இன்றைய இறைமொழி. வெள்ளி, 10 ஜூலை 2026. சீடத்துவ எச்சரிக்கைகள்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 10 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
ஓசே 14:1-9. மத் 10:16-23

சீடத்துவ எச்சரிக்கைகள்

இயேசுவால் பணிக்கு அனுப்பப்படக் கூடிய சீடர்கள் அவரைப் போல பரிவுள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மக்களிடம் அமைதியை அறிவிக்கிறார்கள். நோய்நொடிகளைக் குணமாக்கி அவர்களுக்கு நலம் தருகிறார்கள். குறைவான பொருள்களைக் கொண்டு வாழ்கிறார்கள். எதிர்ப்பை நேர்முகத்தோடு சமாளிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி இவர்கள் நல்லவர்களாகவும், நன்மையை விதைப்பவர்களாகவும் இருந்தால் இந்த உலகம் அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்ளுமா?

இல்லை என்று சொல்கிற இயேசு, சீடத்துவத்தின் எச்சரிக்கைகளை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார்.

(அ) ஓநாய்களிடையே ஆடுகள்

வலுவான உலகத்தின் நடுவே சீடர்கள் வலுவற்றவர்கள். அவர்கள் நொறுங்குநிலையில் இருப்பவர்கள். அவர்கள் ‘பாம்புகளைப் போல முன்மதியுடையவராகவும் புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.’

(ஆ) தீர்ப்பிடப்படுவார்கள்

மத்தேயு நற்செய்தியாளரின் குழுமம் அனுபவித்த பிரச்சினைகளை இங்கே காண்கிறோம். இயேசுவின் விண்ணேற்றத்துக்குப் பின்னர் நம்பிக்கையாளர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்வின் இன்னல்களை எதிர்கொள்ள தூய ஆவியார் அவர்களுக்குத் துணை நிற்கிறார்.

(இ) மனவுறுதியுடன் இருப்பவர்கள்

தாங்கள் பெற்றிருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்க தன் குழுமத்தாரை அழைக்கிறார் மத்தேயு. சமயத் துன்புறத்தல்கள் காரணமாக மக்கள் ஊரை விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் நம்பிக்கையைப் புறக்கணித்தார்கள். மனவுறுதி என்னும் பாடம் இங்கே முன்மொழியப்படுகிறது.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் பிரமாணிக்கமின்மையை, பற்றுறுதியின்மையைக் குணமாக்கி அவர்களுக்கு நலம் தருகிறார். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மேல் கொண்டுள்ள பேரன்பு இங்கே வெளிப்படுகிறது.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

நாம் நல்லவர்களாக இருப்பதால் இந்த உலகில் நமக்கு நன்மையானதே நடக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. நடப்பவை அனைத்தையும் மனவுறுதியோடு எதிர்கொள்ள வேண்டும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment