இன்றைய இறைமொழி
செவ்வாய், 16 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
1 அர 21:17-29. மத் 5:43-48
மற்றவருக்கும் மேலாக
இயேசுவின் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. ‘அடுத்திருப்பவருக்கு அன்பு, பகைவருக்கு வெறுப்பு’ என்னும் முதல் ஏற்பாட்டுக் கட்டளையை நிறைவுக்குக் கொண்டுவருகிற இயேசு, அன்பு செய்வதற்கான மேல்வரிச் சட்டமாக கடவுளுடைய அன்பை முன்மொழிகிறார்.
மனித உறவுகள் பெரும்பாலும் கொடுக்கல், வாங்கல் அடிப்படையிலும், மற்றவர்களில் நாம் பார்க்கும் மாதிரிகள் அடிப்படையிலும்தான் அமைகின்றன.
நம்மை அன்பு செய்பவர்களுக்குப் பதிலன்பு, நம்மை வாழ்த்துபவர்களுக்கு பதில் வாழ்த்து, நம் நன்மை விரும்புபவர்களுக்குப் பதில் நன்மை என்று நாம் நகர்கின்றோம். இப்படிச் செய்வது எளிதாகவும் இருக்கின்றது. யாரும் யாரையும் காயப்படுத்தாத உறவு நம்முடைய விருப்பமாக இருக்கிறது.
‘பகைவருக்கும் அன்பு, துன்புறுத்துவோருக்கும் இறைவேண்டல்’ என்று இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். எல்லார்க்கும் பெய்யும் மழை போல, எல்லார்மேலும் ஒளிரும் கதிரவன் போல நம் அன்பு இருக்க வேண்டும் என்பது இயேசுவின் பாடம். இயேசு தம் சிலுவை இறப்பில் இத்தகைய அன்பு சாத்தியம் என்றும் நமக்கு முன்மாதிரி காட்டினார்.
அன்பு நம்மை நிறைவுள்ளவர்கள் ஆக்குகிறது. நாம் காட்டும் அன்பும் ஒவ்வொரு நாளும் நிறைவை நோக்கி நகர வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், நாபோத்துக்கு நேரிட்ட அநீதிக்குப் பழிதீர்;க்கிறார் கடவுள். ஆகாபையும் ஈசபேலையும் கடவுள் மன்னித்திருக்கலாமே? என்னும் கேள்வி நம்மில் எழுகிறது. பழைய ஏற்பாட்டுக் கடவுள் பழி தீர்க்கிறார், புதிய ஏற்பாட்டுக் கடவுள் இரக்கம் காட்டுகிறார் என்று சொல்லி சிந்தனையை நிறைவு செய்ய இயலுமா?
நம் அன்பின் அளவுகோலை இப்படி அமைத்துக்கொள்வோம்: மற்றவர் நமக்குச் செய்வதை விட கொஞ்சம் மேலான அன்பு செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment