இன்றைய இறைமொழி. வியாழன், 18 ஜூன் 2026. இறைவேண்டல்

இன்றைய இறைமொழி
வியாழன், 18 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
சீஞா 48:1-15. மத் 6:7-15

இறைவேண்டல்

தர்மம் செய்தல், இறைவேண்டல், நோன்பிருத்தல் என்னும் மூன்று அறச்செயல்கள் செய்யும்போது நம்மை மனிதர் பார்ப்பது பற்றி எச்சரித்த இயேசு, கடவுளிடமிருந்தே நாம் கைம்மாறு பெற வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இறைவேண்டல் செய்வது எப்படி என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.

‘குறைவான சொற்கள்’ என்பது செபத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

இயேசு கற்பித்த இறைவேண்டலில் பார்க்கும்போது, செபம் என்றால் அடிப்படையில் நம் மனித வரையறையை உணர்தலும், கடவுள்மேலும் ஒருவர் மற்றவர்மேலும் நாம் கொண்டிருக்கிற சார்புநிலையைக் கொண்டாடுவதும்தான்.

‘எங்கள் அன்றாட அப்பத்தைத் தாரும்!’ என்று இறைவேண்டல் செய்தாலும் நம் அப்பத்துக்கான உழைப்பு நம்மிடமிருந்தே வர வேண்டும்.

‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்!’ என்று நாம் செபித்தாலும், சோதனைக்கான வாய்ப்புகளை நாம்தான் தவிர்க்க வேண்டும்.

நம் முதன்மைகளை நெறிப்படுத்தவும் நம் வாழ்வை மேம்படுத்தவும் இறைவேண்டல் நம்மை அழைக்கிறது.

ஆனால், பல நேரங்களில் இறைவேண்டல் என்பது இன்று நம் விண்ணப்பகளை அடுக்கும் தளமாக மாறிவிட்டது. மேலும், வரையறுக்கப்பட்ட செபங்களை மந்திரம்போல உச்சரிப்பதும் செபத்தைப் பற்றிய தவறான புரிதல் ஆகும்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர்கள் எலியா மற்றும் எலிசாவுக்குப் புகழஞ்சலி செலுத்துகிறார் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர். இவர்களுடைய வாழ்வு இறைமைய வாழ்வாக இருந்தது. இறைவனை மையமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு அந்த உறவே இறைவேண்டலாக மாறுகிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

One response to “இன்றைய இறைமொழி. வியாழன், 18 ஜூன் 2026. இறைவேண்டல்”

  1. Ignatius diraviam Avatar
    Ignatius diraviam

    Dear fr Yesu Karunanithi
    Greetings

    Appreciation for your regular contribution to the tami catholic church. We
    are all very much thankful to you.
    God bless you and your ministry.

    May I have the latest encyclical in tamil version?
    kindly send it to us

    Fr, Ignatius Diraviam
    Coimbatore Diocese

    Like

Leave a comment