இன்றைய இறைமொழி. ஞாயிறு, 22 நவம்பர் 2026. கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 22 நவம்பர் 2026
இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர், பெருவிழா
எசே 34:11-12, 15-17. 1 கொரி 15:20-26, 28. மத் 25:31-46

கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்

இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறாகிய இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அனைத்துலக அரசராகக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் அனைத்திலும் ஓர் அழகான இயக்கம் இருக்கிறது. எசேக்கியேல் நூலில் அரசர் ஆயனாக வருகிறார். திருப்பாடலில் ஆண்டவர் வழிநடத்தும் ஆயனாக இருக்கிறார். பவுலின் திருமுகத்தில் கிறிஸ்து எல்லா அதிகாரங்களையும் வென்று இறுதியில் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைக்கிறார். நற்செய்தியில் அரசர் அரியணையில் அமர்ந்திருக்கிறார், ஆனால் அவர் தன்னைப் பசித்தவர், தாகமுற்றவர், அந்நியர், ஆடையற்றவர், நோயுற்றவர், சிறையிலிருப்பவர் ஆகியோருடன் ஒன்றிணைத்துக்கொள்கிறார்.

இந்த நான்கு வாசகங்களும் சேர்ந்து ஒரு கேள்வியை நம்முன் வைக்கின்றன: கிறிஸ்து எப்படிப்பட்ட அரசர்? அவருடைய அரசாட்சியில் நாம் எப்படிப்பட்டவர்களாக வாழ வேண்டும்?

(அ) கிறிஸ்து அரசர் பெருவிழாவின் வரலாறு

கிறிஸ்து அரசர் பெருவிழா மிகவும் பழமையான திருவிழா அல்ல. 1925ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பியுஸ் அவர்கள் ‘க்வாஸ் ப்ரிமாஸ்’ என்னும் சுற்றுமடல் வழியாக இத்திருவிழாவை அறிவித்தார். முதல் உலகப் போருக்குப் பின்னர் உலகம் தேசியவாதம், அரசியல் அதிகாரப் போட்டி, வன்முறை, மனிதனை மையப்படுத்திய ஆட்சிக் கொள்கைகள் ஆகியவற்றால் சிதறிக்கொண்டிருந்த காலம் அது. மனித அதிகாரம் இறுதியானது அல்ல, அனைத்திற்கும் மேலானது கடவுளின் அதிகாரம் என்பதை நினைவூட்டவே இத்திருவிழா உருவாக்கப்பட்டது.

தொடக்கத்தில் இத்திருவிழா அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று, புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய திருவழிபாட்டு சீரமைப்பில், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் இதனை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கு மாற்றினார். இதனால் இப்பெருவிழா இன்னும் ஆழமான இறுதிக்காலப் பொருளைப் பெற்றது. மனித வரலாற்றின் நிறைவு கிறிஸ்துவில் இருக்கிறது, எல்லா அதிகாரங்களும் இறுதியில் அவரிடம் நிறைவு பெறுகின்றன் அனைத்தும் கடவுளில் ஒன்றிணைகின்றன என்பதே இந்நாளின் செய்தி.

அதனால்தான் இன்றைய நற்செய்தியாக இறுதித் தீர்ப்பு பற்றிய மத்தேயு 25:31-46 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி நம்மை அச்சுறுத்துவதற்காக மட்டும் அல்ல. உலக வரலாற்றின் முடிவில் யார் உண்மையான அரசர் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

(ஆ) இயேசு அரசரா?

இயேசு யூதா குலத்தில் பிறந்தவர். பழைய ஏற்பாட்டில் பன்னிரு குலங்களில் யூதா குலம் அரச குலம் என்று கருதப்படுகிறது. இயேசு பிறந்தபோது அவரைச் சந்திக்க வருகிற கீழ்த்திசை ஞானியர்களில் அரசநிலையின் அடையாளமான பொன்னை அவருக்குப் பரிசளிக்கிறார்கள். நத்தனியேல், ‘நீரே இஸ்ரயேலின் அரசர்’ என்கிறார். இயேசுவின் சிலுவையின் மேல் ‘இவர் யூதரின் அரசர்’ என்று எழுதப்படுகிறது. பிலாத்து, ‘நீ யூதரின் அரசனா?’ என்று கேட்கிறார். ஆனால் இயேசுவின் அரசத்தன்மை உலக அரசர்களின் அரசத்தன்மையைப் போன்றதல்ல.

இன்றைய நற்செய்தியில் மூன்று அரசியல் அல்லது அரசத்தன்மை சார்ந்த சொற்கள் வருகின்றன: அரியணை, அரசர், அரசாட்சி. ‘மானிட மகன் தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்’ என்று நற்செய்தி தொடங்குகிறது. பின்னர் ‘அரசர்’ நீதிமான்களிடம் பேசுகிறார். அவர்களை ‘உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசாட்சியை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்’ என்று அழைக்கிறார்.

உண்மையான அதிகாரம் வெளியிலிருந்து கிடைக்கும் பதவியிலிருந்து வருவதில்லை. அது உள்ளிருந்து எழுகிறது. தன்னை வெல்லக்கூடியவர், தன் பேராசையை ஆளக்கூடியவர், தன் கோபத்தை அடக்கக்கூடியவர், தன் அச்சத்தை எதிர்கொள்ளக்கூடியவர், தன் சுயநலத்தைத் தாண்டக்கூடியவர் உண்மையில் அரசர்.

இந்தப் புரிதலை இரண்டாம் வாசகம் இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. கிறிஸ்து எல்லா பகைவர்களையும் வெல்வார். இறுதிப் பகைவனாகிய மரணமும் அழிக்கப்படும். பின்னர் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைப்பார். அப்போது, பவுலின் அழகான வார்த்தைகளில், ‘கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்.’

இதுவே கிறிஸ்துவின் அரசாட்சியின் இறுதி நோக்கம். ஒருவர் மற்றவர்மேல் ஆட்சி செய்வது அல்ல, கடவுள் அனைவரிலும் நிறைந்து இருப்பது. யாரும் மற்றவரை அடிமையாக்காத நிலை. ஒருவர் மற்றவரில் கடவுளின் உருவத்தைக் காணும் நிலை. அனைவருடைய மாண்பும் மதிக்கப்படும் நிலை.

(இ) இன்றைய நான்கு வாசகங்கள் காட்டும் அரசர்

முதல் வாசகத்தில் கடவுள் தம்மை அரசராக அல்ல, ஆயனாக அறிமுகப்படுத்துகிறார். ‘சிதறுண்ட ஆடுகளைத் தேடுவேன்; காணாமற்போனதை மீட்பேன், வழிதவறியதைத் திரும்பக் கொண்டு வருவேன்; காயமுற்றதற்குக் கட்டுப்போடுவேன், நலிந்ததைத் திடப்படுத்துவேன்’ என்கிறார். இறுதியில், ‘ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் இடையே நான் நீதி வழங்குவேன்’ என்கிறார்.

இதுதான் கடவுளின் அரசத்தன்மை: தேடுதல், சேர்த்தல், காயத்தைக் கட்டுதல், நலிந்ததை வலுப்படுத்துதல், நீதி நிலைநாட்டுதல்.

பதிலுரைப் பாடல் இதையே தனிப்பட்ட அனுபவமாக மாற்றுகிறது: ‘ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை.’ தாவீது அரசராக இருந்தாலும், தன்னை ஓர் ஆடாகவும் ஆண்டவரைத் தன் ஆயராகவும் காண்கிறார். பசும்புல்வெளியில் அவர் மேய்க்கிறார். அமைதியான நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார். இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலும் உடன் நடக்கிறார். உணவு அளிக்கிறார். வழி நடத்துகிறார். பாதுகாக்கிறார். ஆக, கடவுளின் அரசத்தன்மை நமக்கு கிடைக்கும் பராமரிப்பு, உணவு, வழிகாட்டுதல், பாதுகாப்பு ஆகியவற்றில் வெளிப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த அரசராக இருக்கிறார். ஆதாமில் மரணம் வந்தது, கிறிஸ்துவில் உயிர்ப்பு வருகிறது. எல்லா ஆட்சிகளும் அதிகாரங்களும் வல்லமைகளும் இறுதியில் அவரிடம் அடங்குகின்றன. ஆனால் கிறிஸ்து அந்த அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொள்ளவில்லை. அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கிறிஸ்துவின் அரசத்தன்மை பொருள்சார்ந்த உலகையும் ஆன்மீக உலகையும் உள்ளடக்குகிறது. உயிரும் இறப்பும், நிகழ்காலமும் எதிர்காலமும், காணப்படுவதும் காணப்படாததும் அனைத்தும் அவரில் நிறைவு பெறுகின்றன. அதன் இறுதி வார்த்தை: ‘கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்.’

நற்செய்தியில் இந்த அரசத்தன்மை இன்னும் ஆச்சரியமான வடிவம் பெறுகிறது. அரசர் அரியணையில் அமர்கிறார். அரசாட்சியை வழங்குகிறார். தீர்ப்பளிக்கிறார். ஆனால் தம்மை எங்கே அடையாளப்படுத்துகிறார்? அரண்மனையில் அல்ல. அதிகாரிகளோடு அல்ல. செல்வந்தர்களோடு அல்ல.

‘நான் பசித்திருந்தேன். நீங்கள் உணவு கொடுத்தீர்கள். தாகமுற்றிருந்தேன். குடிக்கக் கொடுத்தீர்கள். அந்நியனாய் இருந்தேன். ஏற்றுக்கொண்டீர்கள். ஆடையின்றி இருந்தேன். ஆடை கொடுத்தீர்கள். நோயுற்றிருந்தேன். கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன். என்னைக் காண வந்தீர்கள்.’

அரசத்தன்மைக்கு முற்றிலும் எதிராகத் தோன்றும் ஆறு நிலைகளில் இயேசு தன்னை மறைத்துக்கொள்கிறார். பசியோடு இருப்பவர் அரசர். தாகத்தோடு இருப்பவர் அரசர். அந்நியர் அரசர். ஆடையற்றவர் அரசர். நோயுற்றவர் அரசர். சிறையிலிருப்பவர் அரசர். ‘இந்தச் சின்னஞ்சிறிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எனக்கே செய்தீர்கள்’ என்று இயேசு சொல்வதன் வழியாக, அரசரின் முகத்தை சின்னஞ்சிறியவர்களின் முகத்தில் காணச் செய்கிறார்.

இதுவே இறுதித் தீர்ப்புக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கும் உள்ள ஆழமான தொடர்பு. இறுதியில் நாம் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டோமா என்ற கேள்வி, அவரை எத்தனை முறை ‘ஆண்டவரே’ என்று அழைத்தோம் என்பதனால் தீர்மானிக்கப்படுவதில்லை. நம் முன் வந்த சின்னஞ்சிறியவரில் அவரை அடையாளம் கண்டோமா என்பதால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

(ஈ) இந்தப் பெருவிழா நமக்குச் சொல்லும் மூன்று பாடங்கள்

முதல் பாடம்: நாமும் அரசர்களும் அரசிகளும்தான். கிறிஸ்து நம் சகோதரர். நாம் கடவுளின் மகன்களும் மகள்களும். ஆகவே, நமக்குள்ளும் அரச மாண்பு இருக்கிறது. ஆனால் அது மற்றவர்களை ஆளும் உரிமை அல்ல் நம்மையே ஆளும் பொறுப்பு. நம் எண்ணங்களை, சொற்களை, உணர்வுகளை, ஆசைகளை, செயல்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்வதே அரச மாண்பு. மற்றவரைத் தாழ்த்துவதால் நாம் உயர்வதில்லை. அவருடைய மாண்பை மதிக்கும்போது நம் மாண்பும் உயர்கிறது.

இரண்டாவது பாடம்: சின்னஞ்சிறியவர்களைக் கவனிப்பதே அரசப்பணி. கிறிஸ்து தம் சகோதரர் சகோதரிகளாக அடையாளப்படுத்தும் நபர்கள் அனைவரும் தேவையில் இருப்பவர்கள். நம் குடும்பத்தில் கவனிக்கப்படாத ஒருவர் இருக்கலாம். நம் அருகில் தனிமையில் வாழும் முதியவர் இருக்கலாம். வேலை இழந்தவர் இருக்கலாம். நோயுற்றவர் இருக்கலாம். அந்நியராக வந்தவர் இருக்கலாம். பசியோடு இருப்பவர் இருக்கலாம். அவர்களிடம் செய்யும் சிறிய செயல்களே இறையாட்சியின் செயல்கள்.

மூன்றாவது பாடம்: ‘கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்’ இருக்க நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை பல நேரங்களில் மிகவும் தாழ்ந்த நிலைகளில் சிக்கிக்கொள்கிறது: யார் பெரியவர், யார் சிறியவர்; யார் என்னைப் பாராட்டினார், யார் புறக்கணித்தார்; என்னிடம் எவ்வளவு இருக்கிறது, மற்றவரிடம் எவ்வளவு இருக்கிறது, யார் வென்றார், யார் தோற்றார் என்று.

பவுல் நம்மை அதைவிட உயர்ந்த நிலைக்கு அழைக்கிறார். எல்லாவற்றிலும் கடவுளைக் காணும் நிலை. மற்றவரிடம் கடவுளின் உருவத்தைக் காணும் நிலை. வெற்றியிலும் தோல்வியிலும் கடவுளைத் தேடும் நிலை. உடைமையையும் பதவியையும் புகழையும் கடந்து, ‘கடவுள் எனக்கு அனைத்தும்’ என்று சொல்லும் நிலை.

கிறிஸ்து அரசர் பெருவிழாவில் நாம் மேலே அண்ணாந்து பார்த்து ஓர் அரசரைத் தேட வேண்டியதில்லை. சற்றே குனிந்து பார்ப்போம். நம் அருகில் பசியோடு இருப்பவரை, நோயுற்றவரை, அந்நியரை, தனிமையில் இருப்பவரை, உதவி தேவைப்படுபவரை பார்ப்போம். அங்கே அரசர் நிற்கிறார்.

அவரை நாம் அடையாளம் காணும்போது நாமும் நம் அரச மாண்பை உணர்கிறோம். இறுதியில் அரசனும் அடிமையும், பெரியவரும் சிறியவரும், உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் என்ற எல்லைகள் மறைந்து போகின்றன. ‘கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்.’ இதுவே கிறிஸ்துவின் அரசாட்சி. இதுவே நம் அழைப்பு. இதுவே நம் நிறைவு.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a Reply