இன்றைய இறைமொழி
புதன், 1 ஜூலை 2026
பொதுக்காலம் 13-ஆம் வாரம்
ஆமோ 5:14-15, 21-24. மத் 8:28-34
நன்மையை நாடுங்கள்
(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருளும்
ஆமோஸ் இறைவாக்கினர் நூலின் மையப்பகுதியாக இன்றைய வாசகம் அமைந்துள்ளது. வடக்கு இஸ்ரயேலில் விளங்கிய சமய வெளிவேடத்தையும் சமூக அநீதியையும் கண்டிக்கிறார் ஆமோஸ். வெற்று சமய வழிபாடுகளை வெறுக்கிற கடவுள் மேன்மையான சமூக நீதியையும் அறநெறி ஒழுக்கத்தையும் விரும்புகிறார் என்பது இறைவாக்கினர் தரும் பாடம்.
வடக்கே இரண்டாம் எரோபோவாமும் தெற்கே உஸ்ஸியாவும் ஆட்சி செய்துகொண்டிருந்த கிமு 8-அம் நூற்றாண்டில் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைக்கிறார் ஆமோஸ். தங்கள் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியும் படைபல வெற்றியும் கடவுள் தங்கள்மேல் அன்புகூர்கிறார் என்பதற்கான சான்று என்று நினைத்த மேட்டுக்குடியினர் ஏழைகளைச் சுரண்டினர், அறநெறி தவறினர்.
‘நன்மையை நாடுங்கள் … தீமையைத் தேடாதீர்கள்’ என்கிறார் இறைவாக்கினர். வெற்று சமயப் பின்பற்றுதலை விட்டவிடவும் அறநெறியைப் பின்பற்றவும் அழைக்கிறார். கடவுளால் தாங்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் என்னும் அடையாளம் மட்டுமே அவர்களுக்கு வாழ்வு தராது.
‘வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்’. பண்டைய அண்மைக் கிழக்கில், நகர வாயில்கள் நீதிமன்றங்களாகவும் செயல்பட்டன. ஒருவர் மற்றவருக்கு எதிரான வழக்குகளும் விவாதங்களும் அங்கே விசாரிக்கப்பட்டன. ஆனால், செல்வர்கள் கையூட்டு கொடுத்து நீதியை விலைக்கு வாங்கினார்கள்.
‘உங்கள் திருவிழாக்களை நான் வெறுக்கிறேன்’. வறியோருக்கும் வலுவற்றோருக்கும் எதிராக அநீதி இழைத்துவிட்டு, தாங்கள் கொண்டாடும் விழாக்களால் கடவுளால் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்பினார்கள் மக்கள். கடவுளுக்கும் கையூட்டு கொடுக்கிற முயற்சிகளாக வழிபாடுகள் அமைந்தன.
‘நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!’. ஒருபோகு இணைவு அணியாக அமைந்துள்ளது இச்சொற்றொடர். அதாவது, முதல் வாக்கியத்தில் முன்மொழியப்பட்டவை இரண்டாம் வாக்கியத்தில் வேறு சொற்களில் முன்மொழியப்படுகின்றன. ஆமோஸ் இறைவாக்கினரிலிருந்து அதிகமாக மேற்கோள்காட்டப்படும் சொற்றொடர் இது. பாலைவனப் பகுதியில் ஓடுகிற ஆறு வேகமாகக் காய்ந்துவிடும். நீதியும் நேர்மையும் மிகுந்து விளங்க வேண்டும் என்பது இறைவாக்கினரின் அழைப்பு.
(ஆ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருளும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேய்பிடித்திருந்த இருவருக்கு நலம் தருகிறார். பேய்கள் பன்றிக்கூட்டத்துக்குள் நுழைகின்றன. இயேசு புயலை அடக்குகிற நிகழ்வைத் தொடர்ந்து இந்த நிகழ்வைப் பதிவு செய்கிறார் மத்தேயு. இயேசுவின் சமகாலத்தில் ‘பேய்கள் கடலில் வாழ்ந்தன’ என மக்கள் நினைத்தார்கள். கடல்மேல் ஆற்றல் கொண்ட இயேசு பேய்கள்மேலும் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். தங்கள்மேல் பேய்கள் இறங்கியவுடன் பன்றிகள் நீருக்குள் குதிக்கின்றன.
‘கதரேனர் வாழ்ந்த பகுதி.’ கலிலேயக் கடலின் கிழக்குப் பகுதி இது. தெக்கப்போலி (பத்து நகரங்கள்) பகுதியின் ஓர் ஊர். இங்கே பிறவினத்தார் அதிகமாக வாழ்ந்தார்கள். லேவி 11:7-இன் படி பன்றிகள் தீட்டான விலங்குகளாகக் கருதப்பட்டன. இயேசு தாமாகவே விரும்பி பிறவினத்தாரின் வாழ்விடத்துக்குள் நுழைகிறார். கலாச்சார வரையறையை உடைக்கிறார்..
‘கல்லறைகளில் வாழ்ந்த இருவர்.’ பேய் பிடித்திருந்த இரண்டு நபர்களும் கல்லறைகளில் வாழ்ந்தார்கள். ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டார்கள் அவர்கள். கல்லறைகள் தீட்டானவையாகவும் கருதப்பட்டன (காண். எண் 19:11).
‘தீய ஆவி … தீட்டான கல்லறை … தீட்டான மக்கள் … தீட்டான பன்றிகள்’ – ஆன்மிக மற்றும் வழிபாடு சார் தீட்டுகளை அடுக்குகிறார் மத்தேயு. இருளும் குழப்பமும் கிறிஸ்துவின் ஆற்றலை வெற்றிகொள்ள முடியாது என்பது நற்செய்தியாளர் தருகிற பாடம்.
‘இறைமகனே!’ பேய்களும் இயேசுவின் தான்மையை அடையாளம் கண்டுகொள்கின்றன. ‘காற்றையும் கடலையும் கடிந்துரைக்கும் இவர் யாரோ?’ என்று சீடர்கள் இயேசுவைப் பற்றிக் குழப்பம் கொண்டார்கள். மக்கள் கூட்டத்தாரும் சமயத் தலைவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால், இங்கே பேய்கள் இயேசுவை ‘இறைமகன்’ என்று அறிக்கையிடுகின்றன.
‘குறித்த காலம் வருமுன்னே’. முதல் நூற்றாண்டு யூத இறையியலின்படி, கடவுள் பேய்களுக்கும் அவற்றின் தூதர்களுக்கும் சில ஆண்டுகள் சுதந்திரம் கொடுப்பார், பின் அவர் குறுக்கிட்டு அவர்களைத் தண்டிப்பார் என்று நம்பினார்கள். இயேசுவின் வருகை கடவுள் தீமையை அழிக்கும் காலத்தைக் குறிக்கிறது.
இருவரா ஒருவரா? பேய்பிடித்திருந்த இருவர் எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. மாற்குவும் லூக்காவும் ஒருவர் என்று பதிவு செய்கிறார்கள். பார்வையற்ற நபர் நிகழ்விலும் இருவர் என மாற்றுகிறார் மத்தேயு (மத் 20:30). இருவர் என்பது பழைய ஏற்பாட்டுப் பின்புலத்தில் நிகழ்வை உறுதி செய்யும் இலக்கியக் கூறாக அமைகிறது.
இயேசுவின் அதிகாரம் – மாற்கு நிகழ்வை நீண்ட கதையாடலாக அமைக்கிறார். மத்தேயு மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்து, இயேசு பேய்கள்மேல் கொண்டிருந்த அதிகாரத்தை முதன்மைப்படுத்துகிறார்.
பொருளாதார இழப்பா? கடவுளின் உடனிருப்பா? தங்கள் நடுவே கடவுளின் வல்லமை செயல்படுகிறது என்று மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, தங்களுக்கு நிகழ்ந்த பொருளாதார இழப்பு – பன்றிகள் இழப்பு – குறித்து கவலை கொள்கிறார்கள் மக்கள். இயேசுவை தங்களிடமிருந்து அகலுமாறு வேண்டுகிறார்கள்.
பன்றிகள் பேய்களுக்குள் நுழைவதற்கு இயேசு ஏன் அனுமதித்தார்? பண்டைக்காலத்தில் பேய் ஓட்டுதல்களை மக்கள் சந்தேகப்பார்வையோடு பார்த்தார்கள். அவர்களுக்கான நேரடிச் சான்றாக பன்றிகளின் இறப்பு அமைகின்றது. அலகை தங்கள் இயல்பிலேயே மற்றவர்களுக்கு அழிவையும் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இரண்டு மனிதர்களுக்கு அழிவை ஏற்படுத்திய அலகை பன்றிகளுக்கு அழிவை ஏற்படுத்துகிறது. தீய ஆவிகள் தீட்டான பன்றிகளுக்குள் நுழைந்து அவற்றுக்குள்ள வரையறையான கடலுக்குள் வீழ்கின்றன. நிலமும் மக்களும் தூய்மை அடைகிறார்கள்.
(இ) வாழ்வியல் அழைப்புகள்
நம் வாழ்வில் நாம் கொண்டிருக்கும் சமய வெளிவேடத்தையும் அறநெறிப் பிறழ்வுகளையும் எண்ணிப் பார்த்து அவற்றைக் களைய முயற்சி செய்வோம். நம் குடும்பத்திலும் பணியிடத்திலும் நீதியுடனும் நேர்மையுடனும் செயல்படுவோம்.
நம் நடுவே உள்ள தீமையின் ஆதிக்கத்தை அடையாளம் காண்போம். இயேசு நம் நடுவே வந்து நமக்கு நலம் தருகிறார்.
நோயுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறன்கொண்டோர் ஆகிய அனைவருடைய குடும்பங்களை நினைவுகூர்வோம். பல நேரங்களில் இவர்களை நாம் ஒதுக்கி வைக்கிறோம். பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். அனைவரிலும் குடிகொள்வது கடவுளின் ஆவியே.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment