இன்றைய இறைமொழி
சனி, 13 ஜூன் 2026
தூய மரியாவின் மாசற்ற இதயம், நினைவு
பதுவை நகர் புனித அந்தோனி, விருப்ப நினைவு
எசாயா 61:9-11. லூக்கா 2:41-51
அருளின் தோட்டம் அமைதியின் பள்ளி
இயேசுவின் தூய்மைமிகு இதயத்தைத் தொடர்ந்து வரும் நாளில் தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயத்தை நினைவுகூர்கிறோம். இந்த இதயம் அனைத்தையும் அமைதியாகத் தியானித்தது, அனைவரையும் அன்பு செய்தது, துன்பம் அனுபவித்தது, கடவுளில் மகிழ்ந்தது.
(அ) அருளின் தோட்டம்
இன்றைய முதல் வாசகத்தில், மகிழ்ச்சியான மலர்தலின் காட்சியைக் காண்கிற எசாயா, ‘நிலம் முளைகளைத் தளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்’ என எழுதுகிறார்.
கன்னி மரியாவின் இதயம் அருளின் தோட்டமாக இருந்தது. ஆண்டவருடைய விருப்பத்துக்குத் தன்னையே கையளித்த மரியாவின் இதயம் இறையன்பால் பற்றி எரிந்தது. தன்மேல் விழுகிற மழைத்துளிக்குப் பதிலிறுப்பு செய்கிற மண் போல தன்மேல் இறங்கிய தூய ஆவியாருக்குப் பதில் தருகிறார் மரியா: ‘இதோ, நான் ஆண்டவருடைய அடிமை!’ இன்றைய நம் உலகத்தில் ஆணவமும் கோபமும் மேலோங்கி நிற்கிறது. நமக்கு மாற்று இதயத்தைத் தருகிறார் மரியா. அருள் நிறைந்த இதயம் தாழ்ச்சியுடன் இருக்கிறது.
(ஆ) அமைதியின் பள்ளி
காணாமற்போன தங்களுடைய மகனைக் கண்டுபிடிக்கிறார்கள் மரியாவும் யோசேப்பும். இயேசுவின் சொற்களுக்குப் பதில் தராத மரியா, அவற்றைத் தன் உள்ளத்தில் பதித்து சிந்திக்கின்றார். சிதறிய படத் துண்டுகளை ஒன்றாகக் கோர்த்து அதன் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதுபோல அனைத்தையு; இணைத்துப் பார்க்கிறார் மரியா. பெத்லகேமில் இடையர்கள் குழந்தை இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்விலும் அமைதி காத்து அனைத்தையும் உள்ளத்தில் இருத்தினார் மரியா.
இன்றைய நம் உலகம் சத்தங்கள் நிறைந்ததாக இருக்கிறது. அமைதி அல்லது மௌனம் நமக்கு ஏற்புடையதாக இல்லை. வாழ்வின் எதார்த்தங்களை மௌனத்தால்தான் புரிந்துகொள்ள முடியும் எனக் கற்பிக்கிறார் மரியா.
அருளும் அமைதியும் நிறைந்திருக்கிற இதயம் தூய்மையாகவும் கடவுளின் தாய்மைக்குத் தயார்நிலையிலும் இருக்கிறது எனக் கற்றுத் தருகிறார் மரியா.
அன்பின் கோடி அற்புதர்
அன்பின் கோடி அற்புதர், ஏழைகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிற பதுவை நகர் புனித அந்தோனியாரையும் இன்று (13 ஜூன்) நாம் நினைவுகூர்கிறோம். 1195-ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்து, அகுஸ்தினார் சபையில் அருள்பணியாளராக மாறுகிற அந்தோனியார் பிரான்சிஸ்கு சபையாரின் மறைபரப்பு ஆர்வத்தால் கவரப்பட்டு பிரான்சிஸ்குவின் சபையில் நுழைகிறார். மறைத்தூது பணி ஆர்வம் அவரை மொராக்கோவுக்கு இட்டுச் சென்றது. எனினும், உடல் நலக் குறைவால் போர்ச்சுகல் அனுப்பப்பட்டார். ஆனால், அவரும் அவருடைய தோழர்களும் வந்த கப்பல் இத்தாலியில் கரை ஒதுங்கியதால் அங்கேயே தங்கி பணி செய்கிறார். 36 ஆண்டுகள் (இறப்பு 1231) மட்டுமே வாழ்ந்த இப்புனிதர் சீடத்துவத்தின் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இறந்த அடுத்த ஆண்டிலேயே திருத்தந்தை 9-ஆம் கிரகொரி அவர்களால் புனிதராக அறிவிக்கப்படுகிறார்.
(அ) இறைத்திருவுளத்துக்கு அர்ப்பணம்
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ தன் பணியின் இலக்கு என்று கருதி அங்கு செல்கிறார். ஆனால், உடல்நலக்குறைவால் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டபோது இத்தாலியில் தரை இறங்குகிறார். தன் விருப்பம் அல்ல, மாறாhக, இறைவிருப்பமே செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை உணர்ந்தவராக இருந்தார் நம் புனிதர்.
(ஆ) கடவுள்மேல் பற்றுறுதி
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார் அந்தோனியார். இறையியல் படிப்பு, தொடர் அறிவுத்தேடல், வறியவர்கள்மேல் பரிவு என அவர் மேற்கொண்ட அனைத்துப் பயணங்களிலும் கடவுளை உறுதியாகப் பற்றிக்கொண்டார். குழந்தை இயேசுவை கைகளில் ஏந்தும் பேறு பெறுகிறார். தான் பெற்றுள்ள அறிவு மற்றும் மறையுரை வைக்கும் ஆற்றல் ஆகியவற்றை அவருடைய குழும உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் பொறுமை காத்தார்.
(இ) இன்றே மீட்பு!
‘வாழ்வின் இன்றைய பொழுதே மீட்பின் பொழுதாக இருக்கிறது.’ இயேசுவின் பிறப்பை இடையர்களுக்கு அறிவிக்கிற வானதூதர்கள், ‘இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்’ என்கிறார்கள். சக்கேயுவின் வீட்டுக்குள் நுழைகிற இயேசு, ‘இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று!’ என்கிறார். தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் இறைவனின் இயங்குதளமாகக் கண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தித் தன் மக்களை மேம்படுத்தினார் அந்தோனியார். தொடர் பயணம், எழுத்து, இறைவேண்டல் என தன் வாழ்வின் குறுகிற நாள்களை நிறைவுள்ளவை ஆக்கினார்.
ஆண்டவராகிய கடவுள் நம் ஒவ்வொருவரையும் வாழ்வு என்னும் கொடையால் அணி செய்து இந்த உலகத்துக்குள் அனுப்பியுள்ளார். நாம் அனைவரும் கடவுளின் சீடர்கள் என்னும் எண்ணம் நம் வாழ்வையும் பணியையும் உறவுகளையும் மேம்படுத்துகிறது.
திருஅவையின் மறைவல்லுநரான இவர் நற்போதனைக்கு நம்மை இட்டுச்செல்வாராக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment