இன்றைய இறைமொழி. சனி, 8 ஆகஸ்ட் 2026. கடுகளவு நம்பிக்கை

இன்றைய இறைமொழி
சனி, 8 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 18-ஆம் வாரம்
அப 1:12-2:4. மத் 17:14-20

கடுகளவு நம்பிக்கை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு பேரின் கையறுநிலையை வாசிக்கிறோம்: முதலில் ஓர் அப்பா. இவருடைய மகன் வலிப்பு நோயால் துன்புற்றார். இரண்டாவது சீடர்கள். வலிப்பு நோயால் துன்புற்ற மகனுக்கு நலம் தர முயற்சி செய்கிறார்கள். ஆனால், இயலவில்லை. சீடர்களுடைய நாள் செயல்பாடுகளால் நிறைந்திருந்தது. இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்திந்தது.

இவ்விருவருக்குமான பாடமாக இயேசு முன்மொழிவது நம்பிக்கை.

‘உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் பெருமலையை அகற்றிவிடலாம்.’

இங்கே இரண்டு இலக்கியக் கூறுகள் இருக்கின்றன: ஒன்று, முரண் – அதாவது, சிறியதை வைத்துப் பெரிய செயலைச் செய்தல். இரண்டு, மிகைப்படுத்துதல் – யாரும் மலையை நகற்றவோ இயலாது. இயலாத ஒரு செயலும் செய்வதற்கு இயலும் என மொழிவது.

நம்பிக்கை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? நம்பிக்கை என்பது நேர்முகமான தற்பேச்சா? இல்லை.

நம்பிக்கை என்றால் பற்றுறுதி. நம் வலுவின்மையில் கடவுளைப் பற்றிக்கொள்தல்.

நம்பிக்கை என்றால் சார்புநிலை. கடவுளுக்கே ஆற்றல் உள்ளது என்று அவரிடம் சரணடைவது.

இன்றைய முதல் வாசகத்தில், ‘நேர்மையுடைவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்’ என எழுதுகிறார் அபக்கூக்கு. இதையே பவுலும் உரோமையருக்கு எழுதுகிற திருமடலில் பயன்படுத்துகிறார்.

‘நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’ என்று ‘நம்பிக்கையை’ வரையறுக்கிறது விவிலியம் (எபி 11:1).

நம் கையறுநிலையில் இறைவனுடைய கரங்களை இறுக்கிப் பற்றிக்கொள்வதும், துணிச்சலுடன் நம் கைகளைத் திறந்து பணியாற்றுவதுமே நம்பிக்கை.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment