இன்றைய இறைமொழி
வியாழன், 28 மே 2026
பொதுக்காலம் 8-ஆம் வாரம்
1 பேது 2:2-5, 9-12. மாற் 10:46-52
புதிய சீடர்
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். வழியோரம் அமர்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த இவர் நலம் பெற்றபின் இயேசுவின் சீடராக மாறி அவரைப் பின்பற்றி நடக்கிறார்.
இந்த நிகழ்வை ஒரே நேரத்தில் வல்ல செயல் என்றும் உருவகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். நோயைக் குணமாக்கிற இயேசுவின் வல்ல செயலாக இது இருந்தாலும், இங்கே ஓர் உருவகமும் உள்ளது. பார்வையற்ற நபர் இயேசுவை தாவீதின் மகன் என்று அடையாளம் கண்டு அறிக்கையிடுகிறார். இயேசுவைக் காணும் அவரோடு வழிநடக்கும் அவருடைய சீடர்கள் அவரை அடையாளம் காணவில்லை. இதுதான் நிகழ்வின் முரண்.
சீடத்துவத்தின் பண்புகளாக பர்த்திமேயு நமக்குக் கற்பிப்பவை எவை?
(அ) தலைவரை அறிதல் – இயேசுதாம் போகிறார் என்பதைத் தன் உள்ளுணர்வாலோ அல்லது மற்றவர்கள் வழியாகவோ அறிந்துகொள்கிறார் பர்த்திமேயு. தனக்குக் கிடைத்த இந்த முதல், இறுதி, ஒரே வாய்ப்பை அப்படியே முழுமையாகப் பற்றிக்கொள்கிறார் பர்த்திமேயு.
(ஆ) தலைவர்மேல் கவனக் குவியம் – தலைவரின் குரலும் கட்டளையும்தான் இவருக்குப் பெரிதாக இருந்ததே தவிர, கூட்டத்தினரின் கடிந்துரை இவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கூட்டம் இப்படியும் பேசும், அப்படியும் பேசும் என்று அவர் அறிந்திருந்தார். அவரைக் கடிந்துகொண்ட கூட்டமே அவரிடம் வந்து, ‘துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்’ என்று சொல்கிறது.
(இ) மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் – இயேசு தன்னை அழைக்கிறார் என்று தெரிந்தவுடன் தன் மேலாடையைத் தூக்கி எறிகிறார் பர்த்திமேயு. அவருடைய மேலுடை அவருடைய பழைய வாழ்க்கையின் அல்லது இரந்து உண்ணுதலின் அடையாளமாக இருந்தது.
(ஈ) நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் – ‘தாவீதின் மகனே’ என முன்னர் அறிக்கையிட்ட பர்த்திமேயு இறுதியில், ‘ரபூனி’ என இயேசுவை அழைக்கிறார். போதகரே என்று இயேசுவை அழைத்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.
(உ) இயேசுவைப் பின்பற்றுகிறார் – இயேசுவைச் சந்தித்த அவர் அவருடைய பழைய வாழ்க்கையை நோக்கிச் செல்லவில்லை. தன் புதிய வாழ்க்கையை இயேசுவில் கண்டு அவரைப் பின்தொடர்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், தம் குழுமத்தார் நம்பிக்கையில் வளர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் பேதுரு: ‘வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்துங்கள்.’ மேலும், அவர்களுடைய தான்மையை வரையறுக்கிறார்: ‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர். அரச குருக்களின் கூட்டத்தினர். தூய மக்களினத்தினர். அவரது உரிமைச் சொத்தான மக்கள்.’ இந்தத் தான்மையோடு சேர்ந்து அவர்களுடைய பணியும் முன்மொழியப்படுகிறது: ‘ஒளிக்கு அழைத்தவரின் மேன்மைமிக்க செயல்களை எடுத்துரைப்பது.’
இயேசுவில் தன் சீடர் அடையாளத்தைக் காண்கிற பர்த்திமேயு அவரைப் பின்பற்றும் பணியைச் செய்கிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment