இன்றைய இறைமொழி. வெள்ளி, 7 ஆகஸ்ட் 2026. வெளி உலகமும் உள் வாழ்வும்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 18-ஆம் வாரம்
நாகூம் 2:1,3. 3:1-3,6-7. மத் 16:24-28

வெளி உலகமும் உள் வாழ்வும்

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார்: ‘என்னைப் பின்செல்ல விரும்புகிறவர் தன்னையே மறுத்து, தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்செல்லட்டும்.’ பின்னர் அவர் ஒரு கேள்வியைக் கேட்கிறார்: ‘ஒருவர் உலகம் முழுவதையும் ஆதாயமாகப் பெற்றாலும், தன் வாழ்வை இழந்தால் அவருக்கு என்ன பயன்?’

இந்தக் கேள்வி நமக்கு முன் இரண்டு உலகங்களை வைக்கிறது: நமக்கு வெளியே உள்ள உலகம், நமக்கு உள்ளே உள்ள வாழ்வு.

இங்கே ‘வாழ்வு’ என்பதற்கு கிரேக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல் ‘ப்ஸூக்கே.’ இது ஆன்மா அல்லது உள்ளார்ந்த வாழ்வைக் குறிக்கிறது. உலகம் (‘காஸ்மோஸ்’) நமக்கு வெளியே உள்ள அனைத்தையும் குறிக்கிறது: சொத்துகள், அதிகாரம், வெற்றி, பெயர், பதவி, அங்கீகாரம் போன்றவை.

ஸ்தோயிக் தத்துவஞானியான எபிக்டேட்டஸ் இரண்டு வகை எதார்த்தங்கள் பற்றிப் பேசுகிறார்: நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை. நம் ஆசை, நோக்கம், தெரிவு போன்றவை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. நம் உடல்நலம், புகழ், அதிகாரம், சமூக நிலை போன்றவை நம் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கின்றன.

பல நேரங்களில், நமக்கு வெளியே உள்ளவற்றைப் பெற நம் ஆற்றலைச் செலவிடுகிறோம். ஆனால் இவை அனைத்தும் மாறக்கூடியவை. மறைந்துபோகக்கூடியவை. நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படக்கூடியவை. இவற்றின்மேல் மட்டும் நம் வாழ்வைக் கட்டினால், நாம் பலவீனமானவர்களாக மாறிவிடுகிறோம். இயேசு நம் உள்ளார்ந்த வாழ்வைக் காத்துக்கொள்ள நம்மை அழைக்கிறார். நாம் எதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமோ அதில் நம் ஆற்றலைச் செலவழிக்க அழைக்கிறார்.

மூன்று பாடங்கள்:

(அ) எல்லா ஆதாயமும் உண்மையான, ஏற்புடைய ஆதாயம் அல்ல. ஒருவர் பணம், பதவி, பெயர், வசதி ஆகியவற்றைப் பெறலாம். ஆனால் அமைதி, நேர்மை, நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றை இழக்கலாம். உண்மையான ஆதாயம் நமக்கு வெளியே பெருகுவது அல்ல. நமக்குள் உள்ள வாழ்வைப் பெருக்குவது.

(ஆ) இயேசு ‘உலகம் முழுவதையும்’ என்று சொல்கிறார். ஒருவர் அனைத்தையும் பெற்றாலும், அது ஒரு மனித ஆன்மாவிற்கு சமமாகாது. உலகம் நம் கைகளை நிரப்பலாம். ஆனால் அது நம் இதயத்தை நிரப்ப முடியாது.

(இ) மிகப் பெரிய இழப்பு தன்னையே இழப்பது. வாழ்வை இழப்பது என்பது இறப்பு அல்ல. மாறாக, ஒருவர் தன் விருப்பத்தை, நோக்கத்தை, மனச்சான்றை, உள்மனச் சுதந்திரத்தை இழப்பது.

நமக்கு வெளியே உள்ள உலகம் கடந்து போகும். நமக்குள் உள்ள வாழ்வு கடவுளுக்குரியது. அதை நாம் இழந்துவிடாதிருக்க முயற்சி செய்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment