இன்றைய இறைமொழி
வெள்ளி, 24 ஜூலை 2026
பொதுக்காலம் 16-ஆம் வாரம்
எரே 3:14-17. மத் 13:18-23
கடவுளின் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்
‘என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்.
அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.’
பழைய ஏற்பாட்டில் அரசர்களும், குருக்களும், இறைவாக்கினர்களும் மேய்ப்பர்கள் (எபிரேயத்தில், ‘ரோயிம்.’ ‘ராஆh’ என்னும் வினைச்சொல்லை வேராகக்கொண்டது) எனக் கருதப்பட்டார்கள். இவர்கள் மக்களை ஆட்சி செய்தார்கள், அவர்களுக்காகப் பலி செலுத்தினார்கள், அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். ஆனால், காலப் போக்கில் தங்களை முன்நிறுத்தி கடவுளை மறந்தார்கள். தங்கள் அழைக்கப்பட்ட நிலையை மறைந்தார்கள், தங்களை அழைத்த ஆண்டவரை மறந்தார்கள். தங்களுடைய பணியை மட்டும் பற்றிக்கொண்டார்கள்.
எதிர்காலத்தில் ஆண்டவராகிய கடவுள் அனுப்பப்போகிற அரசர்களை இந்த இறைவாக்குப் பகுதி குறிக்கிறது. கிறிஸ்தவ மெசியா வாசிப்பில் இது இயேசுவையும் அவரைத் தொடர்ந்து வருகிற திருத்தூதர்களையும் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
நம் குடும்பத்தில், பணித்தளத்தில், சமூகத்தில் நாமும் மேய்ப்பர் என்ற நிலையில் இருக்கிறோம். கடவுளுக்கு உகந்தவர்களாகவும், அறிவுடனும் முன்மதியுடனும் நடந்துகொள்பவர்களாகவும் நாம் இருக்க முயற்சி செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment