இன்றைய இறைமொழி
திங்கள், 23 நவம்பர் 2026
பொதுக்காலம் 34-ஆம் வாரம்
திவெ 14:1-5. லூக் 21:1-4
முழுமையான அர்ப்பணம்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஏழைக்கைம்பெண் ஒருவரைச் சந்திக்கிறோம். தன்னிடமிருந்த இரண்டு காசுகளைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் முழுமையாக அர்ப்பணித்த அவருடைய உளப்பாங்கை இயேசு பாராட்டுகிறார்.
இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு நிகழ்வுகளுக்கு சற்று நாள்களுக்கு முன் நடக்கும் இந்த நிகழ்வு உருவகமாக மூன்று பேரைச் சுட்டிக்காட்டுகிறது: வானகத் தந்தை, மரியா, இயேசு. வானகத் தந்தை தம் ஒரே மகனை முழுமையாக இந்த உலகத்துக்கு அளிக்கிறார். மரியா தன் மகனை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறார். இயேசு தம் வாழ்வைத் தமக்கென வைத்துக்கொள்ளாமல் முழுமையாக அதைக் கையளிக்கிறார்.
நிகழ்வில் நாம் காணும் செல்வர்கள் கடவுள் தங்களுக்கு அளித்த கொடையைப் பற்றிக்கொள்கிறார்கள். கைம்பெண்ணோ கடவுளைப் பற்றிக்கொள்கிறார்.
செல்வர்கள் தங்கள் செல்வத்தைகக் கொண்டு தங்கள் எதிர்கால நலனை உறுதிசெய்துகொள்ள விரும்புகிறார்கள். கைம்பெண்ணோ வாழ்வின் உறுதியற்ற தன்மையைக் கொண்டாடுகிறார். தன் இருத்தலும் இயக்கமும் இறைவனில் என்ற நிலையில், நிகழ்காலத்தில் வாழ்கிறார்.
செல்வம் சீடத்துவத்துக்கான தடையாக இருக்கிறது. முழுமையான அர்ப்பணம் சீடத்துவத்தில் நம்மைப் பயிற்றுவிக்கிறது. சீடத்துவத்தின் அர்ப்பணம் முழுமையானது. ஒருவர் சீடராக இருந்தால் முழுமையாக இருக்க வேண்டும், அல்லது இருக்க முடியாது. பாதி-பாதி அர்ப்பணமும், எனக்கு மிஞ்சியது உமக்கு என்ற அர்ப்பணமும் கடவுளுக்கு ஏற்புடையது அல்ல.
இந்தக் கைம்பெண் நமக்குத் தரும் வாழ்வியல் பாடம் என்ன?
நமக்கு வலிக்கும் வரை கொடுப்பது. வலியை விரும்பி ஏற்பது. இந்த நிலையில்தான் நாம் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும். எடுத்துக்காட்டாக, உடலில் கொழுப்பு குறைய வேண்டும் என்று நடைபயிற்சி செய்கிறோம். உடல் வலி எடுக்கும் வரை செய்யும்போதுதான் கொழுப்பு குறையும்.
நம்பிக்கைப் பார்வை. அனைத்தும் கடவுளிடமிருந்து வருகிறது என்று நம்பிக்கைப் பார்வை துணிவோடு நம்மைச் சரணடையச் செய்கிறது. கடவுள் தம் வாக்குறுதிக்குப் பிரமாணிக்கமாக இருப்பார் என்ற நம்பிக்கைப் பார்வை இருந்ததால்தான் ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியடத் துணிகிறார்.
நம் ஆன்மிக வாழ்வில் கடவுளுக்கு மட்டுமல்ல, நம் வாழ்வுக்கே நாம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கை இன்றைய நாள் நம்மை அழைக்கிறது.
ஏழைக் கைம்பெண் உள்ளத்தில் நிறைவுடையவராக இருந்தார். உள்ளத்தின் நிறைவே கடவுளின் திருமுன் நாம் கொண்டிருக்கும் செல்வம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a Reply