இன்றைய இறைமொழி
செவ்வாய், 30 ஜூன் 2026
பொதுக்காலம் 13-ஆம் வாரம்
ஆமோ 3:1-8, 4:11-12. மத் 8:23-27
நம்பிக்கை குன்றியவர்களே!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கலிலேயக் கடலில் எழுந்த புயலை அடக்குகிறார். இயேசு நோய்களின்மேலும் பேய்களின்மேலும் அதிகாரம் கொண்டிருந்தார் என்று எடுத்துரைத்த மத்தேயு, இயற்கையின்மேல் இயேசு கொண்டிருந்த அதிகாரத்தை இந்த நிகழ்வு வழியாக முன்மொழிகிறார். கலிலேயக் கடல் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 700 மீட்டர் தாழ்வாக அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் அமைந்துள்ள மலைகளின் வழியே வருகிற காற்று ஏரிக்கு மேல் சுழலும்போது (குடைபாதை விளைவு – ஃபனல் இஃபெக்ட்) ஏரியில் புயல் வீசுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் சிலர் இக்கடலில் தொழில் செய்தவர்கள். மற்றவர்கள் இக்கடலுக்கு அறிமுகமானவர்கள். இயேசுவின் சமகாலத்து மீன்பிடிக் கப்பல்கள் சிறியவை, மரப்பலகைகளால் ஆனவை. புயலுக்குத் தாக்குப்பிடிக்க இயலாதவை.
இயேசு படகில் தூங்கிக்கொண்டிருக்கிறார். இயேசுவின் தூக்கம் என்பதை இறை அமைதி அல்லது இறை வெறுமை என்று புரிந்துகொள்ளலாம். இயேசுவின் விண்ணேற்றத்துக்குப் பின்னர் மத்தேயுவின் குழுமம் பல பிரச்சினைகளைச் சந்தித்தது. இயேசு இல்லாதபோது தங்கள் பிரச்சினைகளை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துவதாக அமைகிறது இந்த வல்ல செயல்.
‘ஆண்டவரே, காப்பாற்றும். நாங்கள் சாகப் போகிறோம்’ என்று சீடர்கள் இயேசுவிடம் சொல்லி எழுப்புகிறார்கள். இதுவரை நோயுற்றவர்களுக்கும் பேய் பிடித்தவர்களுக்கும் வாழ்வு தந்தவரிடம், ‘நாங்கள் சாகப்போகிறோம்!’ என்கிறார்கள்.
தூக்கத்திலிருந்து எழுகிற இயேசு கடலைக் கடிந்துகொள்வதற்கு முன் சீடர்களைக் கடிந்து கொள்கிறார்: ‘நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?’ சீடர்களின் அச்சம் அவர்களுடைய நம்பிக்கையைக் குலைக்கிறது. ‘நம்பிக்கை குன்றியவர்களே’ என்னும் சொல்லாடலை இயேசு இதற்கு முன் ‘கவலை வேண்டாம்’ (காண். மத் 6) என்னும் அறிவுரைப் பகுதியில் பயன்படுத்துகிறார். இன்று ‘அச்சம் வேண்டாம்’ என்கிறார்.
‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?’ என்னும் கேள்வியுடன் நிறைவு பெறுகிறது நற்செய்தி வாசகம். பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் கடலின்மேல் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார் (காண். விப 14-15, திபா 107, யோனா 1).
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆமோஸின் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெற்கு யூதாவில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆமோஸை இறைவாக்கினராக வடக்கு இஸ்ரயேலுக்கு அனுப்பிகிறார் கடவுள் (கிமு 8-ஆம் நூற்றாண்டு). இரண்டாம் எரோபோவாம் காலத்தில் நிலவிய அரசியல் புயலுக்கு நடுவே இறைவாக்குரைக்கிறார் ஆமோஸ்.
இஸ்ரயேல் மக்களுடைய தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையை அவர்களுக்கு நினைவுறுத்தி அதிலிருந்து அவர்கள் தவறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார். ‘காரணம்-காரியம்’ எடுத்துரைக்கும் சில தொடர் கேள்விகளை முன்மொழிந்து, இது நடந்தால் அது நடக்கும் – அதுபோல, இஸ்ரயேல் மக்களின் தீமை கடவுளுடைய கோபத்தை அவர்கள்மேல் வருவிக்கும் என்கிறார் ஆமோஸ்.
இன்று நம் வாழ்வில் கடவுளின் வெறுமையை உணர்கிறோமா?
வாழ்வில் புயல் எழும்போது நம் அவற்றின்மேல் கண்களைப் பதிக்கிறோமா, அல்லது கடவுளின்மேல் கண்களைப் பதிக்கிறோமா?
நம் காரணகர்த்தர் இயேசுவின் உடனிருப்பில் புயல் அடங்குகிறது. அமைதி பிறக்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment