இன்றைய இறைமொழி
சனி, 27 ஜூன் 2026
பொதுக்காலம் 12-ஆம் வாரம்
புல 2:2, 10-14, 18-19. மத் 8:5-17
ஒரு வார்த்தை மட்டும்!
தொழுநோயாளர் ஒருவருக்கு இயேசு நலம் தரும் நிகழ்வைத் தொடர்ந்து இயேசு நிகழ்த்திய மற்ற வல்ல செயல்களைப் பதிவு செய்கிறார் மத்தேயு. தொழுநோயாளர் நலம் பெறும் நிகழ்வில் இயேசு தம் கைகளால் அவரைத் தொட்டு அவருக்கு நலம் தருகிறார். தூரத்தில் நின்றே தம் வாய்ச்சொல் ஒன்றால் இயேசு நலம் தருவதை இங்கே நாம் வாசிக்கிறோம். இயேசுவிடம் வருகிற நூற்றுவர் தலைவர் ஒருவர் தம்முடைய மகன் நலம் பெற வேண்டுகிறார். ‘ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்!’ என்னும் அவருடைய நம்பிக்கைநிறை மனப்பாங்கு நமக்கு வியப்பளிக்கிறது. இயேசுவும் அவருடைய நம்பிக்கையைப் பாராட்டுகிறார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து இயேசு பேதுருவுடைய மாமியாரின் காய்ச்சலை நீக்குகிறார். நகரில் பேய்பிடித்திருந்த பலருக்கு நலம் தருகிறார்.
இயேசு நோய்கள்மேலும் தீய ஆவிகள்மேலும் ஆற்றல் கொண்டிருந்தார் என்பதை எடுத்துரைக்கிற மத்தேயு, இறுதியில், இயேசுவில் இறைவாக்கினர் எசாயாவின் சொற்கள் நிறைவேறுகின்றன என்கிறார்: ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.’ இயேசு இறைவாக்குகளின் நிறைவு என்று மலைப்பொழிவில் கூறியதை இங்கே உண்மையாக்குகிறார்.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்வது என்ன?
இயேசுவின்மேல் நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை நம் நலம் பெறுதலுக்கு உதவுகிறது.
இயேசுவிடம் வருகிற நபர்கள் ஏற்கெனவே தாங்கள் கேட்டது நிறைவேறிவிட்டதாக உணர்கிறார்கள். இப்படித்தான் வல்ல செயல்கள் நம் வாழ்விலும் நடந்தேறுகின்றன.
யூதா நாட்டு மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிகழ்வின் வலியை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.
‘ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்!’ என்னும் நூற்றுவர் தலைவரின் சொற்களை நாம் இன்றும் திருப்பலியில் சொல்கிறோம். நம் நம்பிக்கை, சரணாகதி, விருப்பம் அனைத்தையும் எதிரொலிக்கின்றன இச்சொற்கள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment