இன்றைய இறைமொழி
வெள்ளி, 1 மே 2026
தொழிலாளரான புனித யோசேப்பு, நினைவு
தொடக்கநூல் 1:26-2:3 (அ) கொலோசையர் 3:14-15,17,23-24. மத்தேயு 13:54-58
தச்சரின் மகன்
இன்று மாதத்தின் முதல் நாள். மாதத்தின் முதல் வெள்ளி. இன்றைய நாளில் புனித யோசேப்பை தொழிலாளர் என நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். பல நாடுகளில் இன்றைய நாள் ‘மே தினம்’ அல்லது ‘உழைப்பாளர் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. ‘மனிதர் என்பவர் உழைப்பாளர்’ என வரையறுத்தார் கார்ல் மார்க்ஸ். படைப்பின் தொடக்கத்தில் உழைப்பு என்பது நம் தலைமேல் வைத்து அமுக்கப்பட்ட முள்முடி எனத் தோன்றினாலும், உழைப்பின் வழியாகவே நாம் ஒவ்வொருவரும் நமக்கும் மற்றவருக்கும் மணிமுடி சூட்டுகிறோம்.
படைப்பின் தொடக்கத்தில் மனிதர்களாகிய நாம் நம் கைகளைப் பயன்படுத்தி உழைத்தோம். பின் கைகளின் நீட்சிகளாகக் கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினோம். மின்சாரம் கண்டுபிடிப்பு, தொழில் புரட்சி, இயந்திரங்களின் உருவாக்கம் என்று உழைப்பு சற்றே எளிதானது. கணினி, மின்னணு, இணையதளம் வந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதானது. இப்போது நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு மனித உழைப்பு பற்றிய பார்வையை மாற்றிவிட்டது. பல பணிகளில் மனிதர்கள் தேவையில்லை என்ற நிலை நாளுக்கு நாள் உருவாகி வருகிறது. இச்சூழலில் நம் புனிதர் நமக்கு எப்படி பொருள் தருகிறார்?
திருத்தந்தை 12-ஆம் பயஸ், 1 மே 1955 அன்று இத்தாலியக் கத்தோலிக்கத் தொழிலாளர்கள் கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில், புனித யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலர் என அறிவித்து, திருவழிபாட்டு நினைவை ஏற்படுத்துகிறார். ‘நாசரேத்தில் வாழ்ந்த எளிய தொழிலாளர் யோசேப்பு’ என்று அவரை அழைத்தார். இது வெறுமனே திருவழிபாட்டுக் கொண்டாட்டம் அல்ல. மாறாக, மானுட இறையியல் மாற்றம். ஏனெனில், பாவத்தின் சாபமாக நம்மேல் சுமத்தப்பட்ட வேலை, தொழில், பணி, கடவுளோடு இணைந்து படைக்கும் நிலைக்கு நம்மை உயர்த்துகிறது.
யோசேப்பு ஒரு தொழிலாளர் என்பதற்கு கிரேக்க மொழியில் ‘டெக்டோன்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘உழைப்பாளி,’ ‘தச்சர்,’ ‘கொத்தனார்’ என்று நாம் எப்படி பொருள் கொண்டாலும், ‘டெக்டோனின்’ பணி கைகளைச் சார்ந்தது. கைகளைப் பயன்படுத்தியே இவர் உழைக்கிறார். கைகள் பயன்பாட்டுடன் அறிவுப் பயன்பாடும் இணைந்தே செல்கிறது. குறிப்பாக தச்சுத் தொழிலில் மரத்தின் தன்மையைக் கணிப்பதற்கும் அளவிடுவதற்கும் மூளையின் பயன்பாடு அவசியமானது.
யோசேப்பைப் பொருத்தவரையில், ‘உழைப்பு என்பது பொறுப்புணர்வு’ – தன் உழைப்பைக் கொண்டே அவர் மரியாவுக்கும் இயேசுவுக்கும் உணவு தருகிறார். ‘உழைப்பு என்பது கீழ்ப்படிதல்’ – ஒவ்வொரு நிகழ்விலும் தன் எண்ணம் விடுத்து கடவுளின் திருவுளத்திற்குப் பணிகிறார். ‘உழைப்பு என்பது புனிதமாக்கல்’ – அவருடைய அன்றாட வேலையே இறைவேண்டலாக மாறுகிறது.
‘தந்தையின் இதயத்தோடு’ (2020) என்னும் திருத்தூது மடலில், ‘யோசேப்பு உழைக்கிற தந்தை … உழைப்பு மனிதருக்கு மாண்பு தருகிறது’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், வேலைவாய்ப்பின்மை மனித மாண்பிழப்புக்கு வழிவகுக்கிறது என்றும் எச்சரிக்கிறார். இன்றைய நம் இளைஞர்கள் தங்களுக்கான வேலையைக் கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். புலம்பெயர்தலுக்கு அடிப்படையான காரணம் வேலையே.
இன்றைய முதல் வாசகம், கடவுளை ஓர் உழைப்பாளி அல்லது தொழிலாளர் என்று முன்மொழிகிறது. கடவுள் பற்றிய விவிலியத்தின் முதல் அறிமுகம் இதுவே என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. கடவுளை தந்தையாகவோ, தாயாகவோ, நண்பராகவோ, வழிபடு நபராகவோ, போர் வீரராகவோ காட்டாமல் ‘படைப்பவர்’ (‘வேலை செய்பவர்’ அல்லது ‘உழைப்பவர்’ அல்லது ‘ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்குபவர்’) என முன்மொழிகிறது விவிலியத்தின் முதல் பக்கம்.
ஒழுங்கற்ற உலகை ஒழுங்குபடுத்துகிற ஆண்டவராகிய கடவுள், அதை அழகு செய்கிறார். பின் ஒவ்வொன்றும் அதனதன் வேலைகளைச் செய்யுமாறு அவற்றை நிர்ணயிக்கிறார். ஆக, ஒழுங்குபடுத்துதலும் அழகுபடுத்துவதும் மேம்படுத்துவதும் ஆண்டவராகிய கடவுளின் வேலைகளாக இருக்கின்றன. நாம் இன்று செய்கிற அனைத்து வேலைகளையும் – பொருள்கள் தயாரிப்பாக இருக்கலாம், அல்லது சேவைகள் வழங்குவதாக இருக்கலாம் – மேற்காணும் மூன்று செயல்களுக்குள் அடக்கிவிடலாம்: ஒழுங்குபடுத்துதல், அழகுபடுத்துதல், மேம்படுத்துதல். இம்மூன்றுமே உழைப்பின் நோக்கம் எனவும் சொல்லலாம்.
ஆறு நாள்கள் உழைக்கிற அல்லது வேலை செய்கிற கடவுள் ஏழாம் நாளில் ஓய்ந்திருக்கிறார். உழைப்பும் ஓய்வும் இணைந்தே செல்கின்றன.
மனித படைப்பின் நோக்கமே உழைப்பு என்கிறது விவிலியம். உழைக்கிற மாந்தர்களுக்கான ஓய்வையும் விவிலியம் வலியுறுத்துகிறது. ஓய்வு உழைப்புக்கான நம் ஆற்றலைப் புதுப்பிக்கிறது. உழைப்பின் வழியாக நம் படைப்பாற்றல் வெளிப்படுகிறது. உழைப்பின் வழியாக கடவுளுடைய படைப்புப் பணியில் நாம் பங்காற்றுகிறோம். உழைப்பு நம் தன்மதிப்பையும் மாண்பையும் உயர்த்துகிறது. உழைப்பில் ஆண்-பெண் வேறுபாடு இல்லை. தொழிற்சாலைகளில் பணி செய்வது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் செய்யும் பணியும் உழைப்பு சார்ந்ததே. அதே வேளையில், உழைக்க இயலாத குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகளை ‘வேலையற்றவர்கள்’ என்று தீர்ப்பிடுவதும், உழைக்க இயலாத அவர்களை மாண்புக் குறைவாக நடத்துவதும் தவறானது.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் ஞானத்தைக் கண்டு வியக்கிற அவருடைய சமகாலத்து மக்கள், ‘தச்சருடைய மகன்’ இவருக்கு ஞானம் எப்படி வந்தது? என வியக்கிறார்கள். அன்று தொடங்கி இன்று வரை நாம் இத்தகைய முற்சார்பு எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இத்தகைய எண்ணங்களைக் கொண்டே நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம். மற்றவர்களுக்கும் நமக்குமான சுவர்களை ஏற்படுத்திக்கொள்கிறோம். இயேசு மற்றவர்களுக்குத் தம்மை நிரூபித்துக்கொண்டிருக்கவில்லை. அவர் தம் வழியே செல்கிறார்.
‘தச்சர்’ என்று இங்கே வழங்குப்படுகிறவரையே நாம் ‘தொழிலாளரின் பாதுகாவலர்’ எனக் கொண்டாடுகிறோம். இயேசுவுக்கு இழைக்கப்பட்டதுபோல, யோசேப்புக்கும் இங்கே தவறு இழைக்கப்படுகிறது. அவரும் ‘தாழ்வானது’ எனக் கருதிய வேலையைச் செய்வதாக மக்கள் கருதுகிறார்கள். ஆனால், யோசேப்பு இதைக் கேள்விப்பட்டாலும் ஒன்றும் பெரிதாக எடுக்க மாட்டார்.
உழைப்பில் உயர்வு-தாழ்வு இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் உழைக்கிறோம். சிலர் உடல் உழைப்பின் வழியாக, சிலர் அறிவின் வழியாக, சிலர் சிறப்புப் பயிற்சி பெற்றதன் வழியாக என்று நாம் அனைவரும் ஏதோ ஒரு வேலையைச் செய்கிறோம்.
உழைப்பே உலகின் பசியை ஆற்றுகிறது!
இன்றைய நாளில் நம் புனிதர் நமக்குத் தருகிற பாடங்கள் எவை?
(அ) யோசேப்பின் முதல் உழைப்பு இயேசுவை வளர்ப்பதாக இருந்தது.
(ஆ) இரண்டாவதாக, அவர் தச்சுத் தொழிலின் வழியாக திருக்குடும்பத்திற்கு உணவு தந்தார்.
(இ) மூன்றாவதாக, இன்று புனிதராக நமக்காக இன்னும் உழைக்கிறார் – கடவுள் முன்னிலையில் பரிந்து பேசுகிறார் – ஏனெனில், புனிதர்கள் ஓய்வெடுப்பதில்லை!
யோசேப்பின் பாதுகாவலை நாடும் நாம் அனைவருமே தச்சரின் பிள்ளைகளே!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment