இன்றைய இறைமொழி
திங்கள், 4 மே 2026
பாஸ்கா ஐந்தாம் வாரம் – திங்கள்
திப 14:5-18. யோவா 14:21-26
உலகிற்கு வெளிப்படுத்துதல்
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று சொற்களை மையமாக வைத்துச் சுழல்கின்றது: ‘அன்பு செய்தல்,’ ‘வெளிப்படுத்துதல்,’ ‘குடிகொள்தல்.’
இயேசுவின் இறுதி இராவுணவுப் பேருரை தொடர்கிறது.
தோமா, பிலிப்புவைத் தொடர்ந்து யூதா ஒரு கேள்வி கேட்கிறார்: ‘ஆண்டவரே, நீர் உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?’
இயேசுவை அன்பு செய்பவர்மேல் இயேசுவும் அன்புகூர்ந்து அவருக்குத் தம்மை வெளிப்படுத்துவார். வெளிப்படுத்துதலைத் தொடர்ந்து தந்தையும் இயேசுவும் அவரிடம் வந்து தங்குவார்கள்.
அன்பு செய்தல் என்பது கட்டளைகளைக் கடைப்பிடித்தலோடு இணைந்து செல்கிறது. அல்லது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் அன்பின் வெளிப்பாடாக இருக்கிறது.
மேற்காணும் மூன்று சொற்களை எப்படி புரிந்துகொள்வது?
(அ) அன்பு செய்தல் – யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் ‘அன்பு’ என்பது மிகவும் முக்கியமான சொல். கிரேக்க மொழியில் அன்பை நான்கு சொற்களில் சுட்டிக்காட்டினார்கள்: ‘ஏரோஸ்’ (உடல்சார் அன்பு), ‘ஃபிலயோ’ (நட்புசார் அன்பு), ‘ஸ்டார்கே’ (பெற்றோர்-பிள்ளை பாசம்), ‘அகாபே’ (உள்ளம்சார்ந்த, அடுத்தவருடைய நலம் விரும்பும் அன்பு). கடவுளை அன்பு செய்தல் என்பது மற்றவர்களை அன்பு செய்தலே.
(ஆ) வெளிப்படுத்துதல் – இன்று மேலாண்மை உலகில் அதிகமாகப் பேசப்படும் ஒரு சொல் ‘வெளிப்படுத்துதல்’ (ஆங்கிலத்தில், மேனிஃபெஸ்டேஷன்). நம் எண்ணங்களையும் ஆசைகளையும் காட்சிப்படுத்துவது. எழுதிப்பார்ப்பது. நாம் எதை விரும்புகிறோம் என்பதைக் கூர்ந்து நோக்குவது. நம் இலக்குகளை நெறிப்படுத்துவது. நாம் தனிப்பட்ட அளவில் பெற்றுக்கொள்வது அல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் நம் இடத்தை நாம் அடையாளம் காணுவது. வெளிப்படுத்துதல் இயேசுவைப் பொருத்தவரையில் மற்றவர்களுக்கு நலம் தரும் நிகழ்வாக அது அமைகிறது.
(இ) குடிகொள்தல் – யோவான் நற்செய்தியின் தொடக்கத்தில் ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்’ என வாசிக்கிறோம். இயேசு வழியாக கடவுள் நம் நடுவே குடிகொண்டார் என்பது ஒவ்வொருவருடைய வாழ்வியல் அனுபவமாக மாற வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், லிஸ்திராவில் பவுலும் பர்னபாவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை வாசிக்கிறோம். வெளிப்புறச் செயல்களை வைத்து திருத்தூதர்களை வரையறுக்கிறார்கள் மக்கள். பவுல் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலைத் தருகின்றார். தங்கள் செயல்கள் வழியாக கடவுளை வெளிப்படுத்துவதே உண்மையான ‘வெளிப்படுத்துதல்.’
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment