இன்றைய இறைமொழி. வெள்ளி, 9 அக்டோபர் 2026. கூட்டி அழகுபடுத்தப்பட்ட வீடு!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 9 அக்டோபர் 2026
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
கலா 3:7-17. லூக் 11:15-26

கூட்டி அழகுபடுத்தப்பட்ட வீடு!

இயேசு நிகழ்த்துகிற வல்ல செயல்களைக் காண்கிற அவருடைய சமகாலத்து மக்கள் அவர் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். பேய், பேய்களின் தலைவன், தீய ஆவி என்று நகர்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

வாசகத்தின் இறுதியில், உருவகம் ஒன்றைத் தருகிறார் இயேசு. கூட்டி அழகுபடுத்தப்பட்ட வீடு! யாராவது ஒருவர் நம் வீட்டில் நோய்வாய்ப்பட்டால், நோய் நீங்கியவுடன் அவர் பயன்படுத்திய கட்டில், ஆடைகள், உடைகள், பாத்திரங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துவதுடன், சில நேரங்களில் ஒட்டுமொத்த வீட்டையும் கழுவித் துடைக்கிறோம். இத்தூய்மையை நாம் பேணாவிடில் மறுபடியும் நோய் வந்துவிடும் என்பது இயேசுவின் பாடம்.

ஆன்மிக வாழ்க்கையில் நாம் தியானம் செய்து, பாவசங்கீர்த்தனம் செய்து, திருப்பலி கண்டு நம்மையே தூய்மைப்படுத்திக் கொண்டாலும், தொடர் முயற்சி இல்லாதபோது எதிரி நம்மை எளிதாக வீழ்த்திவிடுவார்.

தொடர் செயல்பாட்டுக்கான விடாமுயற்சியே நமக்கு அருள்வாழ்விலும் பொருள்வாழ்விலும் வெற்றி தருகிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment