இன்றைய இறைமொழி
ஞாயிறு, 28 ஜூன் 2026
பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு
2 அர 4:8-11, 14-16. உரோ 6:3-4, 8-11. மத் 10:37-42
கனிவைப் பெற்றெடுக்கும் கனிவு
‘நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுக்கிறோம்’ என்பது நாம் அறிந்த வாழ்வியல் பாடம். சில நேரங்களில் நாம் செய்கிற நன்மையைப் பொருட்படுத்தாமல் தீமை நமக்கு நேர்ந்தாலும், பெரும்பாலும் நாம் காட்டுகிற கனிவும் பரிவும் நம்மிடம் பன்மடங்கு திரும்பி வருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், சூனேம் நாட்டுப் பணக்காரப் பெண் ஒருவர் இறைவாக்கினர் எலிசாவுக்குக் காட்டிய கனிவுச் செயலை வாசிக்கிறோம். இறைவாக்குப் பணியின் தொடக்கத்தில் இறைவாக்கினர் எலியா கோபம்கொள்பவராக, பழிதீர்ப்பவராக இருக்கிறார். அவரின் இக்குணத்தை ஒரு பெண்ணின் கனிவால் மாற்றுகிறார் கடவுள். பெயரில்லாத இப்பணக்காரப் பெண் இறைவாக்கினர் எலிசாவை, ‘அவர் ஆண்டவரின் அடியவர் புனிதர்’ என்று அறிந்துகொள்கிறார். எலிசாவுக்கு உணவு கொடுப்பதோடு தம் இல்லத்தில் அவர் தங்குவதற்காக ஓர் அறையையும் தயார் செய்கிறார். இவருடைய விருந்தோம்பல் என்னும் கனிவுச் செயல் அவர் இறைவாக்கினரை ஆண்டவரின் மனிதர் என்று அறிந்துகொள்வதில் தொடங்குகிறது.
தொடர்ந்து, தனக்குக் கனிவு காட்டிய அப்பெண்ணுக்குக் கைம்மாறு செய்கிறார் எலிசா. குழந்தையின்மை அவருடைய குறையைத் தீர்த்து வைக்கிறார். ‘அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்’ என மொழிகிறார். பெண் காட்டிய கனிவும் பரிவும் அவருக்கே திரும்பக் கிடைக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் திருத்தூது உரையை வாசிக்கிறோம். ஆயனில்லா ஆடுகள்போல மக்கள் இருப்பதைக் கண்ட இயேசு அவர்கள்மேல் பரிவு கொண்டு தம் சீடர்களை ஆயர்களாக அனுப்புகிறார் இயேசு. அனுப்பப்பட்டவர்கள் கொள்ள வேண்டிய துணிவையும் மனத்திடத்தையும் எடுத்துரைத்த இயேசு, அனுப்பப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதைப் பற்றி இன்றைய வாசகத்தில் கூறுகிறார்.
வாசகத்தின் முதல் பகுதியில், சிலுவை சுமத்தலை சீடத்துவத்தின் பணியாகக் காட்டுகிறார் இயேசு. இதற்கு முந்தைய பாடத்தோடு இணைத்து, ‘சிலுவை’ என்பதை நிராகரிப்பு என எடுக்கலாம். அல்லது தொடர்நது வரக்கூடிய பாடத்தோடு இணைத்து, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் சிலுவையை ஏற்றுக்கொளள வேண்டும் என்பது இயேசு மொழியும் பாடம் என எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து, ஏற்றுக்கொள்தலையும் அதற்குத் தரப்படுகிற கைம்மாற்றையும் எடுத்துரைக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், கடவுள் நமக்குக் காட்டிய கனிவைப் பற்றி எழுதுகிறார் பவுல். ஒரு மனிதர் வழியாக – ஆதாம் வழியாக – வந்த பாவத்தால் அழிவுக்குரிய நிலையில் இருக்கும் நம்மை விடுவித்து வாழ்வைத் தருகிறார் கடவுள். திருமுழுக்கின் வழியாக இது நடந்தேறுகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், விருந்தோம்பல், ஏற்றுக்கொள்தல், சிலுவை ஏற்றல் போன்ற கருத்துருக்கள் பேசப்பட்டாலும், அடிப்படையில் நம்மிடம் தேவையான மனப்பாங்கு மாற்றத்தை இங்கே காண்கிறோம்.
‘அவர் ஆண்டவரின் அடியவர்’ என்று அந்தப் பெண் எலிசாவைக் கண்டுகொண்டதில்தான் கனிவு தொடங்குகிறது. நமக்கு அடுத்திருப்பவர் ஆண்டவரின் அடியவர் என்று நாம் நினைக்கத் தொடங்கும்போது, அவரைப் பற்றிய முற்சார்பு எண்ணங்கள் மறைகின்றன, அவர்மேல் கொள்ளும் கோபம், ஒப்பீடு என அனைத்தும் மறைகிறது.
இந்த மனநிலையை நாம் பெற வேண்டுமெனில், ‘நான் ஆண்டவரின் அடியவர்’ என்று கடவுளுக்கும் நமக்குமான நெருக்கத்தை நாம் உணர வேண்டும். இதையே பவுல், ‘கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்’ என்கிறார்.
‘நான் ஆண்டவரின் அடியவர்’ என்ற நம் மேன்மையை அறியவும், ஒருவர் மற்றவரை ஆண்டவரின் அடியவர் என்று அடையாளம் காணவும் நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
சூனேம் நாட்டுப் பெண் தன்னிடம் உள்ள பணத்தையும் வளத்தையும் மற்றவரின் நலனுக்காகச் செலவிடத் துணிகிறார். எந்தவொரு கைம்மாறும் கருதாமல் அவர் செய்த கனிவுச் செயல், மிகப்பெரிய கைம்மாற்றைப் பெற்றுத் தருகிறது.
கனிவு காட்டுவோம்! கனிவு கிடைக்கும் என்பதற்காக அல்ல, மாறாக, அடுத்தவர் கனிவுக்குரியவர் என்பதால்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment