இன்றைய இறைமொழி
வியாழன், 2 ஜூலை 2026
பொதுக்காலம் 13-ஆம் வாரம்
ஆமோ 7:10-17. மத் 9:1-8
துணிவோடிரு!
(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருளும்
பெத்தேலின் தலைமைக் குரு அமட்சியாவுக்கும் இறைவாக்கினர் ஆமோஸூக்கும் இடையே எழுந்த போராட்டத்தை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். தெற்கு யூதாவிலிருந்து வடக்கு இஸ்ரயேலுக்கு கிமு 750-இல் வருகிற இறைவாக்கினர் ஆமோஸ் வடக்கு இஸ்ரயேல் எதிர்கொள்ளப்போகிற அடிமைத்தனம் பற்றி எச்சரிக்கிறார். ஆனால், அமட்சியா ஆமோஸின் வார்த்தைகளைத் திரித்துக் கூறி அவருக்கு எதிராக அரசரையும் மக்களையும் கிளர்ந்தெழச் செய்கிறார்.
‘உன் பிழைப்பைத் தேடிக்கொள்’ – ஆமோஸ் அவருடைய பிழைப்புக்காக இறைவாக்கினர் தொழில் செய்வதாக நினைக்கிறார் அமட்சியா. ஆனால், ஆமோஸ் தான் அழைக்கப்பட்ட வரலாறை அவருக்கு எடுத்துச் சொல்கிறார்: ‘நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மேய்ப்பவன். காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக்கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்தார்.’
அமட்சியாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாத ஆமோஸ் அமட்சியா எதிர்கொள்ளும் தண்டனையையும் எடுத்துரைக்கிறார்.
தன் இறைவாக்குப் பணியைப் பற்றி மற்றவர்கள் குற்றம் சுமத்தினாலும் துணிவோடு இறைவாக்குப் பணி செய்கிறார் ஆமோஸ்.
(ஆ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருளும்
புறவினத்தார் வாழ்ந்த பகுதியிலிருந்து கரையைக் கடந்து மீண்டும் தம் சொந்த ஊர் செல்கிறார் இயேசு. அங்கே அவரிடம் கொண்டுவரப்படுகிற முடக்குவாதமுற்ற ஒருவருக்கு இயேசு நலம் தருகிறார். மாற்குவும் லூக்காவும் இந்த நிகழ்வில் ‘கூரையைப் பிரித்து அல்லது ஓடுகளைப் பிரித்து முடக்குவாதமுற்றவர் இறக்கப்படுவதாக’ எழுதுகிறார்கள். மத்தேயு நற்செய்தியாளர் இந்தக் குறிப்பைத் தவிர்க்கிறார். மத்தேயு நற்செய்தியில் ‘கூட்டம்’ என்பது சீடத்துவத்துக்குத் தடை அல்ல. மத்தேயு நற்செய்தி குழும நற்செய்தி என அழைக்கப்படுகிறது. குழுமம் அல்லது திருஅவை என்பது இயேசுவைக் கண்டுகொள்ளக் கூடிய தளமாக இருக்கிறது.
‘பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ – இயேசுவின் சமகாலத்தில் நோய் என்பது பாவத்தின் விளைவு என்று கருதப்பட்டது. பாவத்தைக் களைவதன் வழியாக நோயின் ஊற்றைக் களைய முடியும்.
‘எது எளிது? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா, எழுந்து நட என்பதா?’ – பாவங்கள் மன்னிப்பு என்பது அகம் சார்ந்த செயல். எழுந்து நடத்தல் புறச் செயல். அகச் செயலை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. புறச் செயலை மற்றவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.
‘மக்கள் கூட்டம் அச்சமுற்றுப் போற்றிப் புகழ்ந்தார்கள்’ – இயேசுவை மனிதர் என்று மக்கள் நினைக்கிறார்கள். மனிதருக்கு கடவுள் வழங்கிய அதிகாரத்தைப் பற்றி அவர்கள் வியக்கிறார்கள்.
(இ) வாழ்வியல் பாடங்கள்
நற்செய்தி வாசகத்தில், ‘துணிவோடிரும்!’ என்று இயேசு முடக்குவாதமுற்ற நபரிடம் கூறுகிறார். மற்றவர்களுடைய முணுமுணுத்தலின் நடுவிலும் இயேசு துணிவோடிருக்கிறார். முதல் வாசகத்தில், தன் இறைவாக்கினர் பணி எதிர்க்கப்பட்டபோதும் துணிவோடிருக்கிறார் ஆமோஸ்.
சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை, தாங்கள் ஏற்றுக்கொண்ட ஒன்றை மற்றவர்கள் கலைக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனிதர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
ஆனால், இறைமனிதர் கடவுளில் வேரூன்றி நிற்கும்போது அவர் துணிச்சல் பெறுகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment