இன்றைய இறைமொழி. வியாழன், 30 ஜூலை 2026. கடவுளின் கைகளிலிருந்து

இன்றைய இறைமொழி
வியாழன், 30 ஜூலை 2026
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
எரே 18:1-6. மத் 13:47-53

கடவுளின் கைகளிலிருந்து

இன்றைய இறைவார்த்தைப் பகுதியில் மூன்று சொல்லோவியங்களைக் காண்கிறோம்: (அ) குயவனின் கையில் உள்ள கலம், (ஆ) பாத்திரத்துக்குள் எடுத்துக்கொள்ளப்படும் மீன், (இ) கருவூலத்திலிருந்து வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்.

குயவன் தன் கையில் உள்ள களிமண்ணை தான் விரும்புவதுபோலப் பயன்படுத்துகிறார். களிமண் குயவனின் விருப்பத்திற்குத் தன்னையே கையளிக்கிறது. அதுபோல, இஸ்ரயேல் மக்களும் ஆண்டவராகிய கடவுளின் விருப்பத்துக்குத் தங்களையே கையளிக்க வேண்டும்.

மீன்பிடிப்பவர் நல்ல மீன்களைப் பாத்திரத்துக்குள் வைத்துக்கொண்டு கெட்ட மீன்களை வெளியே எறிகிறார். மீன்களைத் தரம் பிரிப்பவர் கடவுளே.

வீட்டு உரிமையாளர் தம் இல்லத்தின் கருவறையில் பழையவற்றையும் – மூதாதையர் வழி வந்த சொத்துகள், புதியவற்றையும் – புதிதாகத் தான் சம்பாதித்தவை சேர்க்கிறார், விரும்பியபோது வெளியே எடுக்கிறார். விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட ஒருவரும் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டிலுமிருந்து செல்வங்களை வெளிக்கொணர வேண்டும். மத்தேயு நற்செய்தியாளர் தன்னையே இங்கே மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் எனவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளின் நிறைவே இயேசு என்று முன்மொழிவதுடன், அவருடைய போதனைகளையும் வல்ல செயல்களையும் புதியனவாகப் பதிவு செய்கிறார்.

ஆண்டவராகிய கடவுளின் கைகளிலிருந்து நாம் உருப்பெறுகிறோம் என்பதை நினைவில் கொண்டு, அவரின் திருவுளத்திற்கு நம்மையே கையளிப்போம். நம் கரங்களின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகளுக்கு ஒத்திருக்க முயற்சி செய்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment