இன்றைய இறைமொழி. புதன், 27 மே 2026. இயேசுவின் கண்கள் கொண்டு

இன்றைய இறைமொழி
புதன், 27 மே 2026
பொதுக்காலம் 8-ஆம் வாரம்
1 பேது 1:18-25. மாற் 10:32-45

இயேசுவின் கண்கள் கொண்டு

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இரண்டு மனித உணர்வுகளைப் பதிவு செய்கிறார் மாற்கு: ‘திகைப்பு’ (கிரேக்கத்தில் ‘தௌபெயோ’), ‘அச்சம்’ (கிரேக்கத்தில் ‘ஃபோபெயோ’). இதற்கு முந்தைய பகுதியில் சீடர்கள் பெறுகிற கைம்மாறு பற்றிப் பேசுகிறார் இயேசு.

தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பை முன்னறிவிக்கிற இயேசு, ‘இப்போது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்!’ என்கிறார். தாங்கள் பெறுகிற கைம்மாறு பற்றியே யோசித்துக்கொண்டிருந்த சீடர்களுள் இருவர் – யோவானும் யாக்கோபும் – அதை உறுதி செய்ய விரும்பி, ‘வலப்பக்கமும் இடப்பக்கமும்’ அமர தங்களுக்கு அருளுமாறு இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு அவர்களுடைய புரிதலைத் திருத்துகிறார். மேலும், மானிட மகன் வந்ததன் நோக்கம் ஆட்சி புரிவதற்கு அல்ல, மாறாக, பணிபுரிவதற்கே என்று விளக்குகிறார்.

இயேசு மூன்று முறை பாடுகளை முன்னறிவிக்கும்போதும் சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இன்னோர் உணர்வு சீடர்களைப் பற்றிக்கொள்கிறது – ‘கோபம்’ (கிரேக்கத்தில், ‘அகனக்டேயோ’).

திகைப்பு, அச்சம், கோபம் என்னும் மூன்று உணர்வுகளுமே நேர்முகமான, எதிர்மறையான உணர்வுகளாக இருக்கின்றன. திகைப்பு என்னும் உணர்வு வியப்பு என்னும் அடிப்படையில் நேர்முகமாக இருக்கிறது. மலைப்பு என்னும் அடிப்படையில் எதிர்மறையாக மாறுகிறது. அச்சம் நேர்முகமாக நம்மை ஆபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான தயார்நிலையைத் தருகிறது. எதிர்மறையாக, எதார்த்தத்தை மிகைப்படுத்துகிறது. கோபம் நேர்முகமாக மற்றவர்கள் தங்கள் தவற்றைத் திருத்துவதற்கான வாய்ப்பைத் தருகிறது. எதிர்மறையாக மற்றவர்களை அழிக்க நம்மைத் தூண்டுகிறது.

உணர்வுகளால் சீடர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் இயேசு தருகிற அறிவுப்பாடத்தைக் கற்க அவர்கள் தயாராக இல்லை.

இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் தம் குழுமத்துக்கு ஊக்கம் தருகிறார் பேதுரு. அவர்கள் பெற்ற மீட்பையும் உரிமை வாழ்வையும் இரண்டு உருவகங்கள் வழியாக அவற்றின் மேன்மையைப் புரிந்துகொள்ளத் தூண்டுகிறார்.

‘பொன், வெள்ளி அல்ல. மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமே’ அவர்களுடைய மீட்புக்கு விலையாகக் கொடுக்கப்பட்டது. ‘அழியக்கூடிய மனித வித்தினால் அல்ல. அழியாக கடவுளின் வார்த்தையாகிய வித்தினால் அவர்கள் புதுப்பிறப்பு அடைந்துள்ளார்கள்.’

‘எருசலேமே, ஆண்டவரைப் போற்றுவாயாக!’ என்று அழைக்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 147).

நேற்றைய நாளில் நம் திருத்தந்தை வெளியிட்டுள்ள சுற்றுமடலில் (மகத்தான மானுடம்), ‘நாம் பாபேலை அல்ல, எருசலேமைக் கட்டி எழுப்ப வேண்டும் – நெகேமியா போல!’ என அழைக்கிறார் திருத்தந்தை. எருசலேம் என்பது இயேசுவின் சீடர்களுக்கு அதிகாரத்தின் இடமாகத் தெரிந்தது. இயேசுவுக்கோ அது பணிவிடையின், தியாகத்தின், தற்கையளிப்பின் இடமாகத் தெரிகிறது.

இயேசுவின் கண்கள் கொண்டு நம் வாழ்வைப் பார்க்கும்போது நம் மனம் முதிர்ச்சி அடைகிறது. உணர்வுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறுகிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment