இன்றைய இறைமொழி. திங்கள், 15 ஜூன் 2026. தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்!

இன்றைய இறைமொழி
திங்கள், 15 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
1 அர 21:1-16. மத் 5:38-42

தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்!

நமக்கு யாராவது ஒருவர் தீமை நினைத்தால், தீங்கு இழைத்தால் அதை அவருக்கு உடனே திரும்பச் செய்துவிட நினைக்கிறோம். இதுதான் பழைய ஏற்பாட்டுச் சட்டமாக இருந்தது: ‘கண்ணுக்குக் கண், பல்லக்குப் பல்.’ இந்தச் சட்டத்தில் ஒரு வகையான நீதி இருப்பதுபோலத் தெரிகிறது. அதாவது, நமக்கு நேரிடுகிற ஒன்றை அதே அளவில் அதை மற்றவருக்குச் செலுத்துகிறோம். அதற்கு மேல் போகக்கூடாது என்று இச்சட்டம் நம்மைத் தடுக்கிறது. ஆனால், அதே வேளையில் இந்தச் சட்டம் நம்மையும் மற்றவரைப் போல தீமையாக்குகிறது, வன்முறையை வளர்க்கிறது.

இதற்கு மாறாக, இயேசு முன்மொழிவது: ‘தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்!’ தீமையை நன்மையால் வெல்வதற்கு அழைக்கிறார். ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னம், மேலாடை எடுப்பவருக்கு உள்ளாடை, ஒரு கல் கூப்பிடுகிறவருக்கு இரு கல் வரை உடனிருப்பு என்று ‘கொஞ்சம் எக்ஸ்ட்ரா’ செய்ய அழைக்கிறார். இங்கே தீயவரை நாம் எதிர்க்கவில்லை. மாறாக, தீமையை அல்லது தீங்கை எதிர்க்கிறோம். இச்செயல் அவருடைய மனமாற்றத்திற்கு வழி செய்கிறது.

நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை நடக்கும் என்பதற்கு இந்த உலகில் எந்த உத்திரவாதமும் இல்லை. நன்மையே செய்த ஆபேல் வயலில் கொலை செய்யப்பட்டு இறந்து போனார். கோபமும் பொறாமையும் வன்மமும் நிறைந்த காயின்கள் நடுவேதான் நம் வாழ்க்கையை நாம் நகர்த்துகிறோம்.

அப்படிப்பட்ட காயின் ஒருவரைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கிறோம்.

நாபோத்து என்னும் சாமானியன் ஒருவனுடைய திராட்சைத் தோட்டம் அரசனால் பறிக்கப்படுகிறது. அவன் கொல்லப்படுகிறான். எந்தவொரு தவறும் செய்யாத அவனுக்கு இறப்பும் இழப்பும் நேரிடுகிறது. இங்கே கடவுள் குறுக்கிட்டு நீதி வழங்குகிறார்.

நம் வாழ்வில் இழப்பும் நமக்கு இறப்பும் நேரும்போது கடவுள் அன்றுபோலக் குறுக்கிடுவதில்லை.

‘தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்’ என்னும் இயேசுவின் அறிவுரை தீங்கு செய்பவருக்கு இன்னும் அதிகாரம் கொடுப்பதுபோலத் தெரிகிறது.

மற்றவரின் தீமை என்னுடைய நன்மைத்தனத்தைப் பாதிக்கக்கூடாது, மற்றவர் தீயவராக இருப்பதால் நானும் தீயவராக இருக்கத் தேவையில்லை என்ற புரிதலில் நம் வாழ்க்கையை நகர்த்துவோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment