர்களுக்குச் செய்வது. (இ) இடுக்கமான வாயில் வழியே நுழைவது.
இயேசு வழங்கும் மூன்றாவது அறிவுரையை – கட்டளையை – நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். ‘இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்’ என்று கட்டளையிடுகிற இயேசு, ‘அழிவுக்குச் செல்லும் வாயில்,’ ‘வாழ்வுக்குச் செல்லும் வாயில்’ என்று இரண்டு வாயில்களை ஒப்பிடுகிறார். இடுக்கமான வாயிலைக் கண்டுபிடிப்பவரும் சிலரே என்கிறார் இயேசு.
பெரியவை, எளிதானவை, இன்பமானவை அனைத்தும் நல்லவை என்று கருதும் நம் மனநிலைக்குச் சவால் விடுகிறார் இயேசு. சிறியவை, கடினமானவை, துன்பமானவை வழியாகவே நன்மையானதைக் கண்டுபிடிக்க முடியும் என்பது இயேசுவின் அழைப்பு.
நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் முடிவுகள் எடுக்க வேண்டும். நாம் எடுக்கிற முடிவுகள் நம் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. ‘நான் செல்லும் வழி வாழ்வின் வழியா?’ என்று ஒவ்வொரு முறையும் நாம் கேட்கும்போது நம் தெரிவுகள் நெறிப்படுத்தப்படுகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், அரசர் எசேக்கியா வாழ்வின் வழியை – இடுக்கமான வாயிலை – தேர்ந்துகொள்ளும் நிகழ்வைப் பார்க்கிறோம்.
வடக்கு இஸ்ரயேலைக் கைப்பற்றிய அசீரிய அரசர் சென்னகரிப் அவருக்கு எதிராகக் கிளர்ந்த வந்த எத்தியோப்பிய மன்னனைப் போரில் எதிர்கொள்வதற்காக, யூதா நாட்டின் துணையைக் கேட்கிறார். மறைமுகமாக யூதா தனக்குச் சரணடைய வேண்டும் என்பது அவருடைய விருப்பம். சென்னகரிப்பின் கடிதத்தை எடுத்துக்கொண்டு நேராக ஆண்டவரின் இல்லத்திற்குள் – கோவிலுக்குள் – செல்கிறார் எசேக்கியா. ‘இப்போது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும்!’ என்று நாட்டுக்காக இறைவேண்டல் செய்கிறார்.
எசேக்கியாவின் குரலுக்கு உடனடியாக செவிமடுக்கிற ஆண்டவர் இறைவாக்கினர் எசாயாவை அவரிடம் அனுப்புகிறார்: ‘படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்’ என்று நேர்முகமான செய்தியை அரசருக்கு வழங்குகிறார் இறைவாக்கினர். ஆண்டவரின் தூதர் மக்கள் சார்பாக அன்றிரவே போரிடுகிறார்.
தன் கண்முன் தெரிந்த அரசனுக்குப் பயப்படுவதை விட, தன் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் சரணடைகிறார் எசேக்கியா. இதுதான் இடுக்கமான வாயிலைத் தேர்ந்துகொள்தல் ஆகும்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment