இன்றைய இறைமொழி.  ஞாயிறு, 22 அக்டோபர் 2023. இதயங்களும் பாதங்களும்.

இன்றைய இறைமொழி 
ஞாயிறு, 22 அக்டோபர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
எசாயா 45:1,4-6. 1 தெசலோனிக்கர் 1:1-5அ. மத்தேயு 22:15-21.
நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு

இதயங்களும் பாதங்களும்

இன்று ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு. இந்த நாளை அகில உலக மறைபரப்புப் பணி (நற்செய்தி அறிவிப்பு பணி) ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்துள்ளோம் என்பதையும், இந்த உலகத்தில் நாம் கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகரும் அழைப்பைப் பெற்றுள்ளோம் என்பதையும் இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது. ‘பற்றியெரியும் இதயங்கள், பயணப்படும் பாதங்கள்’ என்னும் தலைப்பில் இந்த ஆண்டு மறைபரப்புக் கொண்டாட்டத்துக்கான செய்தியை வழங்கியுள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

பற்றியெரியும் இதயங்கள் நம் வேர்களையும், பயணப்பட வேண்டிய பாதங்கள் நாம் தர வேண்டிய கனிகளையும் அடையாளப்படுத்துகின்றன. இறையன்பில் வேரூன்றி, பிறரன்பில் கனிதருதல் நற்செய்தி அறிவிப்பு பணி. எருசலேம் நோக்கித் திரும்ப வேண்டிய கால்கள், இயேசுவின் சொற்களால் பற்றியெரியும் உள்ளங்களால் உந்தப்பட வேண்டும்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 45:1,4-6), இரண்டாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை ஆற்றுப்படுத்தும், நம்பிக்கை தரும் பகுதி இது (எசா 44:24 – 45:8). இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அனுபவித்த சிறைவாசமும், நாடுகடத்தப்பட்ட நிலையும், பாரசீக அரசர் சைரஸ் அவர்களால் நிறைவுக்கு வருகிறது. கிமு 539-இல் பாபிலோனியாவை வெற்றிகொள்ளம் சைரஸ், சிறையில் இருக்கும் அனைவரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்ற ஆணை பிறப்பிக்கின்றார் (காண். 2 குறி 36:22-33). எசாயாவைப் பொருத்தவரையில், கடவுளே சைரஸ் அரசரில் செயலாற்றுகிறார். அல்லது, நெபுகத்னேசர் அரசரைக் கொன்று இஸ்ரயேலைக் காயப்படுத்திய கடவுள், சைரஸ் அரசரைக் கொண்டு அக்காயத்திற்கு மருந்திட்டுக் குணமாக்குகிறார். ஆக, நெபுகத்னேசர் மக்களை அடிமைப்படுத்தினாலும் அவரது அதிகாரம் வரையறைக்கு உட்பட்டதே. ஏனெனில், அவருக்கு எதிராகக் கடவுள் சைரஸ் அரசரை எழுப்புகிறார். சைரஸ் அரசரை எசாயா, ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்’ என அழைக்கிறார். ‘திருப்பொழிவு செய்யப்படுதல்’ என்பது இஸ்ரயேல் மக்களின் அரசர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். ஆனால், சைரஸ் அரசர் இஸ்ரயேல் மக்களை அவர்களது அடிமைத்தளையிலிருந்து விடுவித்ததால், ‘யாக்கோபை முன்னிட்டும் கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஊழியராக’ அவர் மாறுகின்றார். 

ஆனால், இது சைரஸ் அரசருக்கே தெரியாது. ஆகையால்தான், ‘நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்’ என்றும், ‘நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்’ என்றும் ஆண்டவர் சொல்கின்றார். இது நமக்குச் சொல்வன இரண்டு: ஒன்று, வரலாற்று நிகழ்வுகள் அனைத்தின் காரணர் கடவுள் ஒருவரே. இரண்டு, நம்மை அறியாமலேயே கடவுள் நம்மைப் பயன்படுத்திச் செயலாற்ற வல்லவர்.

இவ்வாசகம் மூன்று விடயங்களைக் கொண்டிருக்கிறது: கடவுளின் அருள் எல்கைகளைக் கடந்து விரிகிறது. கடவுள் வரலாற்றைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார். கடவுள் எல்லாம் வல்லவர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 1:1-5), புனித பவுல் தெசலோனிக்கத் திருஅவைக்கு எழுதிய திருமடலின் வாழ்த்து மற்றும் முன்னுரைப் பகுதியாக அமைந்துள்ளது. புதிய ஏற்பாட்டில் முதன்முதலாக எழுதப்பட்ட (கிபி 51) இந்நூலை, பவுல், கொரிந்து நகரிலிருந்து எழுதுகிறார். தெசலோனிக்கத் திருஅவை என்பது மாசிதோனியாவில் உள்ள ஒரு குழுமம். இந்தக் கடிதத்தின் அமைப்பே பவுலின் மற்றக் கடிதங்களிலும் காணப்படுகின்றன. தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தல் மற்றும் இயக்கம் குறித்துக் கடவுளுக்கு நன்றிகூறுகிறார் பவுல். ‘உங்கள் அனைவருக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்’ என்னும் பவுலின் வார்த்தைகள், தெசலோனிக்கத் திருஅவையை ஒரே குழுமமாக இணைத்தது இறைவன்தான் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதை முன்வைக்கின்றன. மேலும், ‘செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள நம்பிக்கை’ என இறைமக்களின் மதிப்பீடுகளையும், நற்பண்புகளையும் பாராட்டுகின்றார். ஆக, தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் காரணம் தான் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்குக் காரணம் இறைவன் என்றும், இறைமக்கள் என்றும் அறிக்கையிடுகிறார் பவுல்.

இங்கேயும் மூன்று விடயங்கள்: நம்பிக்கை செயலில் வெளிப்பட வேண்டும். நாம் உழைக்கிற உழைப்பு அனைத்தும் அன்பினால் தூண்டப்பட வேண்டும். மனவுறுதி நம் எதிர்நோக்கை அணையாமல் காக்க வேண்டும்.

நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 22:15-21) பாடச் சூழல் எருசலேமில் இயேசு. வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்தபின், அவருடைய உவமைப் பொழிவு முடிந்து, நான்கு குழுவினர் அவரை வௌ;வேறு கேள்விகளால் சோதிப்பதாக மத்தேயு பதிவு செய்கின்றார். எருசலேம் நகருக்குள் நுழைகிற இயேசு முதலில் கோவிலைத் தூய்மையாக்குகிறார். இதுவே அவருடைய எதிரிகளின் கோபத்தைத் தூண்டியது. தொடர்ந்து, ‘இரு புதல்வர்கள்,’ ‘கொடிய குத்தகைக்காரர்,’ ‘திருமண விருந்து’ உவமைகள் வழியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் நிராகரிக்கப்பட்டதையும், விண்ணரசின் அழைப்புக்கு அவர்கள் தகுந்த பதிலிறுப்பு செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறது. இது அவர்களுடைய கோபத்தை அதிகமாக்கியது. இயேசுவுக்கு எதிராகச் செயல்படவும் அவரைப் பேச்சில் சிக்க வைக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். 

அவ்வகையில், பரிசேயர்கள், ஏரோதியர்கள் சிலரோடு இணைந்து, அவரைப் பேச்சில் சிக்கவைக்குமாறு அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்புகின்றனர்: ‘சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?’ இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனெனில், ‘ஆம்’ என்றாலும், ‘இல்லை’ என்றாலும் இயேசுவுக்கு ஆபத்து. ‘முறையே’ என இயேசு சொன்னால், அவர் மக்களை மீட்க வந்த அரசர் அல்லர், அவர் இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தை விரும்புகிறார் என மக்களை அவருக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள். ‘முறை இல்லை’ எனச் சொன்னால், அவர் உரோமைக்கும் உரோமையின் ஆட்சியாளர்களுக்கும் எதிராகச் செயல்படுவதாக அவர்மேல் குற்றம் சுமத்துவார்கள்.

அவர்களின் தீய நோக்கத்தை அறிகின்ற இயேசு, ‘வெளிவேடக்காரரே’ என அவர்களை அழைத்து, ‘வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் கொடுங்கள்’ என்று கேட்க, அவர்களும் நாணயம் ஒன்றைக் கொடுக்கின்றனர். அதில், ‘இறைவனான அகுஸ்து பேரரசரின் மகன் திபேரியு’ என எழுதப்பட்டுள்ளது. கடவுள் வாக்களித்துக் கொடுத்த நாட்டில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அல்லது யூதர்கள், தங்களின் கைகளிலும் பைகளிலும் உரோமை அரசின் நாணயத்தை, அதுவும், ‘இறைவனான அகுஸ்து’ என்னும் எழுத்துகள் கொண்ட நாணயத்தை வைத்திருப்பது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. ‘நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே’ என அன்றாடம் செபித்துவிட்டு (காண். இச 6:4), இன்னொருவரை இறைவன் எனக் கொண்டாடுவது தவறு என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றார் இயேசு. ஆகையால்தான், வெளிவேடக்காரரே என அவர்களை அழைத்து, ‘சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்’ எனக் கூறுகிறார். 

இப்படிச் சொல்வதன் வழியாக, உரோமைப் பேரரசின் அரசாட்சியை ஏற்றுக்கொள்வதோடு, உரோமைக்கு வரி செலுத்துவதை ஏற்றுக்கொள்வதோடு, ‘சீசருக்கு உரியது அவருடைய நாணயமே தவிர வேறு அல்ல!’ என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கின்றார். மேலும், சீசருக்கு உரிய நாணயத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, ‘கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்’ – அதாவது, ‘உங்கள் நல்வாழ்வு, நற்செயல், நற்பண்பு, ஆற்றல், அன்பு, வலிமை அனைத்தையும் ஆண்டவருக்குக் கொடுங்கள்’ என்கிறார். இப்படிச் சொல்வதன் வழியாக, சீசருக்கு உரியதையும் தாண்டியவை இருக்கின்றன என்றும், சீசர் ஒருபோதும் இறைவன் அல்லர் என்றும், இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டதே அனைத்து அதிகாரம் என்றும் ஒருசேர உணர்த்துகிறார். சீசர், பாலஸ்தீனம் அல்லது எருசலேமின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலைக் கட்டுப்படுத்தலாமே தவிர, மனித வாழ்வையும், மனித இலக்கையும் கட்டுப்படுத்த அவரால் இயலாது. ஆக, மனித அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டதே. 

சீசருடைய வரையறையை தம் சமகாலத்தவர்க்கு நினைவூட்டுவதோடு, சீசரையும் தாண்டிய கடவுளின் செயல்களுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். எப்போதும் ஆண்டவரே கடவுள், சீசர் அல்லர் என முன்மொழிகிறார்.

சைரசு, சீசர் என அனைத்துப் பேரரசர்களுக்கும் மேலாக இருக்கக் கூடியவர் ஆண்டவர். இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 96) குறிப்பிடுவது போல, ‘அவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும்.’

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) அனைத்தும் ஆண்டவருடைய கையில்!

இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றது நெபுகத்னேசர். ஆனால், ஆண்டவரே அனுமதித்ததால்தான் அது நடந்தேறியது. பாரசீகப் பேரரசர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றி மீண்டும் மக்களைத் தம் சொந்த நாட்டுக்கு அனுப்புகிறார். இதை நடத்துபவரும் ஆண்டவரே. ஆக, ‘அவரே இதைச் செய்கிறார். அவரே ஆண்டவர். வேறு எவரும் இல்லை’. உலகில் உள்ள எந்த அதிகாரமும் வரையறுக்கு உட்பட்டதே. யாரும் எல்லா நாட்களும் எல்லா இடத்திலும் ஆட்சி செலுத்துவதில்லை. எல்லா அதிகாரமும் முற்றுப்பெறும். ஆக, நாம் இன்று அதிகாரத்தில் இருந்தால் இதை உணர்ந்து கொஞ்சம் தாழ்ச்சியாக நடந்துகொள்வோம். அதிகாரத்திற்கு உட்பட்டு இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்.

(ஆ) செயல்-உழைப்பு-மனவுறுதி

நாம் கொண்டிருக்கிற கிறிஸ்தவ நம்பிக்கை வெறும் கோட்பாட்டு நம்பிக்கையாக நின்றுவிடக் கூடாது. மாறாக, அது பிறரன்புச் செயலாக வெளிப்பட வேண்டும். நம் உழைப்பு அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். இயேசுவைப் பற்றிய எதிர்நோக்கு மனவுறுதி தர வேண்டும். செயல், உழைப்பு, மனவுறுதி இம்மூன்றின் வழியாக நாம் நமக்கென்று ஓர் அதிகாரத்தைக் கட்டி எழுப்ப முடியும். நம்மை ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் இருந்தாலும், நான் என்னை முதலில் ஆட்சி செய்ய வேண்டும், எனக்குரிய வாழ்வை என் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். என் சொற்களுக்கும் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் எண்ணிப்பார்ப்போம். அவற்றுக்கு ஏற்ற உழைப்பை நாம் கொடுக்கிறோமா? நம் செயல்கள் பயனற்றதாகத் தெரியும்போது மனவுறுதியோடு தொடர்ந்து பயணிக்கும் பக்குவம் பெறுகிறோமா?

(இ) சீசருக்கு உரியதும் கடவுளுக்கு உரியதும்

சீசருக்கு வரி செலுத்துவது முறையா? எனக் கேட்ட பரிசேயர்களும் ஏரோதியர்களும் வாழ்வின் இன்னொரு பக்கத்தை மறந்துவிட்டதை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். சீசருக்கு உரியது எது, கடவுளுக்கு உரியது என நாம் தேர்ந்து தெளிய வேண்டும். உலகுசார்ந்த மற்றும் கடவுள்சார்ந்த செயல்களுக்கு உரிய நேரத்தை, ஆற்றலை நாம் கொடுக்க வேண்டும். தனிநபர், குடும்பம் என நம் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளாமல், சமூகம், பங்கு, மறைமாவட்டம் ஆகிய தளங்களில் நம்மையே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சமூக அக்கறை, வறியோர் மேம்பாடு, இயற்கை பேணுதல் என நம்மையே விரித்துக்கொடுக்க வேண்டும். சமூகத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் நிறையவற்றைப் பெறுகிற நாம் ஒரு சிலவற்றின் வழியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இறுதியாக,

இறைவார்த்தை கேட்டு நம் உள்ளங்கள் தூண்டப்பட்டால், நம் பாதங்கள் பயணங்களைத் தொடங்கும். மறைபரப்புப் பணி என்பது நம் நற்செய்தியை அறிவிப்பது மட்டுமல்ல. மாறாக, தேவையிலிருப்பவர்களை நாடிச் செல்வது, வலுவற்றவர்களுக்குத் திடம் தருவது, ஒருவர் மற்றவரை ஊக்குவிப்பது போன்றவையே.

‘மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்’ என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 96).

நம் பணிகளின் இலக்கு ஆண்டவரின் மாட்சியாக அமையட்டும்!

இதயங்கள் இறைவனிலும் பாதங்கள் உலகிலும் இருக்கட்டும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment